April 27, 2014

Satti Nayanar - Nayanmar 44

Satti Nayanar - Nayanmar 44

Sri. Swamy Sivananda

Satti Nayanar was a Vellala by caste. He was born in Varinjiyur in the Chola kingdom. He was a sincere devotee of Lord Siva and honoured His devotees. He could not tolerate anyone speaking ill of them. If anyone did so, he would cut off the slanderer’s tongue. Lord Siva understood his pure inner Bhav and showered His grace on him.
Besides revealing the glory of the Nayanar’s devotion, this simple life also holds for us a great object lesson—never speak ill of the saints or devotees of God. They have attained union with God: and, so, if you vilify them, you are vilifying God Himself. It is the greatest sin, the greatest, Himalayan blunder. You cannot judge them: they live on a different plane of consciousness from yours. Our scriptures contain numerous illustrations of the strange behaviour of saints, sages and Yogis. Sometimes they behave as little children: sometimes as mad-men; sometimes as fools. Mysterious is the nature of saints. Always worship and adore them: you will be benefited. Do not criticise them or speak ill of them or find fault with their conduct. Our scriptures say that he who blames the conduct of the sages, gets their bad Karma, and suffers doubly in consequence. Beware!
If anyone speaks ill of a saint or devotee of God, in your presence, leave that place at once. Otherwise, your own moral and spiritual structure will be dangerously undermined. Beware!

சத்தி நாயனார் Courtesy: Dinamalar
 Temple images

சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் பதியிலே வேளாளர் குலத்திலே சத்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே சடை முடியுடைய விடையவர் திருவடியைச் சிந்தையில் இருத்தி வந்ததோடு சிவனடியார்கள் சேவடிகளையும் தமது சென்னி மீது தாங்கி வழிபட்டு வந்தார். சத்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார். இத்தகைய வலிய மனமும் சக்தியும் வாய்க்கப் பெற்று ஒழுகி வந்தமையால்தான் இவர் சத்தி நாயனார் என்று திருநாமம் பெற்றார். சிவனடியார்களை எவரும் இகழாவண்ணம் காத்து வரும் பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்தார். ஆடுகின்ற அரசர்க்கு அளவிலா தொண்டாற்றி வந்த இத்திருத்தொண்டர், மன்னுள் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற அம்பலவாணனுடைய அழகிய சிலம்பணிந்த சேவடி நீழலை அடைந்தார்.
 
குருபூஜை: திருச்சத்தி நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியேன்.

சத்தி நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சிவனடியார் நிந்தனைக்குத் தக்க தண்டனை வழங்கல்

மெய்யுணர்வுற்றோரல்லா தோருஞ் சிவனாகிய தன்னை உணரவைக்கும் பொருட்டாகச் சிவபெருமான், விபூதி உருத்திராக்கம் சடைமுடி யாகிய தனது திருவேடத்தைச் சிவனடியார்பால் நிறுத்தி அச்சிவனடியார்கள் மேலும் தன்னில் இலயித்திருக்கும் பொருட்டாக அவர்களைத் தான் தன்னுள்ளடக்கி நிற்கும் பாங்கில் அவர்களிடத்தில் இவர், தயிரின்கண் நெய்போல் விளங்கித் தோன்றுதலுண்டாகலின் அவர்கள் தாங்கும் வேடம் மெய்ம்மையான சிவவேடமேயாம். அது, சிவஞான போதத்தில், "தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான் கொடுத்துத் தன்னுணரத் தன்னுள் இருத்தலால் தன்னுணரும் நேசத்தார் தம்பால் விளங்குந் ததிநெய் போற் பாசத்தார்க் கின்றாம் பதி" எனவும் விநாயகரகவலில், "வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய் யன்பர் குழாத்துடன் கூட்டி" எனவும் வரும். அவர்கள் வேடத்தைச் சிவனெனவே கண்டு அவர்க்குத் தொண்டுபடு முகத்தால் அவர்களைக் கூடுங்கூட்டமே உண்மையிற் சிவலோகப் பேற்றை அளிப்பதுமாம் அது திருவாசகத்தில், "பற்றாங்கவை யற்றீர் பெறும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை யிறைசீர் கற்றாங் கவன்கழல் பேணின ரொடுங் கூடுமின் கலந்தே" எனவும் திருமந்திரத்தில் "உடையா னடியா ரடியா ரொடும்போய்ப் படையா ரழன்மேனி பதி சென்று புக்கேன் கடையார நின்றவர் கண்டறிவிப்ப உடையான் வருகென ஓலமென்றாரே" எனவும் வருவனவற்றாற் பெறப்படும்.

இங்ஙனம் ஒருதலையாகப் பெருநன்மை விளைக்குஞ் சிவனடியார் மகிமையைப் பேணுதற்கெதிர் அவர்களை நாவால் நிந்தித்தல் நிகழுமெனின் அது சிவாபராதமாகிய அதிபாதக மாதலும் அது சிவதருமோத்தரம் முதலாந் தரும நூல்களால் அதிபாதக விளைவாகக் குறிக்கப்படுங் கொடு நரகத் துன்பத்துக் கேதுவாதலுந் தவிர்க்க முடியாதனவாம். திருமந்திரத்தில் அது, "ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர் தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே" என வருதலுங் காணலாகும். இங்ஙனம் பெரும் பழுது விளைப்பதாகிய இச் சிவனடியார் நிந்தனைக்குத் தக்க பரிகாரஞ் செய்தலும் அதுவும் சிவதொண்டு என்னும் கணியத்துக் குளதாதலும் சைவநெறியில் உள்ளனவாம்.

சத்திநாயனார் என்ற உத்தமர் எவரேனுஞ் சிவனடியாரை நிந்திக்கக் காணின் அவரை வலிந்து பற்றித் தண்டாயம் என்பதொரு கருவியால் அவர்நாவை வலித் திழுத்துச் சத்தி யெனப்படும் ஒருவகைக் கத்தியால் அதனை அரிந்து விடும் நியமத்தைத் தமது பிரத்தியேகமான சிவதொண்டாகப் பூண்டு அன்படிப்படையிலான மன உறுதியுடன் அதனை வெகுநாளாற்றிச் சிவப் பேறெய்தியுள்ளார். அது அவர் புராணத்தில், "அத்தராகிய அங்கணர் அன்பரை இத்தலத்தில் இகழ்ந்தியம் பும்முரை வைத்த நாவை வலித்தரி சத்தியாற் சத்தி யாரெனு நாமந் தரித்துளார்" - "தீங்கு சொற்ற திருவிலர் நாவினை வாங்க வாங்குதண் டாயத்தினால் வலித்தாங்கயிற் கத்தியாலரிந் தன்புடன் ஓங்கு சீர்த்திருத் தொண்டினுயர்ந்தனர்" - "அன்னதாகிய ஆண்மைத் திருப்பணி மன்னு பேருலகத்தில் வலியுடன் பன்னெடும் பெருநாட் பரிவாற்செய்து சென்னியாற்றினர் செந்நெறி யாற்றினர்" - "ஐயமின்றி அரிய திருப்பணி மெய்யினாற் செய்த வீரத் திருத்தொண்டர் வையமுய்ய மணிமன்று ளாடுவார் செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்" என வரும். ஓங்குசீர்த் திருத்தொண்டு, ஆண்மைத் திருப்பணி, அரிய திருப்பணி என இவர் திருத்தொண்டைச் சேக்கிழார் போற்றுவதும் அன்புடன் செய்துயர்ந்தனர் எனவும், வீரத்திருத் தொண்டர் எனவும், இவரைப் பற்றிக் குறிப்பிடுவனவும் இவரது திருத்தொண்டின் அசாமானியத் தன்மை தெரிப்பனவாகும். ஆயின், சாந்த இயல்பினர் எனப்படுஞ் சிவனடியார்க்கு இப்படியான ஆண்மை வீறும் உளதாதல் எங்ஙனமெனில், அது அவர், தமது தொண்டுக்குத் தம்மை அர்ப்பணித்து நிற்கும் நேர்மைக் குபகாரமாம்படி, திருவருளால் வழங்கப்படும் அருட்கொடையாக அமையும் என்க. எனினும், குரூரத்தன்மை வாய்ந்த இத்தகு செயற்பாடு, அருளாளர் எனப்படும் சிவனடியார்க்குப் பொருந்துமா றென்னை யெனின், அதுவும் அருள் பற்றியெழுஞ் செயலேயாமாதலிற் பொருந்து மென்க. அது அருள்பற்றியதாதல், பிறரும் அவ்வாறு சிவனடியார் நிந்தனையிலீடுபட்டு நரகத் துன்பத்துக் காளாகாமற் காக்கவல்ல அதன்முன் னெச்சரிக்கையாதற் பண்பினாலும் அது செய்தவர் தாமும், அருளாளர் கையினால் உரிய தண்டனை பெறுதல் மூலம் நரகத்துன்பத்துக்காளாகாமற் பிழைக்க வைக்கும் அதன் பரிகாரமாம் பண்பினாலும் அமையும் என்க. அருளாளர் கையாற் பெறுந் தண்டனை பாவ பரிகாரமாதல், சண்டீச நாயனாராற் கால் தறிபட்ட பரிகாரத்தால், அபிஷேகப் பாற்குடங்களைத் தட்டிச் சிதறிய அவர் தந்தை குற்றம் நீங்கிச் சுற்றமுடன் கயிலையடைந்தின்புற்றதாக உள்ள வரலாற்றானும் கோட்புலி நாயனார் கைவாளால் தலை துணிக்கப்பட்ட பரிகாரத்தால், ஆணை மீறிச் சிவனுக்கென வைக்கப்பட்ட நெல்லையுண்டுவிட்ட அவர் சுற்றத்தார் குற்றம் நீங்கிச் சிவலோக வாழ்வு பெற்றதாக உள்ள வரலாற்றானும் உறுதி பெறுவதாகும்.

திருச்சிற்றம்பலம்.

Home  Previous                                                                    
                                                           Next

1 comment:

  1. அருமை வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம் 🙏

    ReplyDelete