Sundarar Nayanar - Part 2 - Nayanmar 63
தொகுதி - 2
வெள்ளானைச் சருக்கம் சூசனம்பண்டிதர் மு. கந்தையா எழுதியதுதிருவருள் கூர்ப்படைந்து அற்புதம் விளையுஞ் சூழ்நிலை இத்தகைத் தெனல் சிவபெருமானால் அறிமுகப்படுத்தப்பட்டுச்
சேரமான் தோழருமாய் விளங்கிய நம்பியாரூரர் தம் சிவயோக முதிர்விற் சிவபோகம்
விளையும் பக்குவ மெய்துதலும் அத்துறையில் அவ்வகையிற் பரிபாகம் பெற்றிருந்த
சேரமானை ஒருநாள் மிகவும் நினைந்து அவர் பதியாகிய கொடுங்கோளூரை நோக்கிப்
பயணஞ் செய்கையில் திருஅவிநாசி என்னும் பதியினூடாகச் செல்வாராயினர். அங்கு
வீதியில் எதிரெதிரா யிருந்த வீடுகளிரண்டில் ஒன்றில் உபநயனச் சடங்கு
மங்கலமும் மற்றதிற் பழஞ்சலிப்பு அழுகை அமங்கலமும் நிகழ்ந்து கொண்டிருக்கக்
கண்டு அதிசயித்து விபரம் விசாரித்துக் கொண்டிருக்கையில் அமங்கலம் நிகழ்ந்த
வீட்டு வேதியரும் மனைவியாரும், தம்மெதிர் வரவே "மகனை முதலை வாய்க்
கொடுத்திழந்தீர் நீவிரோ" என நம்பியாரூரர் வினாவியதும் அது பழையகதை ஐயா
அதைப்பற்றி இப்போ பிரஸ்தாபிப்பானேன். உங்கள் மகிமை பற்றிக் கேள்விப்
பட்டெழுந்த நேசத்தால் உங்களைக் கண்டு தொழ வேண்டுமென வெகுநாள்
ஆவலாயிருந்தோம். அந்த அன்பு பழுதாகா வண்ணம் நீங்களாகவே எம்மிடத்துக்கு
எழுந்தருளப் பெற்றோம்" என இருவரும் ஒரே குரலாகக் கூறி ஆனந்தக் கண்ணீர்
துளித்தனர். "இவர்கள் தம் உள்ளத்துயரைப் புறந்தள்ளிவிட்டு எம்மைத்
தரிசிக்கப் பெற்றதற்கே மகிழ்ச்சிப் பரவசமடையும்
மெய்யன்பர்களாயிருக்கிறார்களே" என அப்போது நம்பியாரூரர்க்கு ஏற்பட்ட அதிசய
உணர்ச்சி அவர்கள் பேரில் அவர்கருணையுணர்வைக் கூர்ப்பித்து விடுவதாயிற்று.
அது சேக்கிழார் வாக்கில், "துன்ப மகல முகமலர்ந்து தொழுவார் தம்மை முகநோக்கி
இன்ப மைந்தன் தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி முன்பு புகுந்து போனதது
முன்னே வணங்க முயல்கின்றோம். அன்பு பழுதா காமலெழுந் தருளப் பெற்றோம் எனத்
தொழுதார்" - "மைந்தன் தன்னை இழந்ததுயர் மறந்து நான் வந்தணைந்ததற்கே
சிந்தைமகிழ்ந்தார் மறையோனும் மனைவிதானும் சிறுவனை யான் அந்த முதலை
வாய்நின்று மழைத்துக் கொடுத்தே யவிநாசி எந்தை பெருமான் கழல் பணிவேன்
என்றார் சென்றா ரிடர்களைவார்" என வரும்.
மகன் விஷமேறித் திடீரென்றிறந்ததா
லுளதாகக் கூடிய தமது உள்ளத்துயரைப் புறந்தள்ளிவிட்டு அன்றைய அப்போதைய
நியமப்படி அப்பர் சுவாமிகளுக்கு அமுதூட்டுதலில் மகிழ்ச்சி பூர்வமாக
முனைந்து நின்ற அப்பூதியடிகள் தம்பதிகளின் மெய்யன்புத் திறத்தின் பேரில்
சுவாமிகள் கருணை கூர்ந்தெழுந்த நிலை போல்வதே இதுவுமாம். நம்பியாரூரர்
அக்கருணை வசத்தினராய் அவிநாசியப்பர் திருவருளை வேண்டி, "புக்கொளியூர்
அவிநாசியே கறைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே" எனப் பாடுதலுந்
திருவருள் கூர்ப்படைந்து அதன் விளைவாக அந்தணச் சிறுவன் அன்றளவிலுந் தான்
பெற்றிருக்க வேண்டுவதான பூரண வளர்ச்சிப் பொலிவுடன் அதே முதலை வாயிலிருந்து
வெளிவந்த செய்தி பிரசித்தமானது. தெய்வ அருளற்புதத்தினாற் காரியப் பேறாதல்
என்ற விஷயம் என்றும் எங்கும் இத்தன்மைத்தேயாம். அதாவது, சம்பந்தப்பட்டோர்
தமதின்னலை முற்றாக மறந்து விடுமளவுக்குச் சிவ நினைவி லீடுபட்டொன்றுதலேயாம்
என்பது அறிந்து கடைப் பிடிக்கத் தகும்.
2. உயிர்த் தோழமைப் பண்பு விசேடம் இதுவெனல் ஒருவரோ டொருவர் கூடியிருத்தலும் பலகாற்
சந்தித்துக் கலந்து பேசிப் பழகுதலுமாகிய புணர்ச்சி பழகுதல் மாத்திரம்
உண்மை நண்பிற்குக் காரணமாதல் அமையாது ஒருவரையொருவர்
இன்றியமையாதவராயிருக்கப் பெறும் உணர்ச்சி விசேடமே அதன் சிறந்த காரணமாதல்
அமையும். அது திருவள்ளுவர் வாக்கில், "புணர்ச்சி பழகுதல் வேண்டா
உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்" எனவரும். பழந்தமிழ்ச் சான்றோருள் அவ்வித
உணர்ச்சிவழி நண்பினுக் குதாரணமாக நிறுவப்படுவோர் கோப்பெருஞ் சோழனும்
பிசிராந்தையாருமாவர். அவர்தம் உணர்ச்சியும் ஒருவர் உயிர் பிரியக் கேட்ட
மாத்திரத்தில் மற்றவரும் உயிர்பிரிதல் அளவினதாகவே அறியப்பட்டுள்ளதாகும்.
இங்ஙனம் வெறுமனே உயிர் பிரிதலளவுக்கல்லாது உயிர் பிரிதலின்றியே இருவரும்
ஒருசேரக் கைலையடையும் வகையிற் பலன் விளைத்த நம்பியாரூரர் சேரமான் நண்பு
அவ்வுணர்ச்சி நண்பினும் பலமடங்கு சிறந்ததாதல் சொல்லாமே யமையும்.
அத்திறத்தால் அது உயிர்நண்பு அல்லது உயிர்த்தோழமை என்றே கொள்ளப்படும்.
அவ்விருவரில் ஒவ்வொருவருக்குஞ் சிவாநுபவ விளக்கம் மிகுவித்தலாகிய ஆத்மிக
உயர்நலனைத் திருவுளங் கொண்டே சிவபெருமான் முன்னின்று அவர்களை நண்புறவு
பூணவைத்தார் என்ற அந்தரங்கமும் இதனால் விளங்கற் பாலதாம்.
கொடுங்கோளூர் சென்றடைந்த நம்பியாரூரர்
அங்கு, "ஒருவ ரொருவரிற் கலந்து" பூரித்தாற் போன்ற உயர் பெரும் நண்புறவிற்
கலந்து சேரமானுடன் தங்கியிருக்கையில் ஒருநாள் ஒரு கணம், தாம் உலகியல்
தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுதற்கு உரிய தருணம் வந்துவிட்டதாக அவர்
முன்னுணர்விற் படுதலும் உடனடியாகவே அங்குள்ள திருவஞ்சைக்களத்
திருக்கோயிலிற் சென்று வணங்கி அது குறித்துத் தேவாரத் திருப்பதிக மூலம்
விண்ணப்பித்துக் கொண்ட மாத்திரத்தே செய்திப் பரிவர்த்தனைக்காந் தெய்விக
விதிமூலம் அது கைலைக் கெட்டுதலும் தாமசமின்றியே தம்மையேற்றிச் செல்ல
அங்கிருந்து வெள்ளானையும் வந்துவிடக் கண்டதுமே வேறெதற்கும் அவகாசமின்றி
அதன்மேலேறிக் கொண்ட அவ்வவசர சூழ்நிலையிலும் தற்செயலாக அந்நேரம்
அவ்வயலிலில்லாது போன சேரமானை நினையத் தவறிற்றிலர். மெய்ஞ்ஞானிகளிடையிற்
செய்திப் பரிவர்த்தனை நிகழ்தற்கான அத்யாத்ம யோக விதிப்பிரகாரம் தூர எங்கோ
நின்றும் அதனைத் தெரிந்து கொண்ட சேரமானும் அக்கணமே அடுத்து நின்ற
குதிரையொன்றேறி, அட்ட கன்ம சாதனைக்குரிய முறையில் அஞ்செழுத்தை அதன்
செவியிலோதி அதனோடு மேலெழுந்து விண்வழி விரையும் வெள்ளானையை முந்திக்கொண்டு
அன்பும் நண்பும் அமர நம்பியாரூரரைச் சேவித்துச் செல்லத் தவறிற்றிலர்.
இவ்வகையில் அவ்விருவரும் தம் உடலுருவம் இருக்கத்தக்கதாகவே ஒருங்குறக் கைலை
சேர்ந்ததுமன்றி அங்குங் கைலாச பதியருளால் இருவரும் ஒரே பதவியிலேயே
நிலைபெறுவாரு மாயினர். கைலையடைதற் கப்பாலுந் தொடர்வதோர் அற்புதமான உயிர்த்
தோழமைப் பண்பிருந்தவா றிவ்வாறாம்.
அவ்விருவரும் உற்ற உருவுடனேயே
கைலையடைந்தார்கள் என்பது "ஞானவாரூரரைச் சேரனையல்லது நாமறியோம் மானவ யாக்கை
யொடும்புக்கவரை வளரொளிப் பூண் வானவ ராலு மருவற்கரிய வடகயிலைக் கோனவன்
கோயிற் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே" என்பதாகத் திருத்தொண்டர்
திருவந்தாதி கூறுதலானும் வலுவுறும். அற்றேல் அசுத்தமாயை எனப்படும்
பிரகிருதி மாயாபுவனத்திற்கேற்க அமைந்த மானவ சரீரம் சுத்தமாயா புவனத்ததாகிய
கைலைக் கேற்புடைத்தாமாறி யாங்ஙன மெனின், அவர்கள் இருவரும் பரமசிவ
யோகிகளாதலால் சிவயோக ஆற்றல் காரணமாக அவர் திருவுடல்களின்
பிரதிகிருதித்தன்மை மெல்ல மெல்லக் கெட்டு அவர்க்காம் ஆத்மிக விளக்க
ஆற்றலாலே மேலும் அவ்வுடல் கைலைக் கேற்புடைத்தான ஒளியுடலாதல் சம்பவிக்கக்
கூடிய தொன்றாமாதலிற் பொருந்துமென்க. அது, கைலை செல்லும் வழியில்
நம்பியாரூரர் அருளிச் செய்து வருணன் மூலம் அஞ்சையப்பர்க்கு அஞ்சல்
செய்யப்பட்டுள்ள (ஆழி கடலரையா அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே)
திருப்பதிகத்தில், "ஊனுயிர் வேறு செய்தான் நொடித் தான்மலை உத்தமனே" என
வருவதனாலும் வலுவுறும். ஊன் வேறுசெய்தல்-உடலியல்பைப் பிரகிருதித்தன்மை
மாற்றி ஒளியுடலாக்கல். உயிர் வேறு செய்தல்-உயிரின் ஏகதேச அறிவுநிலையை
வியாபக அறிவுநிலையாக்கலும் வரம்புட்பட்ட அநுபவநிலையை வரம்பிலா
அநுபவநிலையாக்கலும் எனக் கொள்க. மேலும், கைலை சேர்கையில் நம்பியாரூரர்
திருமேனி பேரொளிமயமாகவே யிருந்ததென்பது, அவ்வேளை கைலைமலைச் சாரலில் இருந்த
உபமன்னிய முனிவர் அவ்வொளியின் தாற்பர்யங் கேட்ட தம் சீடர்களுக் குரைத்ததாக
முன் திருமலைச் சருக்கத்தில் வந்துள்ள வாற்றானும் வலுவுறுவதாம். அது,
அங்கணோரொளி ஆயிரஞாயிறு பொங்கு பேரொளி போலமுன் தோன்றிடத் துங்கமாதவர்
சூழ்ந்திருந்தாரெலாம் இங்கிதென்கொ லதிசய மென்றலும்" - "அந்திவான் மதிசூடிய
அண்ணல் தாள் சிந்தியா நினைந்தம்முனி தென்றிசை வந்தநாவலர் கோன்புகழ்
வன்றொண்டன் எந்தையாரரு ளாவணை வானென" என வரும். இவ்விதம் நூற்பொருள் முதலும்
முடிவும் மாறுகோளின்றியிருக்குஞ் சிறப்புங் கூட இதனாற் குறித்துணரப்படும்.
3. சிவபிரான் தொண்டரை விளக்கங் காணுதல் இப்படியுமாமெனல் திருத்தொண்டர்களை அவரவர் நிலைக்குப்
பொருத்தமான ஏதேனுமோர் வகையில் விளக்கங் காணுதல் சிவபிரான் திருவருட்
பண்பாதல் திருத்தொண்டர் வரலாறுகள் பலவற்றில் வைத்தறியப்படும். அது,
"மன்றுளே திருக்கூத்தாடி யடியவர் மனைகள் தோறுஞ் சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர்" எனத் திருநீலகண்ட நாயனார் புராணத்திலும் "மாயவண்ணமே கொண்டு
தந்தொண்டர் மாறாதவண்ணமுங் காட்டுவான் வந்தார்" என இயற்பகை நாயனார்
புராணத்திலும் "தொண்டரன்பெனுந் தூநெறி வெளிப்படுப்பாராய் வந்தமர் நீதியார்
திருமடங்குறுக" என அமர்நீதி நாயனார் புராணத்திலும் "தன்னுடைய தொண்டர்தந்
தனித்தொண்டர் தம்முடைய அந்நிலைமை கண்டன்பர்க் கருள் புரிவான் வந்தணைவான்"
எனத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்திலுஞ் சேக்கிழார்
விதந்தெடுத்துக் காட்டியுள்ளவாற்றானும் பெறப்படுவதாம். இங்ஙனந் தொண்டர்கள்
பலரைப் பலவிதங்களிற் சிவ பெருமான் விளக்கங் கண்டுள்ளாரேனும்
எல்லாவற்றிற்கும் பொதுப்பண்பாக அறியக்கிடப்பது யாதெனில், சம்பந்தப்படுந்
தொண்டர் தமது அடிமைத் தொண்டில், திருவருள் நெறி திறம்பாமல் நிற்றலை உறுதி
செய்து கொள்ளுந் தன்மையாகும். ஆனால், மேற்குறித்த வகையில் தொண்டர்களை
அவரவரிடங்களுக்குச் சென்று விளக்கங் காணுதல் போலாது சேரமான் பெருமாள்
நாயனாரைச் சிவபெருமான் மற்றொரு வகையில் விளக்கங் கண்டுள்ள செய்தி
வெள்ளானைச் சருக்கத்தில் இடம்பெறும்.
நம்பியாரூரருஞ் சேரமானும் ஒருங்கே
கயிலை எய்திய போதும் நம்பியாரூரர் நேரடியாகவே திருவணுக்கன் திருவாயில்
தாண்டிக் கைலாசபதியின் சந்நிதியிற் புகச் சேரமான் தடையுண்டு வாயிற் புறத்தே
நிற்கும்படி யாயிற்று. மேல், "நின்மலர்க்கழல் காணச்சென்று சேரலன்
திருமணிவாயிற் புறத்தினன்" என நம்பியாரூரரால் விண்ணப்பிக்கப் பட்டதைத்
தொடர்ந்தே நந்தி தேவர் மூலம் அவர் உட்புகுவிக்கப் பெற்றார். உட்புகுந்த
அளவில், "இங்குநா மழையாமை நீ எய்தியதென்?" என்ற விசாரணை கைலாச பதியின்
திருவாயிலிருந் தெழுவதாயிற்று. அதற்கு விளக்கமளிக்குஞ் சேரமான்,
"நம்பியாரூரர் திருக்கைலைக் கெழுந்தருளுகையில் அடியேன் எனது நண்புரிமைப்
பணி மேற்கொண்டு அவர் யானைமுன் சேவித்து வந்தேனாக இங்குப் பிரவாகிக்கும்
நின் கருணை வெள்ளம் அலைத்தடித் தீர்த்தமையின் திருமுன்பு புகப்பெற்றேன் என்
பாசபந்தம் நீங்குமாறு நம்பியாரூரரை நான் நண்பனாகப் பெற வைத்தருளினீர்"
என்றனர். இதன்மூலம், "சிவன் எந்த ஒருநோக்கிற் சேரமானுக்கு நம்பியாரூரர்
நண்பினைக் கூட்டி வைத்தனரோ அந்த நோக்கமாகிய அடிமைத் தொண்டு நெறியிலேயே அவர்
வழுவாது நின்று நம்பியாரூரர் திருக்கைலைக் கெழுந்தருளும் போதிலும்
அந்நண்புறவுத் தொண்டினைப் பேணியதன் மூலம் சிவனை அடைந்து உய்வுற்றார் என்ற
வகையில் அவருடைய அடிமைத் தொண்டானது திருவருள் நெறியிற் பிசகாமலே
நின்றிருத்தலாகிய உண்மை விளக்கஞ் சிவபெருமானாற் கண்டருளப் பெற்றிருத்தல்
இனிதிற் பெறப்படும். இது தெரிவிக்குஞ் சேக்கிழார் வாக்கிற் சேரமான் கூற்றாக
வருவனவற்றில், "மருவு பாசத்தை யகன்றிட வன்றொண்டர் கூட்டம் வைத்தாய்"
என்பதனை "அடியனேன் ஆரூரர் கழல் போற்றிப் புரசை யானைமுன் சேவித்து வந்தனன்"
என்பதற்கு முன் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளல் மூலம் இவ்விளக்கஞ்
சித்திப்பதாகும். இங்ஙனஞ் சிவபெருமான் தொண்டரை விளக்கங் காணுந் திருவருள்
அவர்கள்பால் அயரா அன்பினை விளைத்துத் திருவடியிற் செறிவிப்பதோர்
பேருபகாரமாதல் அவரவர்க்கு நேரும் பின்விளைவுகளாற் காணப்படும்.
4. திருத்தொண்டர் புராண தாற்பரியம்
"அகண்டாகார சிவபோகமென்னும்
பெருவெள்ளம்" எனத் தாயுமான சுவாமிகளாலும் "பெயரா ஒழியாப் பிரிவில்லா
மறவாநினையா அளவிலா மாளா இன்ப மாகடல்" என மாணிக்க வாசக சுவாமிகளாலும்
இவ்வகையிற் சைவஞான மேதைகள் பிறர் பிறராலும் முன்வைக்கப்பட்டுள்ள
நிறைவானதும் நிலையானதுமான பேரின்பம் ஒன்று வற்றா ஊற்றாக என்றென்றும்
இருந்து கொண்டிருப்பதாகும். அறுதிப் பேறாக அவ்வின்பத்தை எய்துதலே அகில
உலகிலும் வாழுஞ் சகல உயிர்களினதும் இலக்காயிருக்கும் என்பது, அவற்றுள் எந்த
உயிரும் நிலையற்றதாயினும் பற்றாக் குறையானதாயிருப்பினுங்கூட ஐம்புலன்
சாரும் ஏதேனுமொரு இன்பத்தை நாடியல்லது வாழக் காணாமையாற் பெறப்படும். "எல்லா
உயிர்க்கும் இன்பமென்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்" என்ற
தொல்காப்பியச் சூத்திரத்தானும் அது வலுவுறும். இங்ஙனம் எல்லா உயிர்க்கும்
ஏக இலட்சியமாயுள்ள அப்பேரின்பம் "இன்ப காரணன்" எனப்படுஞ் சிவனிடத்த
தாகலானும் அவனாலல்லது அது எய்தப்படுமாறின்மை உண்மை நூல்களாற்
பெறப்படுதலினாலும் அவனை உரிய முறையிற் காதலிக்கும் மெய்யன்பொன்றே அவனை
வசீகரிக்குஞ் சாதனம் என வற்புறுத்தப் படுதலினாலும் மெய்யன்பினால் அவனைக்
காதலித்து அவன் தொண்டு வழிநிற்றல் ஒன்றல்லது அவ்வின்பம் பெறுதற்கு
மார்க்கம் வேறில்லையாகும். "அன்போடுருகி அகங்குழைவார்க் கன்றி என்
பொன்மணியினை எய்தவொண்ணாதே" எனுந் திருமூலர் திருமந்திரம் ஒன்றே
யிதற்கமையும். அதற்குக் கண்கண்ட சாட்சியங்களாக இந்நிலவுலகில் வாழ்ந்தவர்கள்
திருத்தொண்டர் புராணத்துச் சிவனடியார்கள் ஆதலால் அவர்கள் புகழ் இவ்வுலகில்
மங்காது நிலைத்து நிற்பதாக எனப் போற்றுதல்மூலம் உலகில் அநேகாநேகம்
பேருக்கு அவ்வநுபவப் பேறுபெறும் வாய்ப்பு நிகழ வைத்தலே திருத்தொண்டர்
புராணத்தின் தாற்பரியமாம். அது சேக்கிழார் வாக்கில்," என்றுமின்பம் பெருகு
மியல்பினால் ஒன்று காதலித் துள்ளமுமோங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி யுலகெலாம்" என வரும்.
மேற்கண்ட வாறாக இச்செய்யுளில்
"நின்றது" என்ற சொல் "நிற்க" எனும் வியங்கோள் வினைப் பொருளில் நின்றதாகக்
கொள்ளாது நிலைத்திருக்கின்றது என நேர்பொருளே கொண்டு, ஒன்றாகிய சிவனைக்
காதலித்து எக்காலத்தும் ஆன்ம (உள்ள) நலமோங்கிட அடியார் புகழ் ஒரு வைப்பு
முதலாக நின்று கொண்டிருக்கின்றது எனக் கூறிச் சேக்கிழார் பெருமான்
நூல்நிறைவில் தாம் நிறைவு பெற்றுக் கொண்டார் எனக் கொள்ளலும் அமையும்.
No comments:
Post a Comment