September 16, 2015

Patanjali Siththar - Part 2

சித்தர் பிறந்த தமிழ் மாதம் : பங்குனி மாதம்
சித்தர் பிறந்த தமிழ் நட்சத்திரம் : மூலம்
சித்தர் வாழ்த்த வருடங்கள் : ஐந்து யுகம் ஏழு நாட்கள்
(ஒரு யுகம் = நாற்பத்தி முன்று லட்சத்தி இருபதாயீரம் வருடங்கள்)
சமாதியான இடம் : ராமேஸ்வரம்



இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர்.

ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக் காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும்.

எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று.

கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார். இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார்.

சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர். வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.

“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்”
என்றார் ஒரு சீடர்.
“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம்.மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்று கேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்” என்றார் பதஞ்சலி.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.

முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.

“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.

படிப்படியாக கௌடபாதருக்கு வித்தைகளணைத்தையும் கற்றுக் கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்தத் தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.

பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதிசேஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் "பதஞ்சலி" என்று ஆனதாய் ஒரு கூற்று. மேலும் சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே ஆடுவதைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார்.

மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று. இவருடைய சம காலத்தினரான புஷ்ய் மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் "திருமந்திரம்" என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான்.

காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்: "பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசிஷ்டரின் மனைவி. கோவையில் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் "திருமூர்த்தி மலைக்குன்றுகள்" இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் "தென் கைலாயம்" என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார்.

பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும் ஒருவர்." "தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர்.

இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!"

சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். புரியாதவர்கள் கேட்கவும். முடிந்தால் விளக்குகிறேன். "அது என்னுடைய தாத்தா! மேலே ஏறிப் பார்! ஆனால் என்னைப் பிறப்பித்தவர் காலங்கி நாதர்! பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது பார், இதுவே சரியான வழி! அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள். "அப்பா நீ தேடினாயே இது தான் அது!" என்று. குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார்.

காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடத்ததும் பிறந்தது "போகர் 7,000". அதில்பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர். மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவ்ருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள். யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் ‘ஹிரண்யகர்பர்’. அதை சூத்திரங்களாக்கி வைத்தவர் மஹரிஷி பதஞ்சலி. அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள்: வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும், யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர்.

இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக் கொண்டிருப்பவர் எனவும் சொல்வர்.


தந்தை : அத்திரி முனிவர்.
தாய்:கோணிகா.
வேறு
பெயர்கள்
:அத்ரியின் பிள்ளையாகையால் ‘ஆத்திரேயர்’,
கோணிகாவின் பிள்ளையென்பதால் ‘கோணிகாபுத்திரர்’.



இவர் எழுதிய மூன்று நூல்கள்:


யோகத்தினை விளக்கும் ‘யோக சாஸ்திரம்’,
மொழி இலக்கணமான ‘மஹாபாஷ்யம்’,
ஆயுர் வேத்மாகிய ‘சரகம்’ என்ற ‘ஆத்திரேய சம்ஹிதை’. ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார்


Home Pathinettu Siththargal Previous
Next

No comments:

Post a Comment