August 13, 2014

Sundarar Nayanar - Nayanmar 63 - 4

Sundarar Nayanar - Part 4 - Nayanmar 63

சுந்தரர் - Courtesy: Dinamalar

சுந்தரர் பிரிந்து சென்ற பிறகு பரவையார், பிரிவாற்றாமை தாளாது, எல்லையில்லாத் துன்பமடைந்தாள். அம்மையாருக்கு இரவு பகலாகவும், பகல் இரவாகவும் கழிந்தன. மனதிலே நிம்மதியென்பது கடுகளவு கூட இல்லாமற் போது. அன்பரைப் பிரிந்து தணல் மேல் புழுப் போல் துவண்டு கொண்டிருக்கும் நாளில்தான், திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரவையாருக்கு எட்டியது. பரவையார் மேலும் வேதனையும் பெருங்கோபமும் கொண்டாள். இரவும், பகலும் மாலையிட்ட மணாளனின் நினைவாகவே நெஞ்சு நெகிழ்ந்து, சிறகொடிந்த பறவைபோல்-பற்றுக்கோல் அற்ற முல்லைக் கொடிபோல்- பாலைவனத்திலே காயும் நிலவு போல்-பாய்மரம் இல்லாத மரக்கலம் போல் அவதிப்பட்டு கொண்டிருந்தாள் பரவையார். வண்டுகள் மொய்க்கும் அன்றலர்ந்த மென்மலர் தூவிய பட்டு விரித்த ரத்தின மணிக்கட்டில் நித்திரை கொள்ளாது எந்நேரமும் விழித்தேயிருந்தாள். இவ்வாறு பரவையார் வாழ்ந்து வரும் நாளிலே, தேவாசிரிய மண்டபத்திலே தங்கியிருந்த சுந்தரர், பரவையார் மாளிகைக்குச் செல்ல அஞ்சியவராய், தமது ஏவலாளர் சிலரை அனுப்பி, தமது வருகையை அம்மையாரிடம் தெரிவிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். பரவையார் மாளிகையை அடைந்த ஏவலாளர்களால், உள்ளே சென்று பரவையாரைப் பார்க்கக் கூட முடியவில்லை. எப்படியோ விஷயம் அறிந்த தோழியர்கள் தலைவியின் கட்டளைப்படி கதவடைத்து அனுப்பி விட்டார்கள். ஏவலாளர்கள் ஏமாற்றத்தோடு சுந்தரரை அணுகி, ஐயனே! தாங்கள் திருவொற்றியூரில் சங்கிலியாரோடு வாழ்ந்து வந்த வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் அம்மையார் எங்களைப் பார்க்க மறுத்ததோடல்லாமல், தோழியர்களிடம் சொல்லிக் கதவையும் தாழிடச் செய்துவிட்டார்கள் என்றனர். சுந்தரர் சித்தம் தடுமாறினார், பரவையார் பிணக்கை போக்கி, அவர்களது திருமாளிகைக்குச் செல்வதுதான் எங்ஙனம்? என்று தமக்குள் எண்ணி மனம் கலங்கினார். நெடு நேரம் சிந்தித்தார். முடிவில், உலக இயல்பினைக் கற்றுத் தெளிந்த திறமைமிக்க மாதர்களை, பரவையாரிடம் தூது அனுப்பி வைத்தார். பரவையார் மாளிகையை அடைந்த அம்மாதர்கள் பரவையாரை நேரில் சந்தித்து, தங்கள் வணக்கத்தைத் தெரிவித்து கொண்டனர். நற்றமிவக்க நங்கையே! எம்பிரானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தங்கள் நாயகர் தம்பிரான் தோழர், மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ வந்துள்ளார்கள். உங்கள் பெருமையையும் அவரது பெருமையையும் அளவிட முடியாதது. அங்ஙனமிருக்க, நீங்கள் உங்கள் நாயகர் மீது இவ்வாறு ஊடல் கொண்டு, பிணக்கம் கொள்வது நம் பண்பிற்கு ஒவ்வாதது. இறைவனின் அருளால் மீண்டும் கண்களைப் பெற்றது உங்களை எண்ணி மனம் உருகிக் கண்ணீர் வடிப்பதற்கல்ல; உங்கள் அழகு நடனத்தையும், ஒளிமிக்க கமலவதனத்தையும் கண்டு களிப்பதற்காகத் தான். அதனால் அம்மையார் எங்கள் பொருட்டாவது ஐயன் மீது கொண்டுள்ள கோபத்தை தணித்து கொள்ளுங்கள் என்று பலவாறு அம்மாதர்கள் கூறினர். அவர்களது அறிவுரைகளைப் பரவையார் சற்றும் செவிமடுக்கவில்லை. என்னை மறந்து, வேறு பெண்ணை மணம் செய்துகொண்டு, எனக்குத் தீராத துயரத்தையும் ஆறாத கவலையையும் அளித்த அவரது குற்றத்தை மறைக்க நீங்கள் எவ்வளவுதான் அறிவுரைகள் பகர்ந்தாலும் என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. நீங்கள் மேலும் மேலும் பேசிப் பேசி என் மனதை புண்படுத்துவீர்களானால் நான் உயிரை இழப்பது திண்ணம். தயவு செய்து  போய்விடுங்கள் என்று ஒரேயடியாக, சினத்தோடு மறுத்து அவர்களைத் திரும்ப அனுப்பி விட்டார் பரவையார். பரவையார் பேச்சிற்கு மறுமொழி பேசாமல், ஏமாற்றத்தோடு வெளியே வந்த மாதர்கள், சுந்தரரிடம் நிகழ்ந்தவை அனைத்தையும் கூறிச் சென்றனர். சுந்தரர், மன சோர்வுற்றார். இரவு கழிந்து கொண்டேயிருந்தது. நடு ஜாமம் வந்தது. இருந்தும் சுந்தரருக்கு உறக்கம் சற்றுகூட வரவில்லை. அவருடன் சூழ்ந்திருந்த அன்பர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.  கவலை தோய்ந்த முகத்தோடு, இறைவனைத் தியானித்த வண்ணம் கண்விழித்திருந்த சுந்தரர், தமது குறையை இறைவனிடம் முறையிடுவது என்று எண்ணினார். சுந்தரர், ஒளி கொடுத்த திங்கள் வளர்நாயகரைப் பணிந்து, என்னைத் தடுத்தாட்கொண்ட தம்பிரானே! அன்பர்க்கு அன்பனே! எமக்கு தேவரீர் இப்படியும் ஒரு சோதனையைக் கொடுத்து திருவிளையாடல் புரியலாமா? முன்வினைப் பயனால், இப்பிறப்பில் தேவரீர் அருளோடு மணம் புரிந்து கொண்ட பரவையார் என்னைத் திரும்ப ஏற்க மறுப்பதைத் தாங்கள் அறியாததல்லவே! எம்பிரானே! பரவையாருக்கு எம்மோடுள்ள பிணக்கை போக்கி உய்யும் வழிசெய்யும் திறத்தவர் உம்மையன்றி வேறு எவர் எனக்குள்ளார்? விண்ணவர்களுக்காக விடமுண்ட நீலகண்ட நாயகரே! இந்நடுராத்திரியில் இவ்வடியேனுக்காக இங்கு எழுந்தருளி, காத்தருளலாகாதா? என்று வேண்டினார். அக்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள பரம் பொருளான கயிலையரசன், சுந்தரரின் துயரத்தைத் தீர்க்க திருவுள்ளம் கொண்டார். அந்த நள்ளிரவு நேரத்தில் எம்பெருமான் சுந்தரர் முன்னால் பேரொளிப் பிழம்பாகக் காட்சி அளித்தார். சுந்தரர் பக்தி வெள்ளம் போல் பெருக, இறைவனது சேவடிகளைப் பணிந்து போற்றினார். புற்றிடங்கொண்ட பெருமான், தம்மைப் பற்றிக் கொண்ட தோழருக்கு அருள் செய்து, அன்பனே! இந்த நடு ஜாமத்தில் அபயக்குரல் எது கருதி? அப்பனே! உனக்கு நேர்ந்ததுதான் என்ன? என்று ஒன்றுமறியாதவரைப் போல் கேட்டார். இறைவன் இவ்வாறு கேட்டதும் தம்பிரான் தோழர் உடல் நடுங்க, மெய்சிலிர்க்க, பித்தா! பிறைசூடி! பெருமானே! அன்பர் மனங்களில் எந்நேரமும் எழுந்தருளியிருக்கும் அருளாளா! தயாபரா! நீ அறியாததொன்றில்லையே! உமது சக்தியில்தானே அகில உலகமும் சுற்றிச் சுழலுகிறது.
சங்கரா! எனக்கு இன்று ஏற்பட்டுள்ள துன்பத்தைப் பொறுத்து ஆட்கொள்ள வேண்டியது தேவரீருடைய கடமையாகும். ஐயனின் ஆணைப்படி மகிழமரத்தின் கீழே சபதம் செய்து சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டு நான் திருவொற்றியூரில் வாழ்ந்த செய்தி எப்படியோ பரவையாருக்கு எட்டிவிட்டது. அதனால், பரவையார் என் மீது கோபம் கொண்டுள்ளதோடல்லாமல், என்னால் தனது உயிரையே இழப்பதாகவும் கூறுகிறாளாம். இந்த எளியோன் தேவரீரின் அடியேன்! ஐயன்தான் எனக்குத் தாயும் தந்தையும்! துன்பக் கடலினின்றும் நீந்திக் கரையேறுவதற்குரிய மரக்கலம் இல்லாது மனம் கலங்கும் என்னைக் காக்க வேண்டும். இவ்விரவிலேயே, இவ்வெளியேனுக்காகப் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி, என் நிலையை விளக்கி, அவளுடைய கோபத்தைத் தணித்து எம்மோடு கூடி வாழச் செய்திடல் வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொண்டார். சுந்தரா! கவலையை மறப்பாயாக! நான் இப்பொழுதே பரவையாரிடம் தூது சொல்கிறேன் என்று மொழிந்தார் பரமன். அந்த அருள் வார்த்தையிலே சிந்தை குளிர்ந்த சுந்தரர் எல்லையற்ற உவகையோடு, ஐயனே! பரவையார் மாளிகைக்கு விரைந்து சென்று அவரது ஊடலைத் தீர்த்து கூடல் கொள்ளச் செய்து வருவீராகுக! என்று மீண்டும் அன்புக் கட்டளையிட்டார். எம்பெருமான், அந்த அர்த்தயாம வேளையில் தமது திருவடிகள் நிலவுலகில் பொருந்தப் பரவையார் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். விண்ணிலிருந்து மலர்மாரி பொழிந்தவண்ணமாகவே இருந்தது. எம்பெருமானைப் பின் தொடர்ந்து தேவாசிரிய மண்டபத்திலே எழுந்தருளியுள்ள அமரர்களும், சிவகணங்களும், அருந்தவசிகளும், நந்தியெம்பெருமானும், குபேரன் முதலானோரும் பரமனைத் துதித்தவாறு பின்னால் சென்றனர். திருவாரூர் சிவலோகம் போல் காட்சி அளிக்க, சிவனார் மணிவீதி வழியாக தூது புறப்பட்டார். அவருடைய திருச்சடையைச் சுற்றி விளையாடும் பாம்புகளும், மாணிக்க ஒளி வீசத் தொடர்ந்து படமெடுத்துப் பின் வந்தன. இளம்பிறை நிழலில் மலர்ந்துள்ள கொன்றைப் பூக்களில் தேன் பருகும் வண்டுகளும், ரீங்காரம் செய்த வண்ணம் தொடர்ந்து வந்தன. கூடவே சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனமும் பின் தொடர்ந்தது. வேதங்கள் பின்தொடர, பரவையார் மாளிகையை அடைந்த இறைவன், அனைவரையும் புறத்தே தங்குமாறு ஆணையிட்டு விட்டு, தாம் மட்டும் ஓர் அர்ச்சகரைப் போல் வடிவம் கொண்டு, மாளிகையை அடைந்தார். உள்ளே தாழ்போட்டுள்ள கதவைத் தட்டியவண்ணம், பரவையே! கதவினைத் திறந்திடுவாய்! எனச் செம்பவளவாய் திறந்து அழைத்தார் அம்பலவாணர். உறக்கம் வராமல் மலர் மஞ்சத்தில் படுத்திருந்த பரவையார் திடுக்கிட்டு எழுந்தார். அர்ச்சகரின் குரலோசை கேட்டு அம்மையார், இந்த அர்த்த ஜாமத்தில் நம்மைத் தேடி அர்ச்சகர் வரவேண்டிய காரணம் என்ன? என்று எண்ணியவளாய் விரைந்து வந்து கதவைத் திறந்தாள். அர்ச்சகர் வடிவில் வந்துள்ள இறைவனை வணங்கி, வரவேற்ற பரவையார், ஊர் உறங்கும் இவ்வேளையில் தேவரீர் இவ்வடியாளின் இருப்பிடத்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ? என்று பணிவன்புடன் கேட்டாள். பரவையே! வந்த காரணத்தைக் கூறுவேன்; ஆனால் நீ மட்டும் மறுக்காமல் எமது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆணையிடுங்கள் சுவாமி! பரவையே கேள்! சுந்தரர் சற்றுத் தவறியதற்காக நீ அவரை முற்றும் வெறுத்து இங்ஙனம் ஊடல் கொள்வது முறையாகாது. உனது பிரிவினால் மிக்கத் துயருரும் நாவலூர் நம்பி உன் நினைவாகவே தேவாசிரிய மண்டபத்தில் வந்து தங்கியுள்ளார். அவர் மீண்டும் இங்கு வந்து உன்னோடு கூடி வாழ்தல் வேண்டும். இதற்கு நீ இசைந்து விடுவதுதான் நல்லது. நன்று! நன்று! தாங்கள் செப்புவது! சிவத்தலங்களை தரிசிக்கப் போகிறேன் என்று என்னிடம் விடை பெற்றுச் சென்றார். எப்படியும் பங்குனித் திருநாள் அன்று விரைந்து வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். அவரோ திருவொற்றியூரில் சங்கிலியார் என்னும் பெண்ணை மணந்து வாழ்ந்துள்ளார். இனிமேல் அவருக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இதற்காகவா, இந்த இரவு வேளையில் தாங்கள் இங்கு வந்தீர்கள்? பரவையே! கோபம் தணிந்து, உன் நாயகனின் குற்றத்தைப் பொறுத்துக் கொள், என்று நான் எடுத்துச் சொல்வது உனக்கு புரியவில்லையா? நங்கையே! என் பொருட்டாவது சுந்தரரை ஏற்றுக் கொள்ளலாகாதா? அதுதான் உனக்கு தகுதியான செயலும் கூட.
ஐயனே! இவ்வாறு திரும்ப திரும்ப என்னிடம் கதை கூறுவது தங்கள் பெருமைக்கு ஒருபோதும் ஒவ்வாது. இதற்கு நான் இணங்கப்போவதாக இல்லை. தயவுசெய்து போய் வாருங்கள் என்று கடுமையாக, தமது முடிவான பதிலைக் கூறினாள். அதற்குமேல், பரவையாரிடம் வாதாட விரும்பாத அரனார் அவளிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். எம்பெருமானை, பரவையார் மாளிகைக்குத் தூதராக அனுப்பிவிட்டு, அவரது வரவை எதிர்பார்த்திருந்த சுந்தரர், கங்கையை முடித்த சங்கரா! சற்றும் அறிவில்லாத இவ்வடியேன், தங்கள் திருப்பாதம் நோகுமாறு இப்பாதி இரவு வேளையில், பரவை மாளிகைக்கு அவளது புலவி தீர்த்துவரும் பொருட்டு தூதராக அனுப்பிவிட்டேனே! நான் செய்த இப்பொல்லாத பிழைக்கு மன்னிப்பே கிடையாது. இதற்கென்று தங்களை வணங்கி வேண்டினேனே! அபச்சாரம்! என் ஐயனுக்கு எவ்வளவு கொடிய பாவத்தை செய்துவிட்டேன் என்று வாய்விட்டுக் கதறி வருந்தினார். உடனே பரவையார் நினைவு ஏற்படவே, பரவையார் மாளிகையில், இறைவன் எப்படியும் எனக்காக வாதாடி, அவளது இசைவினைப் பெற்றே மீளுவார்; கண்டிப்பாக பரவையாரது சிறு ஊடலைத் தீர்த்து விட்டுத்தான் வருவார் என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டார் சுந்தரர். நேரம் நகர்ந்து கொண்டேயிருந்தது. சுந்தரர்க்கு ஓரிடத்தில் இருப்புக் கொள்ளவில்லை. அப்படியும் இப்படியுமாக அல்லல் பட்டுக் கொண்டிருந்தார். எம்பெருமான் வரும் வழியே தமது விழியையும் மனதையும் செல்லவிட்டார். அந்த நிலையில் மன்மதனின் மலர்க்கணை, மாரி போல் சுந்தரர் மீது பொழிந்தன. அவை மேலும் துன்பத்தைக் கொடுத்தன. இத்தருணத்தில் இறைவன், அர்ச்சகர் கோலத்தை மறைத்து பிறையணிந்த அண்ணலாக சுந்தரர் முன்னால் தோன்றினார். அணையை உடைத்துக் கொண்டு பாய்ந்து ஓடிவரும் வெள்ளப் பிரவாகம் போல் சுந்தரர், ஆசை பொங்கிப் பெருகி வர, எம்மை ஆட்கொண்ட அண்ணலே! இந்தப் பாதி இரவில் மலர்ப்பாதம் நோக பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி, எமக்காக வேண்டி அவளது பிணக்கைப் போக்கி வெற்றிப் பெருமிதத்தோடு எழுந்தருளியுள்ளீர்களே சுவாமி! ஐயனின் கருணையை என்னென்பேன்! என்று அகமும் முகமும் மலரக் கூறினார்.
சுந்தரர் செப்பியது கேட்டு செஞ்சடை வண்ணர், சுந்தரா! உன் ஆற்றலையும், அருந்திறத்தினையும் அளவிட முடியாத அளவிற்கு அடுக்கடுக்காக எடுத்துக் கூறினேன்.  அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. பரவையார் எமது மொழியைச் செவிசாய்க்க மறுத்து, வெறுப்போடு என்னைத் திரும்ப அனுப்பி விட்டாள் என மொழிந்தார். முக்கண்ணர் அருளியதைக் கேட்டு மனம் கலங்கிய சுந்தரர், நடுக்கமுற்று கண்கலங்கி, கரங்கூப்பி வணங்கியவாறு, தேவரீர் திருமொழியை மறுக்க வல்லவள் பரவையார் அல்லவே! ஐயன் அருள் கூர்ந்தால் அகிலத்தில் ஆகாதது ஒன்றில்லையே! தேவரீர்! இதற்காகவா வலிய வந்து எம்மை தடுத்தாட் கொண்டீர்கள்? முப்புரம் எரித்த மறையவனே! அமரர் வாழ ஆலகால விடமுண்ட அருமாமணியே! பாலனுக்காகக் காலனை உதைத்து, மார்கண்டேயன் என்னும் தொண்டனை அடிமை கொண்டருளிய அம்பலத்தரசே! என் மீது மட்டும் தங்கள் அருட்கண் மலரவில்லையா? சுவாமி! எம்மை வேண்டத்தகாதவன் என்று கருதி, திரும்ப வந்து விட்டீர்களோ? இறைவா! எனக்காக வேண்டி மீண்டும் ஒருமுறை பரவையாரிடம் சென்று அவளது சினத்தைப் போக்குவீர். எனது நோயையும், துயரத்தையும் நேரில் கண்டும், உமது திருவுள்ளம் இரங்கவில்லையா? இன்றிரவு ஐயன் அருள் செய்து என்னைப் பரவையாரோடு சேர்க்காவிட்டால் என்னுயிர் நீங்கி விடும் என்பது மட்டும் உறுதி என்று புலம்பி கண்ணீரால் எம்பெருமானின் பாதகமலங்களைக் குளிரச் செய்தார். தமது திருவடிகளில் சரணமென்று வீழ்ந்து பணிந்து கிடக்கும் சுந்தரரை அருளோடு பார்த்த எம்பெருமான், சுந்தரா எழுந்திரு! வருந்தாதே! உன் துயரத்தை நான் உணர்வதுபோல், எப்படியும் பரவையையும் உணருமாறு செய்கிறேன். மீண்டும் உன் பொருட்டு அவளிடம் சென்று வருகிறோம். கவலையை மறந்து திடமாக இரு. என்று மதுரமொழிபகர்ந்தவாறு பரவையார் மாளிகைக்கு மீண்டும் புறப்பட்டார் சங்கரர்! அர்ச்சகர் வடிவில் வந்த அரனார் சென்ற பிறகு பரவையார் மனதில் எதனாலோ, இனம் தெரியாத ஒருவித கலக்கம் ஏற்பட்டது. அந்தணர் வடிவுடன் எழுந்தருளியவர் திருவாரூர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானே தான் என்ற உண்மையயை பரவையாருக்கு உணர்த்துவது போல் வியக்கதக்க  நிகழ்ச்சிகள் பல பரவையார் மாளிகையில் தோன்றின. அது கண்ட பரவையார் மனம் திருக்கிட்டாள். எம்பெருமானுக்கு பெரும் பிழை இழைத்து விட்டோமே! ஐயோ! அபச்சாரம் நடந்துவிட்டது, கெட்டேன்! என் நாயகருக்காக, சிவவேதியர் கோலத்துடன் வந்தணைந்தவரை இன்னாரென்று அறியமுடியாத அளவிற்கு என் அகக் கண்களும், புறக்கண்களும் குருடாகிவிட்டனவே! பரமனுக்கு பெரும் துன்பத்தை கொடுத்த பாவியாகிவிட்டேனே! என்று பலவாறு கருதிப் புலம்பி, நிலை தளர்ந்து தோழியர்களுடன் உறக்கமின்றி வாயிலை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள் பரவையார். அது சமயம் இறைவன் மீண்டும் பூதகண நாதர்கள் சூழ, பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார். பரவையார் விரைந்து சென்று பரமனின் பொற்பாதங்களை வணங்கி, வரவேற்று எதிர்கொண்டு மாளிகையுள் அழைத்துச் சென்றாள். பரவையார் மாளிகை, மகாதேவனின் அருள் ஒளியினால் திருக்கயிலாயத் திருமாமலைபோல் ஜெகஜோதியாகப் பிரகாசித்தது.பரவையார் கரமிரண்டையும் தாமரை குவித்தாற் போன்று சிரமீது தூக்கியவண்ணம், கண்களில் நீர்மல்க, அஞ்சி நடுநடுங்கி நின்று கொண்டிருந்தாள். பெருமான், பரவையாரை திருநோக்கம் செய்தார். பரவையே! என் தோழனான நம்பியாரூரன் எம்மை அடிமைகொண்ட உரிமையால், தூதராக ஏவ, மீண்டும் இப்பொழுது உன்னிடம் வந்துள்ளோம்! முன்போல் இம்முறையும் மறுத்துவிடாதே! உனது பிரிவால் என் தோழன் சொல்ல முடியாத நிலையில் அளவு கடந்து வருந்துகின்றான். நீ அவனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார் கண்ணுதற் கடவுள். அன்பே வடிவெடுத்த அரனார் முன்னே, அச்சமே வடிவாகி, உளம் தடுமாற, வணங்கிப் பவுடன் நின்று கொண்டிருந்த பரவையார், ஐயனே! முன்பு அந்தணர் வடிவத்தில் எழுந்தருளிய அண்ணலே! முற்பிறப்பில் நான் செய்த அருந்தவப்பயனை என்னென்பேன்! தேவரீர் இந்த ஏழையின் மாளிகைக்குத் திருவடி தேய எழுந்தருளும் அளவிற்குத் தவறு புரிந்தேனே! அறியாது செய்த என் பிழையைப் பொறுத்தருள வேண்டும். இனியும் தேவரீர் திருமொழிக்கு அடியேன் இசையாமல் வேறு என்செய்ய வல்லேன்? என்று கூறி நிலமதில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள். எம்பெருமான் பரவையார் மொழிந்ததைக் கேட்டு நங்கையே! உனது பண்பிற்குத் தக்கவாறு நீ மொழிந்தது நன்றே! என்று பாராட்டி, மாயமாய் மறைந்தருளினார். பரவையார், எம்பெருமான் மறைந்த திசைநோக்கித் தொழுவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவளது மனதில் சுந்தரரின் தூயவடிவம் பிரகாசித்தது. பரவையார் பொறுமையே வடிவமாய், நாயகரின் நினைவினால் சிலையாகி நின்றாள். சுந்தரர் முன்னால் எம்பெருமான் எழுந்தருளினார். சுந்தரர் நிலமதில் வீழ்ந்து அவரது மலரடிகளைப் பணிந்து, எம்பெருமானே! இம்முறை எம் பரவையாரிடமிருந்து யாது குறை கொண்டு வந்தீர்கள்? என்று ஆவலோடு வேட்கை மேலிட வினவினார். எம்பெருமான் சுந்தரரைப் பார்த்து, நம்பியாரூரனே! உன் மீது பரவையார் கொண்டிருந்த தீராத கோபத்தைத் தணிய செய்தோம். இனிமேல், எவ்வித தடையுமின்றி நீ அவளைச் சென்று அடைந்து முன்போல் மகிழ்ந்து வாழலாம் என்று அருளி பூங்கோயிலுள் புகுந்தார். மறுநாள் சுந்தரர் பரமனை வணங்கி பரவையாரது மாளிகைக்கு அன்பர்களுடனும் அடியார்களுடனும் புறப்பட்டார். மலர்மாலை, கலவைச் சந்தனம், கஸ்தூரி சாந்து, தங்க ஆபரணங்கள், பட்டாடைகள் முதலிய பல நற்சடங்கிற்கான பொருட்களை ஏந்தியவண்ணம் அன்பர்கள் முன்னால் சென்று கொண்டிருக்க, மங்கல இசைகள் ஒலி எழுப்ப இறைவன் திருநாமம் விண்ணெட்ட முழங்க சுந்தரர், சுந்தரகோலத்தோடு பவனி புறப்பட்ட காட்சியைக் கண்டு வியக்காதவரில்லை. சுந்தரர் எழுந்தருளப் போகும் பெருமிதத்தில், பரவையார் பொழுது புலரும் நேரத்துள் தமது மாளிகையை அழகுற விளங்கச் செய்தாள். மாளிகை எங்கும் நெய் விளக்குகளை ஏற்றி, பொற் சுண்ணங்களையும் மலர் தாதுக்களையும் சிந்தினர். தூபங்களையும், புண்ணியப் புது நீரை நிறைத்து வைத்த பொற்குடங்களையும் வரிசையாக வைத்தனர். வண்டுகள் ரீங்காரமிடும் நறுமலர் மாலைகளையும், ஒளிமிகும் மணிமாலைகளையும் அடுத்தடுத்து அழகிற்கு அழகு செய்தாற்போல் தொங்கவிட்டனர். வெண்கடுகுப் புகையாலும், நெய்யுடன் கலந்த அகிற் புகையாலும் மாளிகை முழுவதும் தெய்வமணம் கமழச் செய்தனர். வண்ண மலர் தூவி, வாழ்த்தொலி எழுப்பி, சுந்தரரை வரவேற்க, பரவையார் தோழியர்களோடு வாயிலருகே நின்று கொண்டிருந்தாள். மங்கல இசை ஒலி எழுப்ப, தொண்டர்களுடன் மாளிகையை வந்தடைந்தார் சுந்தரர். பரவையார் காதல் வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தவராய், புத்தம் புது மலர்களை, சுந்தரரின் சேவடிகளிலே கொட்டிக் குவித்து வணங்கி வரவேற்றாள். சுந்தரர் மகிழ்ச்சி பொங்க, பரவையாரின் திருக்கரத்தைப் பற்றிக்கொண்டு மாளிகைக்குள் சென்றார். முன்போல் உடலும் உயிரும் ஒன்றாயினர். பரவையாரும், சுந்தரரும் வாழ்க்கைக் கடலில் பக்தி எனும் ஓடத்தில் அமர்ந்து பரமனின் திருவடி என்னும் கரையை அடைய வழி செய்யத் தொடங்கினர். பரவையார், பரமனைப் பணிவதோடு, தமது நாயகரான சுந்தரரின் திருவடிகளையும் வணங்கி வழிபட்டாள். இவ்வாறு இருவரும் இல்லறம் எனும் நல்லறத்தில் நலம்பெற வாழ்ந்து வரலாயினர். சித்தத்தைச் சிவன்பாற் வைத்து நித்தம் நித்தம் புற்றிடங்கொண்ட பெருமானின் ஞானக் கதிர்களாகிய திருத்தாள்களை போற்றிப் பணிந்து வந்தவாறு பரவை நாச்சியாருடன் இன்புற்று வாழ்ந்து வந்தார் சுந்தரர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இவருக்கு சேரமான் பெருமாள் நாயனாரைக் கண்டுவர வேண்டும் என்ற காதல் உள்ளத்திலே ஊற்றெடுத்து பெருகியது.
ஒரு நன்னாள் பரவையாரிடம் விடை பெற்றுப் பூங்கோவில் அமர்ந்து பெருமானின் பொற்கழல்களை பணிந்து அடியார் புடைசூழ திருவஞ்சைக்களம் புறப்பட்டார்.
சோழநாட்டுத் தலங்களை கண்குளிரக் கண்டு வணங்கியவாறு கொங்கு நாட்டிலுள்ள திருப்புக கொளியூரை அடைந்தார். வேதியர் வாழ்கின்ற தேரோடும் திருவீதி வழியாக வந்து கொண்டிருந்த சுந்தரர் அவ்வீதியில் எதிர் எதிராக அமைந்துள்ள இரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியை கண்ணுற்றார். ஒரு வீட்டில் அலங்காரமும் ஆனந்தமும் பொங்கிப் பெருகி, மங்கல வாத்தியங்கள் முழங்கியவாறு இருக்க மற்றொரு வீட்டில் அமங்கலமான தோற்றமும், அழுகையும் நெஞ்சை உருக்கும் சோகக் காட்சியும் இருக்கக் கண்டார். சுந்தரர், அங்குள்ளோரிடம், இவ்விரு வீட்டார்க்கும் உள்ள இன்ப துன்பங்களுக்கு காரணம் யாது? என்று வினவினார். அதற்கு அந்தணர்கள், சுவாமி! இவ்விரு வீட்டிலும் இருந்த இரு சிறுவர்கள், அருகிலுள்ள மடுவிற்கு நீராடச் சென்றார்கள். அதில் ஒருவனை முதலை விழுங்கி விட்டது. தப்பிப் பிழைத்த மற்றொருவனுக்கு இப்பொழுது உரிய பருவம் வந்ததும் பெற்றோர்கள் முப்புரி நூல் அணியும் சடங்கினைச் செய்து மகிழ்கிறார்கள் என்றனர். இதற்குள் அச்சிறுவனை இழந்து அழுது கொண்டிருந்த பெற்றோர்கள், சுந்தரர் எழுந்தருளியுள்ளார் என்று கேள்வியுற்று வேதனையை மறந்த நிலையில் விரைந்தோடி வந்து அவரது திருவடித் தாமரைகளைப் பணிந்தனர். அருகிலுள்ளோர் மூலம் சிறுவனை இழந்த பெற்றோர்கள் இவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட சுந்தரர், சோகம் நீங்கி; முகமலர்ச்சியுடன் தம்மை வந்து வணங்கிய பெற்றோர்களைக் கண்டு, நீங்களா மகனை இழந்தவர்கள்? என்று வியப்பு மேலிடக் கேட்டார். ஆமாம் சுவாமி ! அந்நிகழ்ச்சி நடந்து ஆண்டுகள் பல தாண்டிவிட்டன. ஆனால் இப்பொழுது ஐயன் எழுந்தருளியது கண்டு, நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இம்மையில் நாங்கள் பெற்ற பேறு எவர் பெறுவர் என்று கூறி மீண்டும் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்பெற்றோர்களின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்ட சுந்தரர் அவர்களது துயரை எப்படியும் தீர்ப்பது என்ற உறுதியில் அவர்களிடம் குழந்தையை விழுங்கிய மடு எங்குள்ளது? என்று கேட்டார். பெற்றோர்கள் சுவாமிகளை அழைத்துக்கொண்டு மடுவிற்குப் புறப்பட்டனர். சுந்தரரைத் தொடர்ந்து சிவ அன்பர்களும் சென்றனர். மடுவின் கரையை அடைந்தனர். பெற்றோர்கள் சுந்தரரை வணங்கி, சுவாமி ! எங்கள் குலக் கொழுந்தை விழுங்கிய மடு இதுதான் என்று கூறினார். சுந்தரர் பெருமாளைத் தியானித்தார். ஆக்கவும், அழிக்கவும் வல்ல அவினாசியப்பரை துதித்து ஏற்றான் மறக்கேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். தேமதூரத் தமிழில் நான்காவது பாட்டைப் பாடி முடிப்பதற்குள் பெரு முதலை ஒன்று நீரிலிருந்து வெளிப்பட்டு பிள்ளையைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது. அன்பு பெற்றோர்கள் ஓடிச்சென்று தங்களது பச்சிளம் பாலகனை வாரித் தழுவி உச்சிமோந்து அகமும், முகமும் மலர சிறுவனுடன் சுந்தரர் திருவடியைத் தொழுதனர். சுந்தரரின் தெய்வீகச் சக்தியைக் கண்டு பக்தர்கள் அதிசயித்து வியந்து போற்றினர். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க என்ற கோஷம் வானைப் பிளந்தது. சுந்தரர் அவர்களை வாழ்த்தி அருளினார். அவிநாசியப்பர் ஆலயம் சென்று, பாடிப் பேரின்பம் பூண்டு, மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். சுந்தரரின் வியக்கத்தக்க அருட்செயலையும், தமது நகருக்கு எழுந்தருளுவதையும் கேள்வியுற்ற சேரர் கொடுங்கோளூரைக் கவின்பெற அலங்கரிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். சுந்தரர் வருகையை நாடு முழுவதும் பறையறைந்து அறிவித்தார். சேரப் பெருந்தகையார் யானை மீது புறப்பட்டார். அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடனும் மற்ற பரிவாரங்களுடனும், சிவ அன்பர்களுடனும், புறப்பட்ட சேர வேந்தன், சுந்தரரை எதிர்கொண்டு அழைக்க எல்லையிலேயே காத்திருந்தார். சுந்தரர் அன்பர்களுடன், தமது சிவயாத்திரையை முடித்தவாறு எல்லையை வந்தடைந்ததும் சேரப் பெருந்தகையார் யானையினின்றும் இறங்கினார். விரைந்தோடிச் சென்று சுந்தரரை ஆரத்தழுவினார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரை ஆரத்தழுவி அகமகிழ்ந்தார். கடல் வெள்ளம்போல் திரண்டு வந்த மக்கள் விண்ணெட்ட வாழ்த்தொலி எழுப்பினர்.முரசு ஒலிக்க - சங்கு முழக்க - பறை அலற - மேள தாளங்கள் சிவநாமத்தோடு பொங்கி எழ, சேரமான் பெருமாள் சுந்தரரைத் தாம் அமர்ந்து வந்த யானை மீது அமரச் செய்தார். தாமும் பின்னால் அமர்ந்து, வெண் கொற்றக் குடையினைப் பிடித்தார். அனைவரும் அரண்மனையை அடைந்தனர். மன்னனின் எல்லையில்லாப் பக்திக்குத் தலைவணங்கி எல்லையில் கூடியிருந்த பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இரு ஞானமூர்த்திகளும் அரண்மனைக்குள் எழுந்தருளினர். சேரமான் பெருமாள் சுந்தரரைத் தமது அரியணையில் அமரச் செய்து வழிபாடு புரிந்து இன்புற்றார். இரு சிவச் செல்வர்களும் மாகோதை மாநகரில் இருந்தவாறே அடுத்துள்ள சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று பதிகம் பாடிப் பரமனைக் கண்டுகளித்து வந்தனர். மாகோதை நகரில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வழிபட்டு வரும் சேரரும், சுந்தரரும், ஆலயத்துள் செல்லும் முன் அடுத்துள்ள அழகிய பொய்கையில் நீராடிச் செல்வது வழக்கம். ஒருநாள் இருவரும் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்பொழுது சுந்தரர் மட்டும், சற்று முன்னதாகவே நீராடலை முடித்துக்கொண்டு இறைவன் திருமுன்னே வழிபடச் சென்றார். சுந்தரரின் உடல் புளகம் போர்த்தது; உள்ளத்திலே அருள் உயர்வு பொங்கி எழுந்தது. சைவப் பழமான சுந்தரர் பேரொளிப் பிழம்புபோல் ஆனார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது.
எம்பெருமான் திருமுன் பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவரை அறியாத உள்ளக்கிளர்ச்சியும், உடல் நெகிழ்ச்சியும் அவருக்கு உலக மாயையிலிருந்து விடுபடும் பேரின்ப சக்தியைக் கொடுத்தது. அருளே வடிவான சுந்தரர் தலைக்குத் தலைமாலை என்னும் பதிகத்தைக் கயிலையரசன் செவிகுளிரப் பாடிப் பரவினார். சுந்தரரின் செந்தமிழ்த் தேன் அமுதத்தை அள்ளிப் பருகி மெய்யுருகிய நீலகண்டர் தமது அன்பு ஆலால சுந்தரரைத் திரும்பவும் தம்மோடு அழைத்துக் கொள்ளத் திருவுள்ளங் கொண்டார். அதற்கேற்ப எம்பெருமான் அமரர்களை அழைத்து ஆலாலசுந்தரரை வெள்ளை யானையில் அழைத்து வருவீர்களாக! என்று ஆணையிட்டார். அமரர்கள் வெள்ளை யானையுடன் புறப்பட்டு திருவஞ்சைக்களம் அடைந்தனர். ஆரூரைக் கண்டு வணங்கினர். ஆண்டவனின் ஆணையைக் கூறி வெள்ளையானையில் அமர்ந்து கயிலைக்கு எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டனர். அரனார் அருள் வாக்கிலே, செய்வதறியாது நின்ற சுந்தரர் எம்பெருமானை நினைத்து துதித்தார். தேவர்கள், அவரை  வலம் வந்து வெள்ளை யானையின் மீது எழுந்தருளச் செய்தனர். சுந்தரர் தமது தோழராம் சேரர் நினைவாக வெள்ளை யானை மீதமர்ந்து விண்ணை நோக்கிப் புறப்பட்டார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். பொய்கையினின்றும் வந்த சேரவேந்தன் சுந்தரரைக் காணாது திகைத்தார். சுந்தரர் திருக்கயிலை மலைக்கு வெள்ளை யானையில் எழுந்தருளுவதைத் தமது தபோ வலிமையால் அறிந்து கொண்டார் சேர மன்னர்; அக்கணமே தாமும் ஆரூரரைத் தொடர்ந்து செல்லத் திருவுள்ளங் கொண்டார். சோழன் வெண்புரவியில் அமர்ந்தார். குதிரையின் செவியில் நமச்சிவாய மந்திரத்தை இடையறாது ஓதினார். குதிரை காற்றினும் கடுகப் புறப்பட்டது. வெள்ளை யானையை அணுகி, வலம் வந்தது. மன்னர் சுந்தரரை வணங்கி வழிபட்டார். மன்னர் புரவியில், யானைக்கு முன்னதாகவே கயிலைமலையை நோக்கிப் புறப்பட்டார். சுந்தரர் தம்மை வணங்கி முன்னால் செல்லும் மன்னனைக் கண்டார். தமக்குள் புன்முறுவல் பூத்தார். வெள்ளை யானையில் வந்து கொண்டிருந்த சுந்தரர் தானெனை முன் படைத்தான் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியவாறு கயிலைமலைக் கோவிலின் தென்திசை வாயிலை அடைந்தார். வேகமாக வந்த சேரமான் வாயில் அடைத்திருப்பது கண்டு திகைத்தார். அங்கேயே சுந்தரர் வருகையை எதிர்பார்த்து நின்றார். சுந்தரர் வந்தார். அங்கே நின்று  கொண்டிருந்த சேரமான் பெருமாள் சுந்தரரை நமஸ்கரித்தார். இரு சிவச் செம்மல்களும் தமது வாகனங்களை விட்டிறங்கி, திருவாயில்கள் பலவற்றைக் கடந்து, திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரர் அவ்வாயிலில் தடைபட்டு நின்றார். சுந்தரர் மட்டும் இறைவன் திருவருளாள் எம்பெருமான் திருமுன் சென்றார். பொன்மயமான கயிலை மாமலையில் வேத முழக்கங்களும், துந்துபி நாதங்களும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன.முனிவர்கள் சிரமீது கரம் உயர்த்தி சுந்தரரை வரவேற்றனர். தேவகணங்கள், கந்தர்வர்கள் கற்பக மலர் தூவித் துதித்துக் கொண்டிருக்க, எம்பெருமான் கற்பக வல்லியோடு எழுந்தருளியிருந்தார். இத்திருக்கோலக் காட்சியைக் கண்டு கண்களில் நீர் மல்க தாய்ப் பசுவைக் கண்டு விரைந்து வரும் இளங்கன்றைப் போல் ஆராக் காதலோடு ஐயன் திருமுன் சென்று அவரது கமலமலர்ப் பாதங்களை பணிந்து துதித்து நின்றார் சுந்தரர்!  ஆலால சுந்தரரைக் கண்ட திருசடை அண்ணல், ஆனந்தப் பெருக்கோடு, ஆரூரனே நீ வந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஐயனின் அமுதமொழிக் கேட்டு அகமும் முகமும் மலர்ந்த சுந்தரர், ஐயனே ! இந்த ஏழையின் பிழை பொறுத்து, எம்மைத் தடுத்தாட் கொண்ட தெய்வமே! முடிவிலாத் தூய முத்தி நெறியினை அருளிய பெருங்கருணையை எடுத்தருளும் திறத்தினை எமக்கருள வில்லையே? என்று சொல்லி பலமுறை பணிந்து எழுந்து சிவானந்தப் பாற்கடலில் அழுந்தி நின்றார். பேரின்பப் பெருக்கில் மெய்யுருகி நின்ற தம்பிரான் தோழர், எம்பெருமானிடம், நிலவணிந்த நீரணி வேணிய!  நின் மலர்க்கழல் சாரும் பொருட்டுச் சாரும் தவத்தையுடைய சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிற் புறத்தே தடைபட்டு நிற்கின்றார் என பணிவோடு பகர்ந்தார். சங்கரர் நந்திதேவரை அழைத்துச் சேரரை அழைத்துவர ஆணையிட்டருளினார். நந்திதேவர் இறைவன் ஆணைப்படி சேரரை அழைத்து வந்தார். எம்பெருமான் திருமுன் வந்த சேரமான் பெருமாள் நாயனார் உள்ளமும் உடலும் பொங்கப் பூரிக்க மெய்ம்மறந்து எம்பெருமானின் திருத்தாள்களில் பன்முறை வீழ்ந்து வணங்கி எழுந்தார். எம்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு தவழ சேரரை நோக்கி, எமது அழைப்பின்றி நீ ஏன் இவ்வளவு தொலைவு வந்தாய்? என திருவாய் மலர்ந்து அருளினார். சிரமீது கரங்குவித்து நின்ற சேரமன்னன் எம்பெருமான் திருமுன் தமது பிரார்த்தனையைச் சமர்ப்பித்தார். இவ்வெளியோன் ஆரூரர் கழல் போற்றி ஐயன் திருமுன் அணையப் பெற்றேன். ஐயனின் கருணை வெள்ளத்தால், அடியேன் திருமுன்னே வந்து நின்று சேவித்து நிற்கும் பொன்னான பேறு பெற்றேன். இப்பொழுது இந்த எளியோனுக்குத் தேவரீர்! திருவருள் புரிய வேண்டும்.ஆரூரரின் அரிய நட்பை இவ்வடியேனுக்கு தந்தருளிய வேத முதல்வனே ! எம்பெருமான் மீது பூண்டுள்ள ஆராக்காதலால் இவ்வடியேன் திருவுலா என்னும் பிரபந்தம் ஒன்று பாடினேன். அதனை ஐயன் திருச்செவி சாத்தி அருளப் பணிவோடு கேட்கின்றேன் என்று பிரார்த்தித்தார். எம்பெருமான் சொல்லுக ! எனச் சேரர்க்கு ஆணையிட்டருளினார். புலமைமிக்கச் சேரப் பெருந்தகையார் அருள்மிக்க ஞானவுலா என்னும் திருக்கயிலாய உலாவை மெய்யுருகப் பாடினார். எம்பெருமான் ஞான உலாவினைக் கேட்டு மகிழ்ந்தார். சேரரையும், சுந்தரரையும் சிவகணத் தலைவர்களாக, தமது திருவடி நிழலில் இருக்குமாறு வாழ்த்தி அருளினார். சேரமான் பெருமாள் நாயனார் சிவபிரானின் செஞ்சேவடிகளைத் துதித்து திருத்தொண்டு புரியலானார். சுந்தரமூர்த்தி நாயனார், முன்போல் ஆலால சுந்தரராய், இறைவனின் அணுக்கத் தொண்டராய்த் திருத்தொண்டு புரிந்து வரலானார். பூவுலகில் இருந்த பரவையாரும், சங்கிலியாரும் உலகப் பற்றை விட்டகன்று முன்போல் கமலினி, அனிநிந்தையாருமாகி உமாதேவியாரின் சேவடி போற்றும் சேடிகள் ஆயினர். சுந்தரமூர்த்தி நாயனார் குடும்பமே ஒரு நாயன்மார் குடும்பம் ஆகும். தந்தை சடையனார், தாய் இசைஞானியார், சுந்தரர் இவர்கள் மூவருமே நாயன்மார் என்ற பெருமையைப் பெற்றவர்கள்.


குருபூஜை: சுந்தரரின் குருபூஜை ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்.
You tube links for Sundarar:





https://www.youtube.com/watch?v=3hY_Fs2L3vc

Home  Previous                                                                     
                                                           Page 1     Page 2    Page 3   Page 4 Page 5 Next

No comments:

Post a Comment