July 14, 2014

Kochengat Chola Nayanar - Nayanmar 60

60. Kochengat Chola Nayanar 

Sri. Swamy Sivananda


In Chandra Tirtha in the Chola kingdom there was a thick grove. In that grove under a Jambul tree there was a Siva Lingam. A white elephant used to come there daily and prostrate before the Lingam. A spider which was also devoted to Him, noticed that dry leaves were falling on Him and to prevent this wove a web above the Lingam.

The next day when the elephant came to worship, he found the web, and, thinking that someone had polluted the place, tore the web, offered his worship and went away. The spider came upon the scene, felt sorry that his web had been destroyed, wove another web and went away. The next day, as the elephant was pulling the web away, the spider which was present there, gave him a sting: the elephant died of the poison on the spot. The spider, too, was caught in the elephant’s trunk, and perished.

Due to His grace, this spider was born as the son of Suba Devan, the Chola king. He and his dutiful wife went to Chidambaram and eagerly prayed to the Lord Nataraja for a son. The Lord granted their wish. Soon Kamalavati conceived the child. The day of delivery arrived. Astrologers foretold that if the child could be delivered a few minutes later, it would rule the three worlds! The queen asked that she should be tied to the roof of the room upside down, with a tight bandage around her waist. When the auspicious time came, she was released and the child was born. This was the spider reborn! The child had red eyes as he had remained in his mother’s womb a little longer. The mother, looking into his eyes, said: ‘Kochekannano’ (the child with red eyes), and expired. Hence, he was named Kochengat Cholan. When he reached the proper age, his father enthroned him king, retired from the world and, after severe penance, reached the Lord’s Abode.

Kochengat Cholan promoted Saivism. In Tiru Anai Ka he built a beautiful temple and installed the Siva Lingam under the same Jambul tree! In Chola Nadu he built many shrines and mansions for the use of the three thousand Brahmins of Tillai. He provided for regular worship at Chidambaran. Finally he reached the Lord’s Abode. His glories were sung by the poet Poygayar in his ‘Kalavazhi Narpathu’.

கோச்செங்கட் சோழ நாயனார் 

Courtesy: Dinamalar
Temple images
வளம்மிக்கச் சோழநாட்டிலே எழிலோடு காணப்படுவது திருவானைக்காவல் என்னும் தெய்வத்தலம். இங்கே காவிரி நதி வற்றாது ஓடிக்கொண்டிருந்தது. காவிரியாற்றின் கரையிலே சந்தரதீர்த்தம் என்னும் பெயருடைய பொய்கை ஒன்று அமைந்திருந்தது. அப்பொய்கை கரையிலே குளிர்ச்சோலை ஒன்று உண்டு.அச்சோலையிலுள்ள வெள்ளை நாவல் மரத்தின் தாழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. தவமிக்க ஒரு வெள்ளை யானை நாள்தோறும் தனது துதிக்கையால் நீரும், மலரும் எடுத்துவந்து சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. இக்காரணம் பற்றியே அப்பகுதிக்குத் திருவானைக்காவல் என்ற பெயர் வழங்கலாயிற்று. அங்குள்ள நாவல் மரத்தின் மீதிருந்த அறிவுடைய சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மீது சூரிய வெப்பம் படாமலும், சருகுகள் உதிர்ந்து விழாதவாறும் ஞானத்தோடு நூற்பந்தல் அமைத்தது. வழக்கம்போல் சிவலிங்கத்தை வழிபட வரும் வெள்ளை யானை சிலந்தி வலையைக் கண்டு எம்பெருமானுக்குத் தூய்மையற்ற குற்றமான செயலை சிலந்தி புரிந்துவிட்டதே எனச் சினந்து கொண்டு நூற்பந்தலைச் சிதைத்துப் பின்னர் சிவலிங்கத்தை வழிபட்டுச் சென்றது. வெள்ளை யானையின் இச்செயலைக் கண்டு வருத்தமுற்ற சிலந்தி, யானை சென்றதும் மீண்டும் முன்போல் நூற்பந்தலிட்டது. இவ்வண்ணம் சிலந்தி வலை  பின்னுவதும் யானை அதனைச் சிதைப்பதுமான செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே இருந்தன. ஒருநாள் சிலந்திக்கு கோபம் வந்தது. தான் கட்டும் வலையை அழித்திடும் யானையைக் கொல்ல வேண்டும் என்று முடிவு கட்டியது.
வழக்கம்போல் சிவபெருமானை வழிபட வந்த சிலந்தி யானையின் துதிக்கையால் புகுந்து கடித்தது. சிலந்தியின் செயலால் சினங்கொண்ட யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. சிலந்தி இறந்தது. அதே சமயத்தில் யானையும் சிலந்தி விடம் தாங்காமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. திருக்கையிலாயமலையில் சிவகணத்தவருள் புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் இருந்தனர்.  இவர்களுக்குள் சிவத்தொண்டில் தாமே சிறந்தவர் என்று கருதி ஒருவருக்கொருவர் பொறாமையும், கோபமும் கொண்டு கொதித்தெழுந்தனர். புட்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகப் பிறக்குமாறு சபித்தனன். மாலியவான் புட்பதந்தனை யானையாகுமாறு சபித்தனன். இவ்வாறு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்த இரு சிவகணத்தவர்களும் எம்பெருமானுக்கு செய்த திருத்தொண்டால் வீடு பேற்றை எய்தினர். இறைவன் யானைக்கு சிவபதம் அளித்தார். சிலந்தியைச் சோழர் குலத்தில் உதித்து கோயில்கள் அமைத்துச் சிவத்தொண்டு புரிய அருள் செய்தார். யானையைக் கொல்லச் சிலந்தி முதலில் முயன்றதால் அதற்கு மட்டும் மறுபிறப்பு ஏற்பட்டது. சிலந்தியும், வெள்ளை யானையும் எம்பெருமான் அருளால் வீடுபேறு பெற்று முன்போல் சிவகணத் தலைவர்களாய் எம்பெருமானுக்குத் திருத்தொண்டு புரியலாயினர். சோழ அரசரான சுபவேதர் கமலாவதியாருடன் சோழவளநாட்டை அரசு புரிந்து வந்தான். திருமணமாகி நெடுநாட்களாகியும் மக்கட் பேறு இல்லாமல் மன்னன் மனைவியாருடன் தில்லையை அடைந்து அம்பலவாணரது திருவடியை வழிபட்டு பெருத்தவமிருந்தார்!
கூத்தப்பெருமான் திருவருள் புரிந்ததற்கு ஏற்ப சிலந்தி வந்து கமலவதியின் மணிவயிற்றில் கருவடைந்தது. மணிவயிற்றில் கரு வளர்ந்து குழந்தை அவதரிக்கும் தருணம் நெருங்கியது. அப்பொழுது சோதிட வல்லுனர்கள் இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேயானால் மூவுலகத்தையும் ஆளக் கூடிய ஆற்றலைப் பெறக்கூடிய குழந்தையாக இருக்கும் என்றார்கள். சோதிடர் மொழிந்தது கேட்டு அம்மையார், ஒரு நாழிகை தாமதித்துத் தமக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம்மைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுமாறு கட்டளையிட்டார். அவ்வண்ணமே அரசியாரைக் கட்டினர். சோதிடர் சொல்லிய நல்லவேளை நெருங்கியதும் அரசியார் ஆணைப்படி கட்டவிழ்த்தார்கள். அரசியாரும் அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அரசியார் தலைகீழாக தொங்கியதால் சற்று நேரம் குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. அரசியார் அன்பு மேலிட அக்குழந்தையை உச்சிமோந்து என் செல்வக்கோச் செங்கணான் என்று வாஞ்சையோடு கொஞ்சினாள். ஆனால் அரசியார்க்கு, அக்குழந்தையைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் பாக்கியம் இல்லாமற் போனது. குழந்தை பிறந்த சற்று நேரத்திற்கெல்லாம் அரசியார் ஆவி பிரிந்தது. சுபதேவர் தமது மகனை வளர்த்து வில் வித்தையில் வல்லவனாக்கி வேதாகமங்களிலும் மேம்பட்டவனாக்கினார். உரிய பருவத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த அவனை ஆளாக்கினார். சுபதேவர் மகனுக்கு முடிசூட்டிவிட்டு காடு புகுந்து அருந்தவம் புரிந்து எம்பெருமானின் திருவடி நீழலை அடைந்தார். கோச்செங்கட் சோழர் இறைவன் அருளாள் முற்பிறப்பை உணர்ந்து அரனார் மீது ஆராக்காதல் பூண்டு ஆலயம் எழுப்பத் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டார். திருவானைக்காவலில் ஆலயம் ஒன்று கட்டி யானை நுழையாதபடி சிறு வாயில் அமைத்தார். மற்றும் சோழ நாட்டில் ஆங்காங்கே அழகிய அம்பலங்கள் அநேகம் கட்டி முடித்தார். இவர் எம்பெருமானுக்கு எழுபது கோவில்களும், திருமாலுக்கு மூன்று கோவில்களும் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் கோச்செங்கட் சோழர் தில்லையில் தங்கி தியாகேசப் பெருமானை முக்காலமும் முறையோடு வழிபட்டுத் தில்லையம்பலத்து ஆடுகின்ற கூத்தபிரானது பாத கமலங்களில் வைகி இன்பமெய்தினார்.
குருபூஜை: கோச்செங்கட்சோழ நாயனாரின் குருபூஜை மாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
உலகாண்ட செங்கணார்க்கும் அடியேன்.

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மூன்றாம் திருநறையூர்ப் பதிகத்தில் பத்துப்பதிகப் பாடல்களிலும் கோச்செங்கணானைப் பாடிப் பரவியுள்ளார். 

'இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு

எழில்மாடம் எழுபதுசெய்(து) உலகம் ஆண்ட

திருக்குலத்து வளச்சோழன்' 
(பெரிய திருமொழி - திருநறையூர்ப் பதிகம், பக்கம் 146, பாடல் எண் 8.)

எனவரும் பெரிய திருமொழிப் பாசுர வரிகள், இப்பெருமான் எழுபது மாடக்கோயில்களை எழுப்பிய செய்தியைத் தெரிவிக்கின்றன. 

கோச்செங்கணான் எழுப்பியதாகச் சில மாடக்கோயில்களைச் சம்பந்தரும் சுந்தரரும் தங்கள் தேவாரப்பதிகங்களில் குறிப்பிடுகின்றார்கள்.

'வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே' (1)

'மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக் கோயிலே' (2)

என்று சம்பந்தர் பெருமான் திருவைகன் மாடக்கோயில் இறைவனைப் பாடும்போது, கோச்செங்கணானே அக்கோயிலை எழுப்பியதாகக் கூறுகிறார்.

'ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் சிறைசெய்த கோயில் சேர்வரே' (3)

'அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே' (4)

என்ற சம்பந்தரின் வரிகளால், திரு அம்பர்ப் பெருந்திருக்கோயிலைக் கட்டியவன் சோழன் கோச்செங்கணானே என்பது பெறப்படுகின்றது.

1. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 84.

2. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 84.

3. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருஅம்பர்பெருந்திருக்கோயில், பக்கம் 87.
4.. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருஅம்பர்பெருந்திருக்கோயில், பக்கம் 87.

கோச்செங்கட் சோழ நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது Courtesy: Shaivam.org

1. சிவபுண்ணிய விளைவும் பூர்வசிவபுண்ணியப் பயிற்சியுடையார்க்கே ஆகுமெனல்

கன்ம வசத்தால் உயிர்களுக்குப் பிறவிகள் பல பல உளவென்பதும் எவ்வெப் பிறப்பினும் அவ்வவ்வுயிர்க் குள்ளுயிராகிய சிவன் அவ்வவற்றி னியல்பாய்ப் பொருந்தி அவ்வவற் றுடனாயுள்ளானென்பதும் அதனால் மனிதப் பிறப்பல்லாத மற்றைப் பிறப்புகளிற் கூட உயிர்கள் தத்தம் அகச்சூழ் நிலையாகிய மலபரிபாகத்திற்கும் புறச்சூழ்நிலையாகிய வாழ்க்கை வசதிக்கு மேற்ற அளவிற் சிவனை ஆராதித்தலாகிய சிவபுண்ணியம் புரிதற் கிடமுண் டென்பதும் சைவ சாஸ்திர தோத்திர நூல்கள் புராணேதிகாசங்கள் அனைத்தினுக்கும் ஒப்ப முடிந்த தொன்றாம். அது, "பிடியெலாம் பின்செலப் பெருங்கைம்மா மலர் தழீஇ விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங் கடியுலாம் பூம்பொழிற் காணப்பேரண்ணல் நின் அடியலால் அடைசரன் உடையரோ அடியரே" எனவும் "நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் கறைநிறத்தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகமெல்லாங் குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீரட்டனாரே" எனவும் வருந் தேவாரங்களாற் பெறப்படும்.

உயிர்கள் செய்யும் புண்ணியங்களிற் பசுபுண்ணியம் என்றுள்ளவை மேற் பிறப்புக்களில் தத்தமக்களவான லௌகிக இன்பப் பலங்களைத் தந்தொழிவதோடு மேலும் அவ்வகை இன்ப வேட்கை விளையுஞ் சார்பினைத் தோற்றுவனவாயிருக்க, இவ்வகைச் சிவபுண்ணியங்கள் மேற்பிறவிகளிலுஞ் சிவபுண்ணியங்களை மிகுதியாகச் செய்வதற்கான நல்வசதிளோடு கூடிய உயர்குலப் பிறப்புக்களைத் தந்து மென்மேல் உயர்தரமான சிவ புண்ணியங்களை இயற்றுவித்து அவற்றின் பேறாக வினைப்பந்த நீக்கத்திற்கு ஒருதலையாக இன்றியமையாத இருவினையொப்பு நிகழப் பண்ணி ஞானத்தைக் கொடுத்துச் சிவப்பேறடைவிக்கும் பாங்கில் அழியா விதைமுதலாய்த் தொடர்ந்து நின்றுதவுவன ஆதலின் இவை 'இறப்பில் தவ'மெனப் போற்றப் பெறுவனவாம். அது, சிவஞான போதத்தில், "பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும் இசைத்து வருவினையிலின்ப" - "மிசைத்த இருவினையொப்பில் இறப்பில் தவத்தான் மருவுவனாம் ஞானத்தை வந்து" என வருவதிலிருந்து தெரிந்து கொள்ளப்படும். இசைத்து வருவினை பசுபுண்ணியம்; இறப்பில் தவம் சிவபுண்ணியம்.

ஒரு காலத்தில் திருவானைக்காவிற் சந்திர தீர்த்தத்தின், அயலில் நின்ற வெண்ணாவல் மரமொன்றில் வாழ்ந்த சிலந்தியொன்று மரத்தடியிலிருந்த சிவலிங்க மூர்த்தியில் உதிர்சருகுகள் படாவண்ணம் மேலே வலைகட்டித் தடுக்குந் தொண்டு மேற்கொண்டிருப்பதாயிற்று. அதற்கிருந்தது போன்ற பூர்வ புண்ணிய வசத்தினாலே அதே மூர்த்தியைத் துதிக்கை நீர் கொண்டாட்டிப் பூச்சூட்டி வழிபடும் யானை யொன்று தனது அபிஷேகத் தொண்டுக்குச் சிலந்தி வலை இடைஞ்சலாமெனக் கொண்டு அதனை அறுக்கையிற் சினமுற்ற சிலந்தி யானையின் துதிக்கைப் புழையுட் புகுந்து தீண்டவே அவ்வேதனை தாங்காது கையை நிலத்தடித்துப் புரண்டிறந்த யானையோடு சிலந்தியும் இறப்பதாயிற்று.

இறந்த அப்பிறப்பில் ஈட்டிய சிவ புண்ணியப் பேறாக அச்சிலந்தியானது மறுபிறப்பில், சிவ புண்ணியங்களை மிகுதியுஞ் செய்யும் தவச்சார்புள்ள குலமாகிய சோழ மன்னர் குலத்திற் சுபதேவன் என்ற மன்னனுக்குக் கமலவதி என்ற அவன் பட்டத்தரசி வயிற்றிற் கோச்செங்கணான் என்ற புத்திரனாகப் பிறப்பெய்துவதாயிற்று. சிவனருளால் முற்பிறப்புணர்ச்சி யோடே பிறந்து வளருங் கோச்செங்கணான் தான் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தான் முற்பிறப்பிற் பணிபுரிந்த திருவானைக்கா வெண்ணாவலடி முதற் பலவேறிடங்களிற் சிவாலயங்கள் அமைக்குஞ் சிவபுண்ணியப் பணியிலீடுபடுவாராயினர். அது அவர் புராணத்தில், "கோதை வேலார் கோச்செங்கட் சோழர் தாமிக் குவலயத்தில் ஆதிமூர்த்தி அருளால்முன் அறிந்து பிறந்து மண்ணாள்வார் பூதநாதன் தான்மகிழ்ந்து பொருந்தும் பெருந்தண் சிவாலயங்கள் காதலோடும் பலஎடுக்குந் தொண்டு புரியுங் கடன் பூண்டார்" - "ஆனைக்காவில் தாம்முன்ன மருள்பெற்றதனை யறிந்தங்கு மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழுங் கோயில் செய்கின்றார். ஞானச்சார்வாம் வெண்ணாவலுடனே கூட நலஞ் சிறக்கப் பானற்களத்துத் தம்பெருமா னமருங் கோயிற் பணிசமைத்தார்" என வரும். நாடு முழுவதிலும் வேண்டுமிடங்கள் தோறும் கோயில்கள் அமைத்து அவ்வவற்றுக்கு வேண்டும் நிபந்தங்களும் ஒழுங்கு செய்தபின் சிதம்பரத் தலத்திற் பேரன்பு தலைப்பட்டு வழிபாடுகளாற்றி அங்குள்ள தில்லை வாழந்தணர்களுக்கு மாளிகைகளும் அமைத்துக் கொடுத்து வாழ்நாள் முழுவதுஞ் சிவாலயத் திருப்பணியே கண்ணாகக் கொண்டிருந்து தில்லையம்பலவர் திருவடி நிழற்கீழ் அமர்ந்தார் என நிறைவுறுகின்றது இந்த நாயனாரின் புனித வரலாறு.

முன்னைப் பிறப்பில் திருவானைக் காவில் தாம் புரிந்த சிவப்பணிக்கு யானை இடையூறு விளைத்தது போல் இப்பிறப்பில் தாமமைக்குந் திருக்கோயில்களிலும் அகஸ்மாத்தாக யானை புகுந்து தீங்கு விளைக்குஞ் சார்பினைத் தடுக்கு முகமாக இந்த நாயனார் யானை உட்புகுதற் கியலாத கோயில்களாம்படியான மாடக் கோயில்களாகத் தமது திருக்கோயில்கள் எல்லாவற்றையும் அமைத்திருத்தலும் முன்னறிந்து பிறந்து மண்ணாள்வார் என இவர் பற்றிச் சேக்கிழார் நாயனார் கூறியுள்ள இலக்கணத்துக்கு நிதர்சனமாகும்.

2. நாயனார் திருமுறைகளிற் பெருக இடம் பெறல்

இவர் அமைத்த மாடக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாதலால் தலச்சிறப்போடு இவர் சிவப்பணி மாண்பும் பாடற் பொருளாயிற்று. தேவார ஆசிரியர் மூவர் பாடல்களிலும் அது காணப்படும். அது, திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தில், "மையகண் மலைமகள் பாகமாயிருள் கையதோர் கனலெரி கனல வாடுவார் ஐயநன் பொருபுனலம்பர்ச் செம்பியர் செய்யகணிறை செய்த கோயில் சேர்வரே" (செய்ய கணிறை-கோச்செங்கணான்) எனவும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில், "சிலந்தியு மானைக்காவில் திருநிழற் பந்தர் செய்து உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக் கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே" - "சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை" - "சிலந்திதனக் கருள் புரிந்த தேவ தேவை" - "சிலந்திக் கருள் முன்னஞ் செய்தான் கண்டாய்" - "புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயினூலாற் புதுப்பந்த ரதுவிழைத்துச் சருகான் வேய்ந்த சித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்து சிவகணத்துப் புகப் பெய்தார் திறலான் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளாவன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர்மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே" எனவும் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில், "சிலந்தி குற்றஞ் செய்யினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்" - "கருவரை போலரக்கன் கயிலைம்மலைக் கீழ்க் கதறப் பொருவிர லாலடர்த் தின்னருள் செய்த உமாபதிதான் திரைபொரு பொன்னிநன் னீர்த்துறைவன் திகழ் செம்பியர்கோன் நரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே" எனவும் வரும்.

இவற்றிற் பெரும்பாலனவற்றில் நாயனார் சிலந்தி என்றே சுட்டப்படுதல் முன்னைச் சிவ புண்ணிய வாசனையாற் பின்னைச் சிவபுண்ணியம் வீறெய்தும் என்னும் நயம்பற்றியாம்.

திருச்சிற்றம்பலம்.

Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment