June 25, 2014

Kazharsinga Nayanar - Nayanmar 51

51. Kazharsinga Nayanar!!

Life of Thiru Kazharsinga Nayanar !!

Photo courtesy-shaivam.org

Thiru Kazharsinga Nayanar was the righteous ruler of Pallava Kingdom.   During his regime, people were lived a happy and prosperous life.  Thus, he earned lot of fame and won over his enemies.  He was a zealous devotee of Lord Shiva; visited many sacred temples of Lord along with his wife. 
Once, King Kazharsingar along with his Queen made a visit to the temple of Lord Tyagaraja at Thiruvarur with their escorts.  The King was transcended to the world of ecstasy after visualizing the mesmerizing beauty of Lord.  In the meantime, Queen was gracefully moving through the circumambulatory paths observing the enthralling beauty of the environment.  At one moment, her eyes get caught of a beautiful hall and its dais.   At the center of the hall there was heaps of alluring fresh flowers of various fragrances which was kept for making garlands out of it for the worship of Lord.  Instantly, a gorgeous flower fallen down from the dais which was picked by the Queen and smelt it.
Thiru Cheruthunai Nayanar, one of the passionate devotees of Lord Shiva was happened to observe the Queen’s movement.  Thiru Cheruthunaiyar was totally annoyed by her act; he had strict disciplined manners in the worship of Lord and purity of materials used for the worship of Supreme Lord.  It was most frustrating moment for him, he rushed off his feet and cut down her nose for the sin she had committed.  The queen was traumatized at the behavior of Thiru Cheruthunaiyar and withered in pain.  Soon, King Kazharsingar joined at the spot, he was utterly shocked to see his dearest wife shivering and screaming out of pain.  Thiru Cheruthinaiyar explained the state of affairs to the King Kazharsingar.  The King scrutinized the situation and declared that the punishment for polluting the flower which was kept for offering to Lord was the severe sin committed and the verdict followed to chop her hands down for picking the flower kept for the worship.   At once, there were flowers trickled from the sky appreciating the uprightness of King Kazharsingar.  King Kazharsinga Nayanar ruled his Kingdom wisely for several years and finally attained the Abode of Lord Shiva.
In the Tamil month Vaikasi – Barani is widely celebrated as Guru Puja of  Thiru Kazharsinga Nayanar, the day he attained the Abode of Lord Shiva. [Author: Uma Subbu]

(Courtesy: Dinamalar)

கழற்சிங்க நாயனார்
 Temple images
பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவர் மணிகண்டப் பெருமானின் பேரருளால் அறநெறி குன்றாது அரசோச்சி வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களை வென்று வாகை சூடி பொன்னும் பொருளும் பெற்றார். இவ்வாறு பெற்ற பெரு நவநிதிகளை ஆலய வழிபாட்டிற்கும், அடியார்கள் வழிபாட்டிற்கும் பயன்படுத்தினார். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் சந்திக்க எண்ணினார். தமது பிராட்டியாருடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டார். திருவாரூரை அடைந்த நாயனார் பிறைமுடிப் பெருமான் குடிகொண்டிருக்கும் பூங்கோயிலை அடைந்தார். புற்றிடங்கொண்ட நாயகரின் திருமுன் வீழ்ந்து வணங்கி எழுந்தார். பூங்கோயில் புண்ணியரின் அருள்வடிவத்திலே மெய்மறந்து கண்ணிலே நீர்மல்க உள்ளத்திலே அன்பு பொங்கப் பக்தியிலே மூழ்கி வழிபட்டுக் கொண்டிருந்தார்  வேந்தர். திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்த பட்டத்து நாயகி அழகிய எழில்மிகும் மண்டபங்களைக் கண்டு அதிசயித்தாள். அரசியார், மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தாள். அங்கு தொண்டர்கள் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தனர். எண்ணத்தைக் கவரும் வண்ண மலர்களைக் கண்டதும் அரசியார்க்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமலர் வாசனையில் சற்று நிலை மறந்தாள். தன்னையறியாதவாறு தரையில் கிடந்த மலர் ஒன்றை  எடுத்து மோந்து பார்த்தாள். அங்கு கூடியிருந்த தொண்டருள் செருத்துணை நாயனார் என்பவரும் ஒருவர். இவர் அடியார்களுக்கு யாராகிலும், அறிந்தோ, அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார்.

அரசியாரின் செயலைக் கவனித்த செருத்துணை நாயனார் சினம் கொண்டார். அரசியாயிற்றே என்று கூடப் பார்க்கவில்லை; அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை நுகர்ந்து பார்த்துப் பிழை புரிந்த அரசியாரின் மூக்கை வாளால் சீவிவிட்டார் நாயனார்! பூமகள் போன்ற பட்டத்தரசி மயக்கமுற்று மண் மீது வீழ்ந்தாள். பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னர்க்கு இச்செய்தி எட்டியது. மன்னர் அவ்விடத்திற்கு விரைந்த வந்தார். நிலத்தில் துடித்து துவண்டு கிடக்கும் அரசியாரின் பரிதாப நிலையைக் கண்டார். பதை பதைத்துப் போனார். அஞ்சாமல் இக்கொடிய செயலை செய்தது யார்? என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டார். அம்மொழி கேட்டு, மன்னவா! இச்செயலை செய்தது நான்தான் என்று துணிந்து சொன்னார் நாயனார். சைவத் திருக்கோலத்திலே நின்றிருந்த செருத்துணை யாரைக் கண்டதும் மன்னரின் மனம் அடியார் சினத்துடன் இச்செயல் செய்ததற்கு எமது தேவியார் செய்த பிழைதான் யாதோ? என்பதை அறியத் துடித்தது. மன்னரின் முகத்தில் எழுந்த கேள்விக் குறியின் சாயலைப் புரிந்துகொண்ட செருத்துணையார், அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை மோந்து பார்த்தார் என்றார். அவர் மொழிந்தது கேட்டு மன்னர் மனம் கலங்கினார். அரசர், கரங்கூப்பி வணங்கி, ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை என்று கூறியவாறே உடைவாளை எடுத்தார். மலரை எடுத்த கையை அல்லவா முதலில் தாங்கள் துண்டித்திருக்க வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் சட்டென்று அரசியாரின் மலர்க்கையை வெட்டினார். அரசரின் உயர்ந்த பக்தி நிலை கண்டு செருத்துணை நாயனார், மன்னர்க்குத் தலைவணங்கினார். அப்பொழுது புற்றிடங்கொண்ட பெருமான் மன்னர்க்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, சக்திதேவியோடு ரிஷபத்தில் எழுந்தருளினார். பட்டத்தரிசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் கண்டு அடியார்கள், மன்னரைப் போற்றிப் பணிந்தனர். மன்னரின் புகழ் திக்கெட்டும் பரவியது. மன்னர் கழற்சிங்க நாயனார் பூவுலகில் பல்லாண்டு வாழ்ந்து அறநெறி பிறழாமல் அரசாட்சி புரிந்தார். முடிவில் எம்பெருமான் திருவருளாலே சிவலோகம் அடைந்து இன்புற்றார்.

குருபூஜை: கழற்சிங்கர் நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

காடவற்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்.


காடவர்தம் குலமுவந்த கழலார் சிங்கர்
    காதன்மிகு தேவியுடன் காவ லாரூர்
நாடவல பெருமானைப் பணிவா ரங்கோ
    ரகன்றமலர் தனைமோந்த வரிவை மூக்கைச்
சேடுடைய செருத்துணையா ரரியக் கேட்டுத்
    திறலரசர் மலரெடுத்த செங்கை யென்றே
சூடகமுன் கைதடிந்து ஞாலங் காத்த
    தூய்மையா ரருள்சேர்ந்த வாய்மை யாரே


கழற்சிங்க நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சிவாபராதம் கண்ணோட்டமின்றியே தண்டிக்கப்படுதல்

திருக்கோயில் நியமங்களில் விதிக்கப்பட்டவை அநுசரணையில் வழுவாதிருக்கச் செய்தலும் விலக்கப்பட்டவை நிகழ்ந்துவிடாதிருக்குமாறு கண்காணித்தலும் தற்செயலாக அவற்றிலேதும் நிகழ்ந்தவிடத்துத் தக்க பிரகாரம் பரிகாரஞ் செய்து தீர்த்தலும் விரும்பத்தகுஞ் சிவதொண்டுகளாம். சிவ மகிமை யொன்றையே யன்றி மற்றொரு மகிமையையும் மதிக்கும் பாங்கற்ற உள்ளப்பெருமை பெற்ற சிவனடியார்களில் இச்சிவதொண்டில் அதிமுனைப் புற்றிருந்தோரையுங் கொண்டுள்ளது திருத்தொண்டர் புராணம். திருவாரூர்த் தரிசனத்தின் போது அங்கு தேவாசிரய மண்டபத்திருந்த சிவனடியாரைச் சுந்தரமூர்த்தி நாயனார் வணங்காது செல்வதைக் கண்ட விறன்மிண்ட நாயனார் "இவர் சிவனடியார்க்குப் புறகு இவரை யாண்ட சிவனும் சிவனடியார்க்குப் புறகு" எனக் கடிந்துரைத்ததன் மூலம் சிவனடியாரை மதிக்காமையாகிய சிவாபராதத்துக்குப் பரிகாரங் கண்ட செய்தியும் சிவகாமியாண்டாரின் திருப்பூங்கூடையைப் பறித்துச் சிதறடித்த அரச யானையையும் அதன் பாகரையும் உடனடியாகவே கொன்றொழித்தல் மூலம் எறிபத்த நாயனார் அச்சிவாபராதத்துக்குப் பரிகாரங்கண்ட செய்தியும் ஏலவே அறியப்பட்டவையாகும். இவற்றைவிடக் கடூரமான முறையில் சிவாபராதத்துக்குத் தண்டனைத் தீர்வு நிகழ்ந்த செய்தியொன்று கழற்சிங்க நாயனார் புராணத்தில் வரும். அத்தண்டனை விஷயத்தில் விறன்மிண்ட நாயனார், எறிபத்த நாயனார் போன்ற மற்றொரு நாயனாரால் நிகழ்ந்த அளவு போதாதென்று கழற்சிங்க நாயனார் தாமுஞ் செய்த தண்டனைக் குரூரமும் அதற்காளாகியவர் மற்றாருமல்லர், அதே கழற்சிங்க நாயனாரின் பட்டத்துத் தேவியே என்பதும் சிவமகிமை பேணுஞ் சிவனடியார் தொண்டுறுதியின் கண்டிப்பான நிலையைத் தொட்டுணர்த்துவனவாம்.


சிவாலய தரிசனக் கிரமமும் ஆலய நியமவிதிமுறை பேணுதலில் தீவிர தாகமுங் கொண்ட அரசராகிய கழற்சிங்க நாயனார் ஒருபொழுது திருவாரூர்த் திருக்கோயில் தரிசனத்தில் ஈடுபட்டிருக்கையில் உடன் சென்றிருந்த அவர் பட்டத்துத் தேவி அங்கு திருமாலை மண்டபத்தின் முன் கிடந்த பூவொன்றை எடுத்து மோப்பக் கண்ட மாத்திரத்தே அங்கு நின்ற செருத்துணை நாயனார் என்பவர் சிவனுக்குரிய பூவை மூக்கால் முகர்ந்து அநாசாரம் விளைத்தாள் என்று அவள் மூக்கைத் தமது கைக்கருவியால் வார்ந்துவிட அதனால் நேர்ந்த கலவரங் கேட்டவ்விடம் வந்த கழற்சிங்க நாயனார் விபரமறிந்தவுடன் முகர்ந்த மூக்குக்கு முன் எடுத்த கையன்றோ தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியதெனக் கூறித் தம் உடைவாளால் தம் தேவியின் கையைத் தாமாகவே துண்டித்துள்ளார். அது அவர் புராணத்தில், "அந்நிலை அணையவந்து செருத்துணை யாரா மன்பர் முன்னூறு நிலைமை யங்குப் புகுந்தது மொழிந்த போது மன்னரு மவரை நோக்கி மற்றிதற் குற்ற தண்டந் தன்னையவ் வடைவேயன்றோ தடிந்திடத் தகுவதென்று" - "கட்டிய உடைவாள் தன்னை உருவிஅக் கமழ்வா சப்பூத்தொட்டுமுன் னெடுத்த கையாம் முற்படத் துணிப்பதென்று பட்டமு மணிந்து காதல் பயில்பெருந் தேவி யான மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந் துணித்தா ரன்றே" என வரும்.


அவள் தன் காதலுக்குரிய பட்டத்துத் தேவியென்பதும் ஏலவே மோசமாகத் தண்டிக்கப் பட்டு இரங்கத்தகும் இழிநிலையி லிருந்துள்ளா ளென்பதும் பற்றிய கண்ணோட்டத்தின் சாயல் கிஞ்சித்து மின்றிச் சிவாலய நியதி பேணும் நோக்கொன்றே நோக்காக இக்குரூரம் விளைக்குமளவுக்கு இந்த நாயனார்க்கிருந்த தீரமானது அவர் செய்வதெதுவுஞ் சிவப்பிரீதியாய் விடுமளவுக்கு அவர்பால் உரம்பெற்றிருந்த ஆண்டானடிமைத் தொண்டுரிமைக் கண்ணான உறைப்புநிலை விசேடத்தைத் தெரிவிப்பதாகும். அவர் செயல் சிவப் பிரீதியாகவே இருந்தமை அந்நிகழ்ச்சி தெய்விக அரங்கிற் பெற்றுள்ள குதூகல வரவேற்பினைச் சேக்கிழார் விளக்குமாற்றாற் புலப்படும். அது, "ஒரு தனித்தேவி செங்கை உடைவாளால் துணித்த போது பெருகிய தொண்ட ரார்ப்பின் பிறங்கொலி புவிமேற் பொங்க இருவிசும் படைய ஓங்கு மிமையவ ரார்ப்பும் விம்மி மருவிய தெய்வவாச மலர்மழை பொழிந்த தன்றே" என வரும்.


ஆயின், செய்வார் செய்திக் கேற்ப அநுக்கிரக நிக்கிரகங்கள் பண்ணுபவன் சிவனே எனச் சாஸ்திரம் பேசுவதிருக்கையில் இத்தகு நிக்கிரகங்களின் பொருந்துமா றென்னையெனின், சர்வபாவங்களாலுந் தாம் சிவனே ஆய்விடுமளவுக்குத் தம்மைப் "பையக்கொடுத்துப் பரங்கெட்டு நிற்குஞ் சிவனடியார்கள் எது செய்யினுஞ் சிவன் பணியாக அன்றிச் செய்வதில ராதலினாலும் சிவனுமிவன் செய்தியெலா மென்செய்தியென்று பவமகல உடனாகி ஏன்று கொள்வான்" எனச் சிவஞான சித்தியாரும் "துணிந்தாரகம்படி துன்னி உறையும் பணிந்தா ரகம்படி பாற் பட்டொழுகும்" எனச் சிவனடியாருளத்தோடு சிவன் திருவுள மொத்தியலுமாற்றைத் தெரிவிக்குந் திருமந்திரமும் "யாதே செய்து மியாமலோ நீயென்னில் ஆதேஎன்னு மளவில் பெருமையான்" எனத் தேவாரமுங் கூறுதலினாலும் அவர்செயல் சிவன்செயலோ டொக்குமாதலின் அது பொருந்துமென்க. அன்றியும், முன்னைய சூசனங்கள் சிலவற்றிற் கண்டவாறு அரசனும் ஈசன் தன்பால் வைத்த ஆணையையே அவன் பிரதிநிதியாயிருந்து நடத்துவோனாதலின் அவனால் எச்செயற்கும் நடுநிலை வழுவாத தண்டனையாற்றப்படுகையில் அச்செயற் பாவம் அற்றொழியு மென்பதனாலும் அது பொருந்துவதாம். அங்ஙனமாதல், திருமந்திரத்தில், "தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்வழி எத்தண்டமுஞ் செயும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே" எனவருவதனாற் பெறப்படும். இடங்கழி நாயனார் குறித்த சிவனடியாராந் தன்மையும் அரசராந்தன்மையும் ஒருங்குடையராதலின் இவ்வகைத் தண்டத்திற்கு இருமடி உத்தரவாத முளராஞ் சிறப்பும் இங்குக் கருதத்தகும்.


திருச்சிற்றம்பலம்.

Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment