July 25, 2014

Sundarar Nayanar - Nayanmar 63

Sundarar Nayanar - Part 1 - Nayanmar 63

சுந்தரமூர்த்தி நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சுந்தர மூர்த்தி நாயனார், திருத்தொண்டர் புராணத்துக் காப்பியத் தலைவர் என்ற நிலைக்கேற்பவும் அதன் மூலநூலாகிய திருத்தொண்டத் தொகையின் அமைவைப் பொறுத்தும் அவர் வரலாறு புராணத்தின் முதலிலும் இடையிலும் முடிவிலுமாகச் செறிந்து வருதலால் அவர் வரலாற்றுண்மை சார்பான சூசனம் இந்நூலின் முடிவில் தனியாக இடம் பெறுகின்றது.

1. ஓலை காட்டி ஆட்கொளப் பெற்றமை

யதார்த்தத்திற் சீவன் என்றுண்டோ அன்றே சிவனுக்கடிமை என்பதோர் வழக்குண்டாம். அது, 'என்று, நீ அன்று நான் உன்னடிமை யல்லவோ' என வருந் தாயுமான சுவாமிகள் வாக்காற் பெறப்படும். எனினும், உயிரானது மலமாயாகன்ம மறைப்பு மயக்கங்களுக் குட்பட்டிருக்கும் அதன் பெத்தநிலைக் காலமெல்லாம் அத்தொடர்பு பற்றிய பிரக்ஞை சற்றுமில்லாமலே யிருந்து விடுதலும், கால அடைவில் வாய்க்குஞ் சிவபுண்னியப் பேறாக நிகழும் இருவினையொப்பும் மலபரிபாகமு மாகிய பக்குவ மிகுதியால் சிவம் ஞான குருவாக வந்து அம்மறைப்பும் மயக்கமும், நீக்கப்பெற்ற போது மட்டும் அத்தொடர்புநிலையைப் பிரக்ஞாபூர்வமாக அறிந்தொழுகும் வாய்ப்பைப் பெறுவதும் சாஸ்திர ரீதியாக அறியப்படுவனவாகும். அங்ஙனம், உரிய பக்குவத்தில் தானாகவே சீவனை ஆட்கொள்ள வேண்டிய பொறுப்புச் சிவனுக்கு ஏலவே உளதாதல், "ஏழுடை யான்பொழில் எட்டுடையான்புயம் என்னை முன்னாள் ஊழ்உடை யான்புலியூர்" எனவருந் திருக்கோவையார்ச் செய்யுளானும் அறியப்படும். "என்னை ஆளும் ஊழ் முன் உடையான்" என்றமையானே இது சிவனுக்கு மீற முடியாத ஒரு உடன்படிக்கை நியதியாதலும் பெறப்படும்.

இனி, இந்நியதியைப் பிரதிபலிக்கும் பொருத்தசாதனவடிவிலான ஆவணம் ஒன்றும் உள்ளதாகத் திருமூலர் தெரிவிக்கும் புதிருமொன்றுளதாம். சீவசிவ தொடர்பின் மூலத்தை உணர்ந்தவர் என்ற விளக்கத்தின் பேரிலேயே திருமூலர் எனும் பெயர் உளதாயிற்று எனப்படுதலால் அவர் வாக்கு ஆப்தவாக்கியமாகவே கொள்ளப்படும். அது, "என்றாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்-அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்-நன்றா உலகம் படைத்தான் எழுதினான்-நின்றான் கடல்வண்ணன் நேரெழுத்தாயே" எனவரும். இப்புராணத்துத், தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியில் இடம் பெறுஞ் சுந்தரர் வரலாற்றிலும் அது போன்ற ஒரு மூல ஆவணப் படிவங்காட்டப் படுகின்றது. திருமூலர் காட்டும் படிவம் போல அது ஒரு பொதுமைநிலை அமைப்பாக இல்லாமல், "என்றாயோ டென்னப்பன்" என்பதற்கு நேர், "அருமறை நாவலாதி சைவன் ஆரூரன்" என்றும் "சிவனுக்கு" என்பதற்கு நேர், "பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு" என்றும். "ஏழேழ் பிறவியும்" என்றதற்குநேர், "யானும் என்மரபுளோரும்" என்றும் ஆவணம் எதற்கென்பது கூடப் புலப்படுமாறு "வழித்தொண்டு செய்தற்கு" என்றும் ஒரு சிறப்புநிலை அமைப்பாக இருத்தல் கருதத்தகும். அது சேக்கிழார் வாக்கில், "அருமறை நாவலாதி சைவனா ரூரன் செய்கை-பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக் கியானு மென்பால்-வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்தற் கோலை-இருமையால் எழுதி நேர்ந்தேனிதற்கிவை யென்னெழுத்து" எனவரும்.

இவற்றின் பிரகாரம் அத்தகைய ஆவணம் சாஸ்வதமானது என்பதும் அதன் அடிப்படையில் எவ்வுயிர்க்கும் ஏதோ ஒரு தடவையில் அது நடைமுறைப் பிரயோகம் பெற்றே ஆகும் என்பதும் சுந்தரரும் அவ்வகையிலேயே ஆட்கொள்ளப் பெற்றார் என்பதும் அறியலாகும். ஆனால், சாமானியத்தில் அது ஒரு உள்வீட்டலுவல் என்ற மாதிரியில் விசேட ஏற்பாடாக ஏதும் இருந்ததாக அயலறியாமலே நடந்து விடும் என்பர். எனினும் சிவபெருமானால் ஆட்கொள்ளப் பட்டுள்ளவராக நன்கறியப்படும் திருத்தொண்டர் புராணத்து நாயன்மார் விஷயத்தில் சிலர் ஓரளவு பிரசித்தமாக எதிர்நின்றாட் கொள்ளப்பட்டதும் திருநீலகண்ட நாயனார் புராணத்தில் வரும், "யாவருங்காண உன்னை வளைத்து நான் கொண்டேயன்றிப் போவதுஞ் செய்யே னென்றான் புண்ணியப் பொருளாய் நின்றான்" என்பது போல்வனவற்றால் அறியப்படும். ஆனால், மூல ஆவணத்தை வெளிப்படுத்தி, அத்தாட்சிபூர்வமாக நிரூபணம் பண்ணி ஆளாந்தன்மையைப் பிரமாணிக்யப்படுத்தி ஆட்கொள்ளப்பட்ட செய்தி சுந்தர மூர்த்தி நாயனார் செய்தியில் வைத்தே அறியப்படுவ தாகின்றது. இவ்வளவுக்கு ஆடம்பரமான வகையில் இந்த ஆட்கொள்ளல் இடம் பெற்றுள்ளதாகும் போது இதற்குப் பிரத்தியேகமான விசேட காரணம் ஒன்று இருந்தேயாக வேண்டுதல் ஒருதலையாம்.

2. உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர்

குறித்த விசேட காரணம் யாதென்பது, சுந்தரரைத் தம் தியான மூர்த்தியாகவே கண்டு கொண்டு சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்துச் சருக்க இறுதிதோறும் அமைக்குந் துதிகளாகிய தியான சுலோகங்களில் ஒன்றில் இடம்பெறுதல் காணலாம். அது, "மலர்மிசை யயனும் மாலுங் காணுதற் கரிய வள்ளல்-பலர்புகழ் வெண்ணெய்நல்லூர் ஆவணப் பழமை காட்டி-உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாத முன்னித்-தலை மிசை வைத்து வாழுந் தலைமைநம் தலைமை யாகும்" என்பதில் அமையும். சிவபெருமான் ஆவணப்பழமை காட்டி ஆண்டுகொண்டதன் சார்பிலுள்ள விசேடம், சுந்தரரால் உலகுய்ய வைத்தலே என்பது இச்செய்யுளால் விளங்கநிற்றல் கருதத்தகும்.

மாயையிலிருந்து, தனு, கரண, புவன, போகங்களை ஆக்கிக் கொடுத்து உயிர்களை உலகில் வாழவிடுஞ் சிவனே, வாழும் உயிர்கள் இதாகிதந் தெரிந்து வாழக்கூடிய மனிதப் பிரப்பெய்தும் வேளையில் மெய்யுணர்ந்து உலகியற் சார்பாகும் பொய்ச்சார்பு விட்டு நீங்கிச் சிவப்பற்றாகிய மெய்ச்சார்பை அடைதற்கு ஆவனவெல்லாம் அறிந்து உகந்த முறையிற் செய்து கொண்டிருப்பவருமாவார். அங்ஙனஞ் சிவன் தமது காரணமற்ற கருணையினாற் புரியுந் திருவருட் கைங்கரியம் இருவகையிலடங்கும். மக்கள் கற்று கேட்டறிந்து அநுசரித்தொழுக வேண்டிய சமயமரபு, வழிபாட்டுமரபு, நாற்பாதமரபு, வேதாந்த மரபு, அவைகடந்த சமரச மோனமரபு என்பவற்றை உற்பவிப்பித்து அவை நூல்வழி நின்று நிலவ வைத்தல் ஒருவகை. அவை பயனின்றிக்கிடந்து வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகப் போய்விடாமல், மக்கள் அவற்றின் யதார்த்தமான நற்பலப் பேறுகளைக் கண்முன்னே கண்டு அவற்றிற் சிரத்தை கொண்டு அவற்றை விரும்பி அநுசரித்து ஈடேறுதற்கு உபகாரமாம் அளவுக்கு, ஆத்மீக உயர்நிலைப் பண்புகள் பிரதிபலிக்க மக்கள் மத்தியிலே வாழ்ந்து தம் சொல்லாலுஞ் செயலாலும் நற்பணி புரிந்துகொண்டு அவர்களுக்கு முன்னிலை விளக்காய் விளங்கக் கூடிய அதி உத்தமர்களைக் காலாகாலத்தில் அவதரிக்கச் செய்து கொண்டிருப்பது ஒருவகை. அறியப்படாத காலத்தில் அவதரித்தவர்கள் போக அறியப்படுங் காலப்பகுதியில் அவ்வகையில் திருமூலர் முதலாகப் பலர் இங்கு அவதரித்துள்ளமை சரித்திர உண்மையாகும். அவ்வகையிலான அவதார புருடர்களாகப் பிற்காலத்திற் பிரசித்தமானவர்கள் சமயாசாரியர் நால்வர். அவர்களிற் சுந்தரமூர்த்தி நாயனார் ஒருவர். எனவே, பூவுலகில் அவர் அவதரிக்கச் செய்யப்பெற்ற திருவருட் கைங்கரியம் குறித்த இரண்டாவது வகையினதாம் என்க. வரலாற்றுண்மைப்படி திருக்கயிலையில் தமக்கு அணுக்கத் தொண்டராயிருந்த ஆலால சுந்தரரையே சிவபெருமான் உலகுய்ய அவதரிப்பித்துப் பிரத்தியேகமான ஒருமுறையில் உலகுய்ய ஆண்டுகொண்டருளினார் எனில், அவரால் உலகுய்ந்தவாறு பெரிதுஞ் சிந்தித்துணரத்தகும். அது பின்வருமாற்றான் அறியப்படும்.

3. திருத்தொண்டத்தொகைப் பேறு

உலகில் வாய்க்கும் ஏனைக் காட்சிகள் போலச் சிவனைக் காணுங் காட்சி பொதுமையில் உள்ளதாக என்றேனும் அறியப்பட்டதாக இல்லை. அதேவேளை அவனருளே கண்ணாகக் காணும் ஞானக் கண்ணுடையார்க்குத் தன்னை அவர் உணர வைக்குமாறுங் கேட்கப்படும். அது, "மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்-ஒப்புடைய னல்லன் ஒருவனல்லன் ஒரூர னல்லன் ஓருவம னில்லி-அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணி னல்லால்-இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே" எனுந் திருத்தாண்டகத்தால் அறியவரும். தோடுடைய செவிமுதலிய அங்க அவயங்களுடன் பொருந்தும் தமது உருவத்திரு மேனியைத் தானும் திருஞானசம்பந்தர் போன்ற உயர்பெரு நிலையினர்க் கன்றி அவர் காட்டியுள்ளதாக அறியப்படுமாறில்லை. அங்ஙனமாதலின் சாமானியரான நம்மனோர், சிவக்காட்சிபெறுதற்குஞ் சிவனைச் சிந்தித்தற்கும் நல்லதோர் ஊடகமாக மற்றொன்று வேண்டுவதன் இன்றியமையாமை தானே பெறப் படுவதாகும். அக்குறை தீருமாறு, சிவன் தன்னையுணர்ந்து தானாந் தன்மை பெறவல்ல மெய்யடி யார்களிடத்தில் தான் பிரகாசமாயிருந்து கொண்டு தன் திருவேடத்தையும் அவர்களுக்கு வழங்கிவைத்தலினாலே நம்முருவுக் கொத்த மனித உருவில் உலாவுபவர்களாகிய அச் சிவனடியார்களைக் காணுதல் மூலம் நம்மனோருஞ் சிவக்காட்சி பெறவும் அவர்கள் திருவுருவைச் சிந்தித்தல், வழிபடுதல் மூலம் சிவசிந்தனைப் பலனும் சிவவழிபாட்டுப் பலனும் பெறவும் வாய்ப்பளித்துள்ளமை உண்மை நூல்களால் உணரப்படும். அத்தகு மெய்யன்பர் சாக்ஷாத் சிவனே என்பது சிவஞான சித்தியாரில், "அறிவரியான் தனைநினைய ஆக்கையாக்கி அங்கங்கே உயிர்க்குயிராய் அறிவு கொடுத் தருளாற்-செறிதலினாற் றிருவேடஞ் சிவனுருவேயாகும் சிவோகம் பாவிக்கு மத்தாற் சிவனு மாவர்-குறி யதனா லிதயத்தே யரனைக் கூடுங் கொள்கையினா லரனாவர் குறியொடுதா மழியும்-நெறியதனாற் சிவமாயே நின் றிடுவ ரென்றால் நேசத்தால் தொழுதெழுநீ பாசத்தால் விடவே" என வருவதனால் உணரப்படும்.

இவ்வகையில் நம்மனோர்க்குப் பரமோபகாரிகளாகிய மெய்யன்பர்களாக இவ்வுலகிற் காலாகாலங்களில் வாழ்ந்து மறைந்தோர்கள் பலராவர். சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட் கொண்டருளிய சிவ பெருமான், திருவாரூரில் அவர்க்குத் தமது திருவடி தரிசனங்காட்டி அதன்மூலம் உலகில் இருக்கக் கூடுஞ் சிவனடியார்கள் இயல்பெல்லாம் விளங்க வைத்தருளி அதன் மேலும் தாமே அடியெடுத்துக் கொடுத்துத் திருத்தொண்டத் தொகை பாடுவித்தருளினார். இதன்மூலம் உலகில் திருத்தொண்டர் பிரபாவம் ஆழ அகல விசாரித் தறியப் பட்டதுடன் அவ்விபர விளக்கங்களை மேற்கொண்டு திருத்தொண்டர் திருவந்தாதியும், மேல் அதன் விரிவாகத் திருத்தொண்டர் புராண காவியமும் தோன்றி என்றென்றைக்கும் உலகம் சிவனடியார் மகிமை உணர்ந்து போற்றிப் பலனுறும் நிலை உருவாயிருத்தல் கண்கூடு. இவ்வுண்மைப்பே றொன்றுக் காகவே இந்த நாயனார் போற்றித் தொழற்பாலராகின்றார். அது, "நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்-தீசனடியார் பெருமையினை எல்லா உலகுந் தொழவெடுத்துத்-தேசமுய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்-வாச மலர்மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்" எனுஞ் சேக்கிழார் செய்யுளானும் வலுவுறும்.

4. சிவயோக விளக்கப் பேறு

சைவ நாற்பாதங்களில் தொண்டுநெறியென விசேடமாகப் போற்றப்பெறும் சரியைக்கு விசேட தகைமை பெற்றவர் திருநாவுக்கரசு நாயனாரும் கிரியை நெறிக்கு விசேட தகைமை பெற்றவர் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும் ஞானநெறிக்கு விசேட தகைமை பெற்றவர் மாணிக்க வாசக சுவாமிகளும் ஆதல் போல, தோழமை நெறியென விசேடிக்கப்படும் யோகநெறிக்கு விசேட தகைமை பெற்றுள்ளவர் சுந்தரமூர்த்தி நாயனாராவர். சமயாசாரியர் நால்வரில் ஒவ்வொருவர் நாற்பாதங்களில் ஒவ்வொன்றுக்கு விசேடமுடையர் எனும் பிரசித்த வழக்கே அதற்காதாரமாதல் சாலும். அவரவர் அவரவர்க்காம் நெறியில் விளக்க முறுதற்கு ஆவன வெல்லாங் கூட்டிவைத்து அவரவர் அவரவர் நெறியினின்றே சிவானந்தப் பெரும் போக முறவைக்கும் தமது கருணைச் செயற்கேற்பச் சிவபெருமான் இந்த நாயனார்க்குச் சிவ யோகநெறி விருத்திபெறற் காவனவெல்லாம் கூட்டிவைத்து அதன்மூலம் சிவானந்தப் பெரும் போகம் விளைய வைத்த பாங்கு இவர் வரலாற்றான் அறியப்படும். திருவாரூரில் நாயனார் பெற்ற முதல் தரிசனத்தின் போதே சிவபெருமான் தெரிவித்துள்ள செய்தி கிடைக்கப் பெற்றதிலிருந்தே அத்தன்மை கால்கொள்வதாயிற்று. அங்குத் தோழமை தந்த தென்பது சிவயோக அநுபவத்திற் பிரியாதிருத்தலையும் வேட்கைதீர வாழி மண்மேல் விளையாடுக என்றது சிவானந்தாநுபவ லீலா விநோதனாய்த் திகழ்தலையுமே என்பது பொருந்துமாற்றால் நோக்கிக் கொள்ளப்படும். அதே கையோடு அவர்க்குப் பரவையார் உறவைக் கூட்டிவைத்ததும் அவர்க்குச் சிவயோக விருத்தி நிகழ்தற் பொருட்டே யாதல், "தென்னாவலூர் மன்னன் தேவர்பிரான் திருவருளால்-மின்னாருளங் கொடிமருங்கிற் பரவையெனு மெல்லியல்தன்- பொன்னாரு முலையோங்கற் புணர்குவடே சார்பாகப் பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்" எனவருஞ் சேக்கிழார் திருவாக்காற் பெறப்படும். தாமளித்த தோழமை காரணமாகத் தம்பிரான் தோழரென்றிருந்த இந்நாயனார்க்குச் சிவபிரான் மேலும் அவர் சேரமான் தோழ ரென்றாம் படியாகச் சிவ யோகியான சேரமான் பெருமானின் நட்புறவைச் சேர்த்து வைத்ததும் அதே சிவ யோகவிருத்திப் பொருட்டாதல் சொல்லாமேயமையும். அம்மட்டிலுமமையாது மேலுந் திருவொற்றியூரிற் சங்கிலியா ருறவைக் கூட்டி வைத்ததும் அதன் பொருட்டே யாதல் நாயனார் அருட்ச் செயல் மூலமே பெறப்படுவதாம். அது, "சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூரையன் அருளதே" எனவரும். இங்ஙனம் ஒட்டுமொத்தமாகப் பார்க்குங்கால் நாயனார் செய்தியில் அவர் புரிந்ததெல்லாம் சிவயோகம்; அவர் அநுபவித்ததெல்லாஞ் சிவபோகம் என்றே துணியப்படுவதாம்.

அற்றாயின் ஆன்மிக மேனிலையுயர்வுக்குக் குந்தகமாமெனப் பொதுவில் விலக்கப்படும் மகளிர் சேர்க்கை இந்நாயனார்க்கு விதிவிலக்காயவா றென்னையெனின் அது பின் வருமாறு விவரிக்கப்படும்.

இந்த நாயனார், சிவபெருமானே நேர்நின்று பிரத்தியேகமான ஒரு முறையில் தோழமை வழங்கப்பெற்றுக் கொண்டு அதன்மூலம், சிவனோடு ஏகனாய் நிற்றலாகிய தம் தன்மையில் அசாதாரண உறுதிவாய்க்கப் பெற்றிருந்தா ராகலின், "மங்கையோடிருந்தே யோகு செய்வானை" எனவும் "நேரிழையைக் கலந்திருந்தே புலன்களைந்தும் வென்றானை" எனவும் சிவன் பண்பாகத் திருமுறைகள் தரும் பொருண்மைக் கிணங்கத் தானும் மகளிரொடிருந்து கொண்டே யோகு செய்து கொண்டிருக்கவும் மகளிரைக் கலந்திருந்தே புலன்களைந்தும் வென்றிருக்கவும் வல்லராதல் சாத்தியமாகலின் அதன்கண் ஆட்சேபனைக் கிடமின்றாம். அது, "செல்வநல் ஒற்றியூரன் செய்யசங் கிலியா லார்த்து-மல்லலம் பரவை தன்னுள் மாழ்குற அமிழ்த்து மேனும்-அல்லுநண் பகலு நீங்கா தவன்மகி ழடியி னெய்தி-நல்ல இன் பார்ந்தி ருப்பன் நம்பியா ரூரன் தானே" எனும் நால்வர் நான்மணி மாலைச் செய்யுளானும் வலுவுறும். அன்றியும் குறித்த மகளிர் இருவரும் ஏலவே திருக்கயிலையில் ஏற்பட்டிருந்த தொடர்பின் மூலம் இவரைச் சார்ந்திருத்தற் கென்றே கைலாச பதியால் பூவுலகிற் பிறக்க வைக்கப்பட்டவர்களாதலுடன் இவருக்கு நேரொத்த சிவபக்தைகளாய்ச் சிவன்கழலிற் பிரியா நேயமுடை யோரும் ஆதலினால் அத்தகைய அவர்களின் உயர்பெருந் தகுதியும் அவர்கள் சேர்க்கையில் இவர் தம்நிலை வழுவாதிருத்தற்கு உபகார மாதலுங் கருதத்தகும். இவர் போலவே அவர்களுந் தரமுயர்ந்த சிவபக்தைகள் என்பதற்கு, "பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்" என இவர் இசைத்தருளிய தேவாரமே சான்றாதலுங் காண்க. இன்னும், "பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமான்" என்னும் இத்தொடரே, பரவை பாலும் சங்கிலி பாலும் இவர் கொண்டிருந்த தொடர்பின் விளைவு தனித்தனி அவர் போகமாகிய சிவ போகமே எனவுங் கொள்ள இடந்தந்து அவர்கள் சார்பில் தமக்கு விளைந்தது சிவானுபவமே என்பதை நாயனார் தம் வாக்கினாலேயே உறுதிசெய்துள்ளதாகக் கொள்ளவுங் கிடத்தலின் இந்த விஷயத்தில் எந்தவித ஆசங்கைக்கும் இடமில்லையாதல் தெரிந்துணர்ந்து கொள்ளப்படும். மேலும், மகளிர் சேர்க்கையிலிருந்தும் சுந்தரமூர்த்தி நாயனாரின் ஐம்புல இன்பத் துறவு நிலை மாசுபட்டில தென்பதற்கு, "துறந்த முனிவர் தொழும் பரவைதுணைவா" என நால்வர் நான்மணிமாலை ஆசிரியர் பிறிதோரிடத்துக் குறித்துள்ளமையும் அரணாதல் அறியப்படும். இதற்கு மேலதிக விளக்கம் வேண்டில் திருமந்திரத்தில் பர்யங்க யோகம் என்ற பகுதி பார்க்கத்தகும். அங்ஙனேல், சங்கிலியாரைச் சேர்வதில் இவர் ஆராப் பேராவல் கொண்டிருந்ததாகவும் பரவையார் புலவியுற்றிருந்த போதில் தீராத் துயருற்றிருந்ததாகவும் உள்ள வரலாற்றுண்மைகளின் தாற்பரியம் என்னாம் எனின், மேற்பல்லாற்றானும் விளங்கக் கிடந்தவாறு, அவர்கள் சார்பில் இவர் பெறற்பாலதான சிவாநுபவத் தொடர்ச்சி இடையறவுபடுதல் குறித்தெழுந்த ஆவலும் துயருமே அவையாம் என்க. சங்கிலியார் திருமணத்தை நிறைவேற்றுதலினும் பரவையார் ஊடல் தீர்த்தலினும் சிவபெருமான் முன்வந்தருளிய பெருங்கருணைச் செயலும் அது அங்ஙனமாதல் பற்றியதேயாம். தாம் மகிழ்ந்துதவிய தோழமைப் பயனாகிய சிவானந்தப் பேறு தம் தோழனுக்கு இடையறவு படாமற் காத்தல் சிவபெருமானது, தார்மிகப் பொருப்பாதல் இயல்பே ஆகலின்.

5. ஏகனாகி நிற்றல்

குருவருளால் மலமாசு தீர்ந்து சுத்தநிலை அநுபவத்தைத் தலைப்படுவோர் பஞ்சாக்ஷர உபாசனை புரிந்து அதன் சார்பிற் சிவனோடு ஏகனாய் நிற்கும் நிலை ஒன்று ஆன்ம ஈடேற்றப் பாதையில் உளதாகும். அந்நிலை பெற்றோர் சிவன் திருவடிகளையே சிந்தித்தவாறிருப்பச் சிவன் அவர்க்குப் பெரும் போகமாய் விளைவன் என்பர். அது, "ஏகனாய் நின்றே இணையடிகள் தாமுணரப்-போகமாய்த் தான்விளைந்த பொற்பினான்" எனுஞ் சிவஞான போத உதாரண வெண்பாவினாற் பெறப்படும். அந்நிலையிற் சிவபோகத்தையே ஏகபோகமாக அநுபவிக்கும் நிலையில் அழுத்தம் பெற்றிருக்குஞ் சுத்த ஆன்மாக்களுக்கு அவ்வப் போது உலகபோக மெனப்படுவன வற்றில் ஏதேனும் உணரவருமாயினும் நம்மனோர்க்குப் போலாது அவர்க்கு அதுவும் சிவபோகமாக அமைந்தடங்குவ தன்றி அதற்கு வேறாதல் இல்லையாம். வெகு நுட்பமாக உணரவுள்ள இந்த ஆன்மிக உண்மைக்கு விளக்கங் கொடுத்தலே இந்த நாயனார் பலவிடங்களிற் பொன்னும் திருநாகேச்சரத்தில், கறிவிரவு நெய் சோறு, கஸ்தூரி கமழ்சாந்தம், காம்புடைய நேத்திரங்கள் முதலான பலவும் வேண்டிக் கொண்டதாக வுள்ள இவர் செய்தியின் தாற்பரியமாதலும் இத்தொடர்பில் வைத்தறியப்படும். பரவையார் மாளிகையிலுஞ் சேரமான் மாளிகையிலும் இவர்க்கு நிகழ்ந்தனவாகவுள்ள ராஜோபசாரங்களும் அக்குறிப்பினவேயாகும். இங்ஙனம் இவர் பல்லாற்றானும் சிவபோகம் முதிர்ந்திருந்தவாறு, சேக்கிழார் வாக்கில் வரும், "படியின் நீடும் பத்திமுதல் அன்புநீரிற் பணைத்தோங்கி-வடிவு நம்பி யாரூரர் செம்பொன் மேனி வனப்பாகக்-கடிய வெய்ய இருவினையின் களைகட் டெழுந்து கதிர்பரப்பி-முடிவிலாத சிவபோகம் முறுகி முதிர்ந்து விளைந்ததால்" என்பதனாற் பெறப்படும். சிவனோடு ஏகனாகி நிற்றலின் அறுதிப்பெரும் பேறு சிவபோகமாகிய இப்பேறேயாதல், சிவஞான போதத்தில், ஏகனாகி நிற்றல் குறித்த பத்தாஞ் சூத்திரத்தை அடுத்து வரும் பதினோராஞ் சூத்திரம் ஆன்மலாபமாகிய சிவ போகங் குறித்து அமைந்துள்ளமை யாலும் வலுவுறும்.

இத்தகு மகிமை வாய்ந்த இவ்வேகனாகி நிற்றல் சுந்தர மூர்த்தி நாயனார் விஷயத்தில் சாதாரணத் தன்மை கடந்த பெரும்வீறும் விறலுமுடையதாய் அமைந்து அவர் வரலாற்றுக்கும் அவர் திருப்பாட்டுகளுக்கும் பெருவாழ்வளித்துள்ள அற்புதம் நினையுந்தோறும் நினையுந்தோறும் இறும்பூது பயப்பதாகும். திருவொற்றியூரிற் சங்கிலியார் திருமண விஷயமாகச் சிவபெருமானைத் தொடர்பு கொண்ட போது, சபதம் நிகழ்கையிற் சுவாமி கோயிலிலில்லாது மகிழின் கீழ்ப்போயிருக்க வேண்டுமென இவர் கேட்டுக்கொண்டதிலிருந்து, திரும்ப, திருவாரூரில் மறைந்த வலக்கண்ணும் வெளிப்படும் வரையில் இவர் திருவாக்குகளாக வந்துள்ள அருளிச் செயல்கள் முழுவதும் சிவனோடு ஏகனாய் நிற்றல் சார்பான இவரின் பிரத்தியேகமான வீறும் விறலுந் தோற்றுவனவா யிருத்தல் கண்கூடு. ஏகனாய் நிற்றல் சார்பில் ஏற்படும் நழுவலின் நெளிவு சுழிவுகள் அதுசார்பான உணர்வுக் கதிப்புகள் மிகக் காத்திரமான முறையில் அவற்றில் இடம்பெற்றிருத்தல் காணத்தகும். ஏகனாய் நிற்றல் சார்ந்த உரிமையுணர்வைப் பிரதிபலிக்கும் நியாயித்தல்களாக இப்பகுதியில் இடம் பெறுவனவும் மிக அபாரமானவையாம். அவை, "அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன். அதுவும் நான்பெறற் பால தொன்றானால்-பிழுக்கை வாரியும் பால்கொள்வரடியேன் பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்" எனவும், "பிழையுளன பொறுத்திடுவ ரென்றடியேன் பிழைத்தக்கால்-பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்-குழைவிரவு வடிகாதா கோயிலுளா யோவென்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம் போகீ ரென்றானே" எனவும் "எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்-மற்றைக் கண்தான் தாரீ ராகில் வாழ்ந்து போதீரே" எனவும், "மூன்று கண்ணுடையாயடியேன்கண் கொள்வ தேகணக் குவழக் காகில் ஊன்று கோலெனக் காவதொன் றருளாய் ஒற்றியூரெனும் ஊருறை வானே" எனவும் பலவாக வந்திருத்தல் காணலாம். இவை போல்வன வற்றிற் பாடற்சுவை நுகர்ந்த வளவே யன்றிச் சிவன் ஏதும் பதிலறிவித்ததாக இல்லையாதல் கருதத்தகும். இத்தகையது சுந்தர மூர்த்தி நாயனாரின் ஏகனாய் நிற்றல் மாண்பென உணர்க. அசாதாரணமான வகையில் இவ்வாறெல்லாம் நிகழவைத்தது சிவன் இவருக் களித்திருந்த தோழமைப் பிரபாவமே என்பது மறித்தும் ஒருகால் இங்கு நினைக்கத்தகும்.
இவ்வகையில் அவதானிக்கக் கிடக்கும், திருத்தொண்டத் தொகையால் விளைந்த சிவனடியார் ஒழுக்க வணக்க வழிபாட்டுப் பேறும், சிவயோகவிளைவுகளாப் பல அறியப்படும் பேறும் ஏகனாகி நிற்றல் சார்பான சூக்கும உண்மை விளக்கங்களும் இவையொத்த மற்றும் பலவும் சுந்தர மூர்த்தி நாயனார் சிவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டதன் மூலம் உலகுய்ய வந்தவா றெங்ஙன மென உணர நிற்றல் கருதத்தகும்.

மேலும் இந்நாயனாரின் சிவயோகப் பிரபாவமே தாம் மட்டுமன்றித் தம்மையணைந்த சேரமான் பெருமானும் இருந்த தேகம் நீங்காமலே கயிலை யெய்த வைத்தவாறும் இவர் சிவ யோக மாண்புணர்ந்து இவரை உபாசனா மூர்த்தியாகக் கொண்டிருந்த திறமே, பெருமிழலைக் குறும்ப நாயனாரை இவருக்கு முந்தியே கயிலை யடைய வைத்த வாறும் கூட, உலகறிந்துய்தற்காம் நிகழ்வுகளே யாம்.

அன்றியும், இவர் அருளிச் செயல்களில் அதிகரித்திருக்கும் ஏசுதல், இகழ்தல், ஊடுதல், உறழ்தல் சார்பான திருப்பாட்டுகளால் தேவாரத் தமிழாகிய திருநெறிய தமிழிலக்கியத்திற்குப் புதுச் சுவையுஞ் சந்தமும் புத்தொளி விளக்கமும் நிகழக் கண்டநுபவிக்கும் பயன் இவரால் உலகுய்ய வந்த மேம்பலனென்பதையும் யாரே மறுக்க வல்லார்.

இன்னும், இந்த நாயனாரால் விளைந்தனவாகவுள்ள அற்புதங்களால் விளையக்கூடும் வியப்பும் நயப்பும் உலகுய்ய நின்ற திறமும் உன்னுந்தோறும் உவகை யளிப்பதாகும். இவர் வரலாற்றில் இறுதியில் நிகழ்ந்ததாக விளங்கும் முதலை யுண்ட பாலனை அழைத்த அற்புதம் உணர்வுடையோர் உள்ளத்திற் கிளப்புங் கிளர்ச்சியுஞ் சுவையுணர்ச்சியும் எத்தகைய என்பது நால்வர் நான்மணிமாலை உடையார் அதனை வியந்தெடுத்துப் போற்றியுள்ள பாடலொன்றானே அறியவரும். அது, "போத முண்ட பிள்ளை யென்பு பொருகண் மாது செய்ததோ-காதல் கொண்டு சொல்லின் மன்னர் கல்மிதப்பவுய்த்ததோ-வாய்திறந்து முதலை கக்க மகனை நீய ழைத்ததோ-யாது நம்பி யரிய தென்றே னக்கியம்ப வேண்டுமே" எனவரும்.

 சுந்தர மூர்த்தி நாயனார்  வரலாறு இன்னும் நான்கு பாகங்களாக வரும் (நீட்சி கருதி ஐந்து பாகங்களாகப் பிரிக்கப் பெற்றிருக்கிறது)  

 Home  Previous                                                          Page 1    Page 2     Page 3  Page 4 Page 5 Next

No comments:

Post a Comment