February 23, 2014

Sakkiya Nayanar - Nayanmar 33

Sakkiya Nayanar 

The Story of Sakkiya Nayanar 

Sakkiya Nayanar, one of the 63 saints, was fromTiru Changa Mangai, a village in Tamil Nadu.  He was born in an aristocratic agricultural family.  He was sent to Kanchipuram to study Buddhism and realize the Truth.  He lived with Buddhist monks, in the university* in Kanchipuram.

Soon he found out that Buddhistic principles did not take him anywhere near the Truth.  Then he studied secretly Saiva Siddhantam and found that Siva Jnana could take him to the Truth.

He went every day to a street temple before food, and flung stones towards Siva Linga as if these were flowers!  Because of his devout intention, Siva accepted these stones as flowers!  Soon, the monks understood the ways of Sakkiya Nayanar and rushed towards him with swords to kill him.  Sakkiya Nayanar clung to Siva Linga and prayed intently Siva and He came with his bhuta ganas, fought the monks and took him to His Abode!

One later devotee later sang like this:

O Siva, one fellow flung KAL at you, (KAL - Stones - Sakkiya Nayanar.)

Another fellow used to VIL at your, (VIL - Bow and arrow - Arjuna)

One another, flung SOL at you, (SOL - angry abusive words - Sundaramoorthy.)

A fouth fellow used PAL for your worship (PAL - teeth to bite the animal flesh - Hunter Kannappa)

O!  You graced them, no doubt, people call you a mad cap!)
(Source:  Periya Puranam - Tamil Verses - Saiva Siddhanta Book Publishing House, Chennai.)


சாக்கிய நாயனார்
-Temple images

திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார். சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார். காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் செயல்படுத்த முனைந்தார். அடிகளார் காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களுடன் பழகினார். நூல்கள் பல ஆராய்ந்தார். ஆனால் நாயனாரால் நல்ல வகையான நெறியைக் காண முடியவில்லை. அதனால் அடிகளார் மேலும் பற்பல சமய நூல்களைக் கற்கலானார். இறுதியாக சைவ சமய நூல்களையும் கற்றார். அதன் பிறகு அடிகளார் பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவநெறியே  சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற உண்மையைக் கற்றுத் தெரிந்துகொண்டார்! அதனால் அவர் உள்ளத் தெளிவு பெற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தனைப் பணிந்து தூய சிவத்தைச் சித்தத்திலிருத்தி சிந்தை குளிர்ந்தார். சாக்கியர் கோலத்திலே இருந்தமையால் தம்மைப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்தை அகத்திலேயே எண்ணி ஒழுகிய சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூசையும் நடத்தி வந்தார். தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் நாயனார் பரந்த நிலவெளி வழியாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும் இன்றிக் கிடப்பதைக் கண்டு உள்ளமும் உடலும் உருகினார். இத்திருத்தொண்டர் சிவலிங்கத்தைத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மகிழத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் அந்த இடத்தில் நீரேது? மலரேது? நல்ல மனம் மட்டும்தானே இருந்தது! சாக்கிய நாயனார் அன்பின் பெருக்கால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே சிவலிங்கத்தின் மீது போட்டார். அன்பினால் எதற்கும் கட்டுண்ட இறைவன், சாக்கிய நாயனார் எறிந்ததை அன்புக் குழவியின் தளிர்க்கரம் பற்றித் தழுவுவது போன்ற இன்பப் பெருக்காக எண்ணினார்.

இல்லாவிடில் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிலையில் தேவியுடன் கொலு வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவடித் தாள்களில் பொன் மலரென விழுமா என்ன? சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு அரனார் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். சாக்கிய நாயனார், அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எண்ணி எல்லையில்லா மகிழ்வு பூண்டார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார்! சிவலிங்கத்தைக் கண்டு, உவகை பூண்டார். அன்பினால் கல்லெறிந்து வழிபட்ட செயலை எண்ணினார். தமக்கு இத்தகைய மனப் பக்குவத்தைத் தந்தருளியது எம்பெருமானின் திருவருட் செயலே என்று உணர்ந்தார். சாக்கியர் வேடத்தில் இருக்கும் நான் மலரால் சிவனாரை வழிபடுவதைப் பிறர் காணில் ஏசுவர். ஆனால், கல்லால் எறிவதை எவராகிலும் காண்கின், வெறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு செய்கிறார் என்று எண்ணுவர். இதுவும் அரனாரின் அருள் மொழியே அன்றி, வேறொன்றுமில்லை என்று தமக்குள் எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் சென்று  உண்ணலானார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் நடத்தி வந்தார்.ஒருநாள் சாக்கிய நாயனார் அரனார் மீது கொண்டுள்ள பக்திப் பெருக்கால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்த நிலையில் திருவமுது செய்ய அமர்ந்து விட்டார். சட்டென்று எம்பெருமான் நினைவு கொண்ட சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் போனார். எம்பெருமானே! இதென்ன சோதனை! எவ்வளவு தவறான செயலைப் புரிந்துவிட்டேன்! அண்ணலே ஏழையின் பிழை பொறுத்தருள்வீரே! என்று புலம்பி உள்ளம் உருகினார். எழுந்தோடினார்! பரந்த நிலவெளியை அடைந்து சிவலிங்கப் பெருமான் மீது அன்பு மேலிட கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி எறிந்தார். அப்பொழுது சாக்கிய நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது எழுந்தருளினார். சாக்கிய நாயனார் கரம் குவித்து நிலந்தனில் வீழ்ந்து பணிந்து, எம்பெருமானை வணங்கினார். இறைவன் சாக்கிய நாயனாருக்குப் பிறவாப் பேரின்பத்தைக் கொடுத்தருளினார்.


கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்.
 - திருநாவுக்கரசர்

கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கிய(ன்)னார்
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார்
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடிக்
கொல்லி ஆம் பண் உகந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்
விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி
எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை
உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே.

சாக்கியனார் - 


சாலினி -உயிர்கள் யாவற்றிலும் இறைவன் இருக்கின்றான். அவன் ஒருவனே. அவன் எல்லோருக்கும் பொதுவானவன். இதுவே பண்டைய தமிழர் எமக்கு தந்து சென்றுள்ள சமயக் கொள்கை. சாதி, மத வேறுபாடு இல்லாத ஒரு தனிப்பெரும் மதமாக தமிழர் மதம் நின்ற போதே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’என அவர்களால் முழங்க முடிந்தது.
அந்த முழக்கத்தில் இருந்து முகிழ்ந்ததாலே, சைவ சமயத்திலுள்ள திருத்தொண்டர் புராணம் சாதி, மத வேறுபாடில்லாத ஓர் ஒருமைப்பாட்டைக் காட்டுகிறது. அதனாலேயே சைவசமயம் ஒரு பௌத்தமதப் பிக்குவை அறுபத்துமூண்று நாயன்மார்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டும் உள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டவர் கடவுள் என்பதைக் காட்டுவதே சாக்கியனார் வரலாறு.    காவியுடை அணிந்த பௌத்தபிக்கு, அதுவும் வேளை தவறாது சிவலிங்கத்தை கல்லால் அடித்தார். அவருக்கும் சிவன் அருளினார். இதை பல தமிழ்ச் சைவச்சான்றோர்கள் விதந்து உரைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் தெற்கே இருக்கும் காலடி என்ற ஊரிலிருந்து எட்டு வயது சிறுவன் புறப்பட்டான்.  வடஇந்தியாவரை காலால் நடந்து சென்று இந்திய மதங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தான். அந்த எட்டு வயதுச் சிறுவனே ஆதிசங்கரர். அத்தகைய ஆதிசங்கரரே கடவுளின் அருளைப்பெற வழி இருக்கிறதா எனத்தடுமாறி, நினைப்பதாலும் தவத்தாலும் பக்திப் பாடல்களைப் பாடுவதாலும் உன்னை அடைய முடியுமா? வில்லால் அடித்தவனுக்கும் (அருச்சுனன்) கல்லால் எறிந்தவனுக்கும் (சாக்கியனார்) அருள் புரிந்தாயே! நான் என்ன செய்தால் உன்னை அடையலாம் எனக் கேட்டதை சிவானந்தலகரி சொல்கிறது.

உழவர்களின் புகழை
“மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை"

எனப்பாடிய கம்பர் கூட
“எச்சிற்கையால் கல்லெறிந்த கை
சங்கமங்கை சாக்கியனார் கை"   - (திருக்கை வழக்கம்: 5)
என்று சாக்கியனார் கையை பதிவு செய்துவைத்துள்ளார்.

ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்கும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கும் இடையே வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரும்
“கல்லினால் எறிந்து கஞ்சிதாமுணுஞ் சாக்கியனார்
நெல்லினார் சோறுனாமே நீள்விசும்பு ஆளவைத்தார்"    -(ப. திருமுறை: 4: 49: 6)
என்று தமது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே சாக்கியனார் எழாம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்பது தெளிவாகின்றது.

சாக்கியனார் சங்கைமங்கை எனும் ஊரில் உழவர் குடியில் பிறந்தார். காஞ்சிபுரத்தில் கல்வி கற்றார். அங்கே பௌத்தமத சங்கத்தாருடன் சேர்ந்து பழகியதால் புத்த பிக்கு ஆனார். இவர் காலத்தில் பௌத்தமதமே காஞ்சிபுரப் பகுதியில் முக்கிய மதமாக இருந்திருக்க வேண்டும். அதனால் யாரும் கவனிக்காதிருந்த சிவலிங்கத்தை தெருவிற்கிடந்த செங்கற் சல்லியால் (உடைந்த செங்கற் துண்டுகள்) அடித்து தனது சைவசமய வெறுப்பைக் காட்டினார். பின்னர்  ஒவ்வொரு நாளும் சிவலிங்கத்தை கல்லால் அடித்த பின்பே உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டார்.

தேவாரங்களை தொகுத்து எமக்கு அளித்த நம்பியாண்டார் நம்பியும் சாக்கியனார் செயலை
“திகழ்தரு மேனியில் செங்கல் எறிந்து சிவபுரத்து
புகழ்தரப் புக்கவன் ஊர் சங்கமங்கை புவனியிலே“   - (ப.திருமுறை: 11)

என திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார். சாக்கியனார் தமது ஆத்மாவின் தேடலால் சைவநெறி நல்ல நெறி எனக்கண்டார். தமது பௌத்தமதச் சின்னங்களை அணிந்து கொண்டே சிவனை நினைவாலே சுவைக்கத் தொடங்கினார். அதனை பட்டினத்தடிகள்

“கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்னினைந்து எறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள் பிழைத்தின்றே“- (திருவிடை மருதூர் மும்மணிக் கோவை: 25) எனக்கூறியுள்ளார்.

ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று பிச்சாபாத்திரத்தில் பிச்சை எடுத்து உண்பதே அந்நாளைய பௌத்த பிக்குகளின் வழக்கம். ஒரு நாள் பிச்சை எடுக்க பல இடங்களில் அலைந்து திரிந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. நேரம் செல்லச்செல்ல பசியோ வாட்டி வதைக்க மேலும் சில வீடுகளுக்குச் சென்றார். ஒரு வீட்டில் கஞ்சி கிடைத்தது. வெயிலும் பசியும் வாட்டியதால் கஞ்சியை கையால் அள்ளிப் பருகத் தொடங்கினார். சிவலிங்கத்திற்கு கல்லெறியாது கஞ்சி பருகத் தொடங்கியது அவரது ஞாபகத்திற்கு வந்தது. எழுந்து ஓடிச்சென்று எச்சிக்கையால் சல்லிக் கல்லை எடுத்து சிவலிங்கத்திற்கு எறிந்தார். அந்தச் சல்லியுடன் அவர் கையில் ஒட்டியிருந்த கஞ்சிச் சோற்றுப் பருக்கை சிவலிங்கத்தில் விழுந்தது. விழுந்த சல்லி மலரானது. அடுத்த சல்லி, அடுத்த சல்லி என எறிந்த சல்லி யாவும் மலர்களாகக் குவிந்தன. சாக்கியனார் சிவனின் திருவருளில் திளைத்தார்.

இறைவனின் அந்த அருள் திறத்தை,
“.... பொய்த்தவன் காண் புத்தன் மறவாதோடி
எறிசல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண்“      - (ப.திருமுறை: 6: 52: 8)
என திருநாவுக்கரசர் போற்றுகின்றார்.

சிவன் தன்னிடம் உண்மையான அன்புடையோர் குற்றம் செய்தாலும் குறைகாணாது நல்ல குணமாகக் கருதும் புதுக் கொள்கை உடையவர் ஆதலால் தான் சிவனின் திருவடிகளை அடைந்து வணங்குவதாக சுந்தரமூர்த்தி நாயனார் தமது தேவரத்தில் கூறியுள்ளார். அப்படி குற்றம் செய்தவர்களில் ஒருவராக சாக்கியனாரையும் காட்டுகிறார் பாருங்கள்.

“நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
       நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்றசூதன் நற்சாக்கியன் சிலந்தி
          கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
குற்றமே செய்யினும் குணமெனக் கருதும்
         கொள்கை கண்டு நின் குரைகழல் அடைந்தேன்...“- (ப.திருமுறை: 7: 55: 4)
சாக்கியனார் செய்த குற்றத்தைக் குணமாகக் கொண்ட சிவன் நாம் செய்யும் குற்றத்தையும் குணமாகவே கொள்வான் என்பதை சுந்தரமூர்த்தி நாயனார் எமக்குக் காட்டித் தந்துள்ளார்.

குருபூஜை: சாக்கிய நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.




Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment