குலசேகர ஆழ்வார்
சேர நாட்டில் திருவஞ்சிக் களத்தில் மாசி மாதம்
புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர்: இவர் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தம் ‘பெருமாள்திருமொழி’ 105 பாசுரங்கள். |
|
இரா. வேணுகோபாலகிருஷ்ணன்
பண்டைத்
தமிழிலக்கியங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவை பக்தி இலக்கியங்கள்.
ஆழ்வார்கள் அருளிய திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களும் நாயன்மார்களின்
திருமுறைகளும் தமிழக மக்களிடத்தில் இறையுணர்வை ஏற்படுத்தி
நல்வழிப்படுத்தியதோடு, சிறந்த இலக்கியக் கருவூலங்களாகவும் விளங்குவதை
உணரலாம்.
திருமாலைப்
போற்றிப்பாடிய ஆழ்வார்களில் சேர மன்னர் குலத்தில் தோன்றிய சிறப்புப்
பெற்றவர் குலசேகர ஆழ்வார். மன்னராக இருந்தாலும் செருக்கில்லாதவராக
வாழ்ந்தவர். திருமால் மீது கொண்ட பக்தியால் வானாளும் செல்வமும் மண்ணரசும்
யான் வேண்டேன் என்று பாடினார். இவரைத் திருமாலின் மார்பிலுள்ள
கௌஸ்துபமணியின் அம்சம் என்று போற்றும் மரபு உள்ளது.
திவ்வியப்
பிரபந்தத்தில் குலசேகர ஆழ்வார் அருளிய பாடல்கள் பெருமாள் திருமொழி
எனப்படுகின்றன. அவரது பத்துத் திருமொழிகளில் 105 பாடல்கள் உள்ளன.
குலசேகராழ்வாரின்
திருமொழிகளில் சுவை மிகுந்த பாடல்களும், உள்ளத்தை உருக்கும் பாடல்களும்,
பக்தி மணம் கமழும் பாடல்களும் உள்ளன. அவரது ஆறாம் திருமொழியான கன்னியர்
கண்ணனை எள்குதல் என்பதில் இவர் கண்ணன் மீது காதலும் ஊடலும் கொண்ட ஓர் இளம்
பெண்ணாகத் தன்னை வரித்துப் பாடியுள்ள பாடல்கள் உள்ளத்திற்கு மிகுந்த இன்பம்
பயப்பவை.
ஏழாம்
திருமொழியான தேவகியின் புலம்பல், ஒன்பதாம் திருமொழியான தசரதன் புலம்பல்
இரண்டிலும் ஆழ்வார் கண்ணனின் தாயாகவும், இராமனின் தந்தையாகவும் இருந்து
புதல்வனின் பிரிவுத் துயரைச் சொல்லிப் புலம்பும் பாடல்கள் உள்ளத்தை
உருக்குவனவாக விளங்குகின்றன. தசரதன் புலம்பல் கம்பர் இராமாயணத்தை
இயற்றுவதற்கு முன்னரே இவரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்
திருமொழியில் திருவரங்கத்தில் உறையும் அரங்கனைக் கண்டு வணங்க ஏங்குபவராகத்
தன் ஏக்கத்தைப் புலப்படுத்தும் பாடல்களைப் பாடியுள்ளார்.
இவரது திருமொழிகளில் குறிப்பிடத்தக்கது நான்காம் திருமொழியான திருப்பதியில் பிறக்க அவாவுறுதல் என்பதாகும்.
அவர்
பிறக்க விரும்புவதாக முதலில் கூறுவது நாரையாக! அரிதரிது மானிடராய்ப்
பிறத்தல் அரிது என்று சொல்லப்பட்டாலும், மானிடப் பிறவியானது பேராசை உடையதாக
உள்ளது என்பதாலோ என்னவோ, ஊனேறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன் என்று
கூறித் திருவேங்கட மலையில் உள்ள ஏரியில் நாரையாகப் பிறக்க விரும்பி,
வேங்கடத்துக் கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே! என்று தன் பிறவி ஆவலை
வெளிப்படுத்துகிறார்.
நாரையாய்ப்
பிறக்க வேண்டினாலும் அவருக்குள் ஓர் ஐயம் ஏற்பட்டு விட்டது போலிருக்கிறது.
நாரை என்பது பறந்து செல்லக்கூடிய பறவை. ஏதேனும் ஓர் அவாவினால் எங்கேனும்
வெளியே பறந்து போய் விட்டால்…? திருவேங்கடத் தொடர்பல்லவா அற்றுப்போகும்!
என்ன செய்வது?
எனவேதான் வேறு முடிவுக்கு வந்து அடுத்த பாடலில் திருவேங்கட மலையிலுள்ள சுனையில் ஒரு மீனாகப் பிறக்க விரும்புவதைக் கூறுகிறார்.
திருவேங்கடச்
சுனையில் பிறப்பதைப் பெரும் பேறாகக் கருதுகிறார். குறையாத செல்வத்துடன்
தேவ மங்கையர் சூழ தேவருலகத்தை ஆளும் வாய்ப்பானாலும் சரி, நிலவுலகம்
முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆளும் வாய்ப்பானாலும் சரி அவற்றை நான்
விரும்பவில்லை. அவற்றைவிடத் திருவேங்கடச் சுனையில் மீனாகப் பிறக்கும்
வாய்ப்பே மேன்மையானது என்கிறார்.
மீனாகப்
பிறப்பதைப் பெரும் பேறாகக் கருதியவர், மேலும் சிந்திக்கிறார். மீனாக
இருந்தால், முற்கூறிய நாரையோ, பிற பறவைகளோ, மனிதர்களோ, விலங்குகளோ
பிடித்துத் தின்று விடலாம். சுனை நீர் வற்றிப் போனால் இறந்து விட நேரிடும்.
சுனைக்குள் இருந்தால் வேங்கடவனைக் கண்டு துதித்து இன்புற இயலாது.
வேங்கடவனை நாளும் கண்டு இன்புறும் பேற்றிற்கு மேல் வேறொரு பெரும் பேறு
உண்டோ?
இந்த
எண்ணத்தில்தான் குலசேகராழ்வார், சிவனும் பிரம்மனும் தேவேந்திரனும் உள்ளே
புகக் கடினமான பூலோக வைகுந்தமாகிய திருவேங்கடக் கோவிலில்
திருவேங்கடமுடையான் வாய்நீர் உமிழ்கின்ற பொன் வட்டிலைக் கையிலேந்திக்
கொண்டு உள்ளே நுழையும் வாய்ப்பினைப் பெற்ற பணியாளனாகப் பிறக்க வேண்டும்
என்று வேண்டுகிறார்.
இப்படி
வேண்டியவர் வேங்கடவனின் திருவடிகளில் வீழ்ந்து கிடக்கும் வாய்ப்புக்
கிடைத்தால் எப்படி இருக்கும் என எண்ணுகிறார். இறைவனிடம் அடைக்கலமாவது
திருவடிகளில் வீழ்ந்துதானே! எனவே, மாயவன் திருவடிகளைக் காண்பதற்கும்,
அர்ச்சிப்பதற்கும் வண்டினங்கள் பண்ணிசை முழங்கும் திருவேங்கட மலையிலே சண்பக
மலராய் இருக்கும் பேறு பெற்றவனாக வேண்டுமென இறைஞ்சுகிறார்.
மலராக
இருந்தால் அதன் வாழ்நாள் ஒரு நாள்தான். திருவேங்கட மலையோ, இறைவன்
வீற்றிருந்து அருள் வழங்கும் திருமலை. பக்தர்களெல்லாம் அந்த மலையையே
இறைவனாக எண்ணித் தொழுவர். (சைவ சமயத்தில் திருவண்ணாமலையைச் சிவ வடிவமாக
எண்ணி வணங்கும் வழக்கம் இன்றும் உள்ளது நினைவுகூரத்தக்கது) அதனால்தானோ
என்னவோ குலசேகராழ்வாருக்குத் தமது அரசாட்சியை விட அந்த மலையில்
பிறப்பெடுத்து வாழும் வாழ்க்கை உயர்வாக இருக்கிறது.
எனவே,
காண்போர் அஞ்சி நடுங்கும் மதயானையின் மீதிருந்து இன்பங்களை
அனுபவிக்கும்படியான செல்வங்களையும், அரசாட்சியையும் நான் விரும்பவில்லை.
திருமால் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமலை மீது ஒரு புதராக
இருக்கும்படியான பேறு கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்.
அந்தப்
புதரானது, இயற்கைச் சீற்றத்தாலோ, காட்டு விலங்குகளாலோ, மாந்தர்களாலோ அழிய
நேரலாம் என்று எண்ணினார் ஆழ்வார். ஆகவே, அடுத்த பாடலில் இந்திரன் அவையில்
வீற்றிருந்து தேவ நங்கையரின் ஆடல், பாடல்களை விரும்பவில்லை. திருவேங்கட மலை
மீது பொன்மயமான ஒரு மலைச்சிகரம் ஆவதற்கான தவம் செய்பவனாக வேண்டும் என
விரும்புகிறார்.
சிகரமாக
வேண்டுமென விரும்பியவருக்கு அதிலும் நிறைவில்லை. மலைச் சிகரமாக
உணர்ச்சியற்ற கல்லாக இருப்பதால் என்ன பயன்?- அதையே நாளை மனிதர்களோ,
இயற்கையோ அழிக்க நேரலாம். அதை விடப் பயனுள்ள பிறவி எடுக்க எண்ணினார்.
அதனால்,
தேன் நிறைந்த பூஞ்சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மீது உயிரினங்களுக்குப்
பயன் தரும் ஒரு காட்டாறாகப் பிறக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அது தனக்குப்
பெரும் பேறு என்கிறார்.
பின்பு, மழையில்லா விட்டாலோ, கடும் கோடையிலோ காட்டாறு வறண்டு போய் விடலாம் என்று ஆழ்வாருக்குத் தோன்றுகிறது.
இறையடியார்களையெல்லாம்
இறைவனாய் எண்ணி வணங்கும் இயல்பு கொண்ட குலசேகராழ்வார், அந்த இறையடியார்கள்
வேங்கடவனைக் கண்டு வணங்க மலைமீது ஏறும் ஒரு வழியாக – பாதையாக இருக்கும்
பேறு வேண்டுமென விரும்புகிறார்.
ஏனெனில்,
அப்பாதையின் மீது இறைவனை வணங்கச் செல்லும் கோடானு கோடி அடியார்கள்
நடப்பர். அவர்களின் திருவடிகளைத் தாங்குவதே பெரும் புண்ணியமாயிற்றே! அந்தப்
புண்ணியத்தைப் பெற விரும்புகிறார் ஆழ்வார்.
மலையேறுவதற்கு
ஒரே பாதை பயன்படுத்தப்படுவதில்லை. பல பாதைகள் இருக்கும். நாளடைவில் ஒரு
சில பாதைகள் பயன்படுத்தப்படாமல் மறைந்தும் போகலாம் என எண்ணினார் ஆழ்வார்.
ஆனால்,
இறைவனின் கருவறைக்குள் புக முதன்மையான வழி ஓரே வாயில் வழிதானே! அந்த
வழியில்தானே தேவர்களும், முனிவர்களும், மாந்தர்களும் இடைவிடாமல் வந்து
இறைவனைத் தொழுது செல்கிறார்கள்! எனவே, இறைவன் கருவறைக்குள் செல்லும்
வழியில் அனைவரும் ஏறி, இறங்கும் படிக்கல்லாகக் கிடந்தால் பக்தர்களின்
காலடிகளைத் தாங்கும் புண்ணியமும் கிடைக்கும், இறைவனின் பவள வாயினை
எந்நேரமும் கண்டுகளிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என எண்ணி,
படியாய்க் கிடந்து உன் பவளவாய்க் காண்பேனே என்று தன் ஆவலை வெளியிடுகிறார் குலசேகராழ்வார்.
இதனாலேயே வேங்கடவன் கருவறை வாயில் படிக்குக் குலசேகரப்படி என்ற பெயர் வழங்கப்படுகிறது!
படிக்கட்டைப்
பொன் தகட்டால் மூடி விடலாம். அல்லது கட்டடச் சீரமைப்பில் படிக்கட்டையே
எடுத்து விடலாம். அப்படிச் செய்தால் இறைவனைக் காண இயலாது. தான்
படிக்கட்டாய்ப் பிறந்த பிறவிப்பயன் கிட்டாமல் போகலாம் எனத் தோன்றுகிறது.
என்ன
செய்வது? ஒவ்வொரு பிறவியிலும் நற்பலன்கள், கெடுதல்கள் இரண்டும்
இருக்கின்றன. என்றாலும், திருவேங்கட மலையின் மீதான பற்றுதலை ஆழ்வாரால் விட
முடியவில்லை.
அதனால்
இறுதியாகச் சொல்கிறார், தேவர்கள் உலகங்களை ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்யும்
வாய்ப்பும், தேவருலக மங்கையான ஊர்வசியின் போகமும் கிடைக்கும் என்றாலும்
அவற்றை நான் ஏற்க மாட்டேன். பவளம் போன்று சிவந்த வாயையுடைய திருவேங்கடநாதன்
உறையும் திருமலையில் ஏதேனும் ஒரு பொருளாகப் பிறந்தால் போதும்.
எனக்கு அதுவே பெரும் பேறு என்ற பொருள்பட,
உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கட மென்னும்
எம்பெருமான் பொன் மலைமேல் ஏதேனுமாவேனே!
என்று பாடியுள்ளார்.
உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கட மென்னும்
எம்பெருமான் பொன் மலைமேல் ஏதேனுமாவேனே!
என்று பாடியுள்ளார்.
மன்னவராகப்
பிறந்த ஒருவர் பல்வேறு இன்பங்களைத் துய்க்க வாய்ப்பிருந்தாலும்,
அவற்றையெல்லாம் மறுத்து, துறந்து, அறவழியில் இறை நெறியில் வாழ்வதே
வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை என எடுத்துரைத்துள்ளார் குலசேகராழ்வார்.
திருவேங்கட
மலைமேல் ஏதேனுமொன்றாகப் பிறக்க விரும்பிக் குலசேகராழ்வார் பாடிய
திருமொழிப் பாடல்களைப் பின்பற்றியே நம் காலத்துக் கவிஞர் மண்ணானாலும்
திருச்செந்தூரில் மண்ணாவேன் என்ற பாடலை எழுதியதாகக் கருத முடிகிறது.
ராமபிரான்
ஒருவரையே மனதில் நிறுத்தி, அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார். ராமரின்
ஜன்ம நட்சத்திரமான புனர்வசு நட்சத்திரத்தில் அவதரித்தவர்! ராமாயணக் கதையை
எவர் விவரித்தாலும் உருகிப் போய்விடுவார் குலசேகர ஆழ்வார்; தன்னையே மறந்து
விடுவார். சில தருணங்களில்... கொதித்து எழுந்து, தன் சேனைகளைத் திரட்டி,
ராவணனை அழிப்பதற்குப் புறப்பட்டு விடுவார்! இத்தனைக்கும் இவருக்கு
திடவ்ரதன் என்றும் பெயர் உண்டு!
'ராம'
எனும் திருநாமத்தைக் கேட்டாலே மெய்ம்மறந்து விடுவார் குலசேகர ஆழ்வார்.
இவர் மட்டுமா? ராமபிரானை சிந்தையில் வைத்திருக்கும் அனைவருமே இப்படி
நெகிழத்தான் செய்வார்கள். குலசேகர ஆழ்வாரின் அளவற்ற பக்தியால் விளைந்த
பாசுரங்கள், பெருமாள் திருமொழி என்றே அழைக்கப்படும் பேறு பெற்றவை!
ராமபிரான்
மீது அன்பு வைத்தவர், ராமர் ஆராதித்த அரங்கனின் மீது அன்பு பாராட்டாமலா
இருப்பார்? இதனால்தான் வேறு ஆழ்வார்களுக்கு இல்லாத பெருமையாக, குலசேகரப்
பெருமாள் எனும் திருநாமத்தைப் பெற்றார் இவர்! ஸ்ரீராமரை மனதில் கொண்ட
குலசேகர ஆழ்வாரின் முதல் பாடல், அரங்கனை முன்னிறுத்திதான் அமைந்திருந்தது!
இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றிஇனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும்அணிவிளங்கும் உயர்வெள்ளையணையை மேவிதிருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னிதிரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்கண்ணினைகள் என்றுகொலோ களிக்கும் நாளே?
'தெளிந்த
நீரைக் கொண்ட காவிரி, தனது அலைகள் எனும் கைகளால் திருவடிகளை இதமாகப்
பிடித்து விடும்படி தழுவி ஓடும் திருவரங்க நகரில், இருளானது சிதறி ஓடும்படி
ஒளி வீசும் மாணிக்கக் கற்களை நெற்றியிலும் மிக நேர்த்தியான ஆயிரம் படங்கள்
கொண்டு அரவு அரசன் ஆதிசேஷனின் படுக்கையில் கண்வளரும் நீலரத்தினக் கல்
போன்ற பெரிய பெருமாளை, கண்கள் குளிர வணங்கி மகிழ்வுறும் நாள் எந்நாளோ?'
என்று அரங்கனை எண்ணி எண்ணி ஏங்குகிறார் குலசேகராழ்வார்!
அரங்கனை
அடைவதற்கு இந்த ஏக்கம் மிக மிக அவசியம். இந்த ஏக்கமும் தாபமும் இருந்தால்
போதும்... அரங்கனே இதற்காகச் செயல்படத் தொடங்கி விடுவான்.
ஸ்ரீதரன்
என்ற அன்பர்... சில மாதங்களுக்கு முன் பெருமாளை தரிசிக்க திருவரங்கம்
வந்தார். அப்போது, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி வாசலில்
உள்ள பெருமாளின் பாதுகையைக் கண்டு சிலிர்த்தார். அந்த நிமிடமே அவருக்குள்
ஓர் எண்ணம்... 'இங்கே வேலை கிடைத்தால் நன்றாக இருக்குமே?' என்று! அடுத்து
ஆலயத்துக்கு வந்தவர், பெருமாளை தரிசித்தார். அரங்கன் சந்நிதியில் வைத்து,
''இந்த முறை பெருமாளை விட்டுப் பிரியவே மனமில்லை. வேலையை ராஜினாமா
செய்துவிட்டு, இங்கேயே வந்து விடலாம்போல் தோன்றுகிறது'' என்று
சொல்லிவிட்டுச் சென்றார்.
பிறகென்ன? இந்த வார்த்தை அரங்கனின் செவியில் விழாமலா இருந்திருக்கும்?
இதையடுத்து,
அவர் வேலை பார்த்த இடத்தில் ஏகப்பட்ட தடைகள்; பல்வேறு சிக்கல்கள். மனம்
விரும்பியபடி வேறு வேலை ஏதும் அமையாத சூழ்நிலை! அப்போதுதான், ஒரு
நிறுவனத்தில் இருந்து கணினித் துறைத் தலைவராகப் பதவியேற்கும்படி அவருக்கு
அழைப்பு வந்தது! கடிதத்தைப் பார்த்து விட்டு, அரண்டு போனார் ஸ்ரீதரன்.
பின்னே? ஸ்ரீரங்கத்தில் எந்தக் கல்லூரி வாசலில் நின்று பாதுகையைப் பார்த்து
அரங்கனின் அருகிலேயே இருக்க ஆசைப்பட்டாரோ, அந்தக் கல்லூரியில் இருந்தே
வேலைக்கான அழைப்பு வந்தால்..? வியந்துதானே போவார்! அவருக்கு முதலில்
வேலையில் சங்கடமான சூழ்நிலை! ஆனால், பிறகு..? எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி!
இப்படித்தான் நம் ஏக்கத்தைக் கண்டு பரவசமாகி சதுரங்கம் ஆடுவான் அரங்கன்!
இப்படி சதுரங்கம் ஆடுவதற்காகவே, தன் மீது ஏக்கத்துடன் எவரேனும் வருகின்றனரா
என்று அரங்கன் ஏக்கத்துடன் காத்திருப்பான்!
ராஜா
குலசேகரருக்கு அரங்கன் மீதும், அவனது அடியார்கள் மீதும் பித்தாகி பிணைந்து
நிற்க வேண்டும் என்பதே ஆசை! வைணவக் குழாமில் இணைந்து கூத்தாடவே விருப்பம்!
ஆனால், இதற்குக் குறுக்கே நின்றது அரசப் பொறுப்பு. மன்னரது எண்ணத்தை
அறிந்த அமைச்சர்கள், திருமாலின் அடியார்களை அரண்மனைக்கே வரச்செய்து, மன்னரை
வேறெங்கும் மெய் மறக்க முடியாதபடி செய்தனர்.
வைணவக்
கூட்டம் நாளுக்கு நாள் பெருகியது. அரசப் பொறுப்புகளை மறந்தவராக, வைணவக்
குழாமில் கலந்தவராக, பாகவத கோஷ்டியில் இரண்டறக் கலந்தவராக மாறினார் மன்னர்!
ஸ்ரீராமநவமி உற்ஸவ நாளும் வந்தது. மன்னரின் ராம பக்தியை விவரிக்கவும்
வேண்டுமோ? ஆராதனை மூர்த்திக்கு ஆபரணங்களாகச் சொரிந்தார். இந்த வேளையில்,
வைணவக் கூட்டத்தையும் மன்னரையும் பிரிக்க சூழ்ச்சி செய்தனர் மந்திரிகள்.
இறைவனது திருவாபரணம் சிலவற்றை ஒளித்து வைத்து, திருமாலடியாரே
திருடிவிட்டனர் என்று பழி சுமத்தினர். மன்னரோ திருவாபரணம் களவு போனது பற்றி
கவலைப்படவில்லை; அடியவர்கள் மீது ஏற்பட்ட பழிக்காக மிகவும் வருந்தினார்!
குற்றம்
சாட்டப்பட்டவர்கள், கொடிய விஷம் கொண்ட பாம்பு இருக்கும் குடத்தில் கைவிட்டு, சத்தியம் செய்ய வேண்டும் என்பது வழக்கம்! சத்தியம் பிறழாதவர்களை பாம்பு தீண்டாது. அவ்வாறே, கொடிய விஷ நாகம் இருந்த குடம் வைக்கப்பட... அடியவர்கள் அனைவரின் சார்பாக, குடத்தினுள் தானே கையை விட்டார் மன்னர்!
அனைவரும் அதிர்ந்தனர். அடியார்கள் அபகரித்திருந்தால்தானே மன்னரை பாம்பு தீண்டும்?!
தங்கள்
தவறை உணர்ந்த அமைச்சர்கள், மன்னரிடம் மன்னிப்புக் கேட்டனர். மன்னருக்கோ, அரச வாழ்வில் கசப்பும் வெறுப்பும் மேலும் அதிகரித்தது. விளைவு... மகனை மன்னராக்கினார்! பற்றற்றோர் வாழும் தென்னரங்கம் நோக்கி தன் மகளுடன் பயணத்தைத் தொடர்ந்தார். இதில்... அமைச்சரின் சூழ்ச்சி என்பதெல்லாம் அரங்கனின் சித்தமன்றி வேறென்ன? அரங்கனை அடைய மன்னர் ஏங்கினார்; அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தான் அரங்கன்; அந்த மன்னரும் பின்னர் குலசேகர ஆழ்வாரானார்!
இந்த
விஷயத்தில் அரங்கனுக்கு நிகர் அரங்கனே! ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் துவங்கி எவரை, எப்படி இழுத்துக் கொள்ள வேண்டுமோ அவர்களை அவர்களாகவே வரும்படி இழுப்பதில் மாயன் இவன்! எவரேனும் 'தான்' எனும் அகங்காரத்துடன் இருந்தால், அவர்களது கண்ணை அவர்களின் கையாலேயே குத்திக் கொள்ளவும் வகை செய்துவிடுவான்!
மாவினைவாய்
பிளந்து ... எனும் பாசுரத்தில் குலசேகராழ்வார் இப்படிக் கூறுகிறார்... 'குதிரை வடிவத்துடன் வந்த அசுரன் கேசியின் வாயைக் கிழித்து, அவன் இறந்தான் என்று மகிழ்ந்த அடியார்களிடம் அன்பு கொண்டவனை, கடல் நிறம் கொண்டவனை, என் கண்ணபிரானை, இந்திரன் பெருமழை பெய்வித்த போது, வலிமை கொண்ட கோவர்த்தன மலையைக் குடைபோல் தாங்கி ஆநிரை காத்த தலைவனை, அழகிய தமிழ்ப் பாடல்களைப்போல் இனிமையானவனை, வடமொழியில் உள்ள ஸ்ரீராமாயணம்போல் இனிமையானவனை, ஆதிசேஷன் மீது கண்வளரும் பெரிய பெருமாளை... என் நாக்கு தழும்பு ஏற்படும் வரை துதித்து, என் கைகளால் பறிக்கப்பட்ட மலர்களைத் தூவி வணங்கும் நாள் எந்நாளோ?' - என்று உருகுகிறார் குலசேகர ஆழ்வார்!
தேட்டருந்திறல் தேனினைத் தென்னரங்கனை பாசுரத்தில், ஈட்டம் கண்டிடக்கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே!
-
என்று, ''அவன் நாமங்களைச் சொல்லி அழைத்து மெய் மறந்து நிற்கும் அவனுடைய அடியார் கூட்டத்தைக் காணும் வாய்ப்பு கிட்டினால், நமது கண்கள் அடைந்த பேறு அதுவே!'' என்கிறார் குலசேகராழ்வார்.
ஆழ்வார் கண்கள் மட்டுமா பேறு அடைந்தது..! யாரை எண்ணி எண்ணி அவரும் அவரது மகளான குலசேகரவல்லியும் ஏங்கினார்களோ, அந்த அரங்கனையே மாப்பிள்ளையாக அடையும் பேறும் பெற்றார் ஆழ்வார். அரங்கன் மனமுவந்து ஏற்ற அடியாள் இந்த குலசேகரவல்லி! இவள்- ஆண்டாளுக்கு முன்னோடி! ஸ்ரீராமநவமியன்று குலசேகரவல்லியை மணந்தான் அரங்கன்!
இன்றும் கோயிலில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி உற்ஸவம் நடக்கிறது. அரையர்கள் பெருமாள் திருமொழி ஸேவிக்க, பக்தர்களுக்கு தரிசனம் தந்தவாறே இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இருவரும் ஒரே ஆசனத்தில் இருந்து அருள்புரிவார்கள்! அதிகம் ஆரவாரமில்லாத இந்த அற்புத சேர்த்தி உற்ஸவம் அர்ச்சுனன் மண்டபத்தில் நடைபெறும்.
சுந்தரபாண்டியன்
இந்த சேரகுலவல்லிக்கு பொன்னாலான திருமேனியே செய்து வைத்தான். இந்த விக்ரஹம் மொகலாயர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்தவர்கள், பஞ்சலோகத்தில் விக்ரஹத்தைச் செய்து வைத்தார்கள். குலசேகர ஆழ்வாரால்தான் பவித்ரோற்ஸவ மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே! இவரால் இயற்றப்பட்டதுதான் 'முகுந்தமாலை' எனும் அற்புத சம்ஸ்கிருத துதி.
பல்லாண்டு பாடும் பாகவதர் கூட்டத்தில் பாடுவதையும், ஆடுவதையும், அவர்களோடு மன்னன் என்ற பற்று அறுத்து பாகவதன் என்று சொல்லிக் கொள்வதிலும் பெருமைப்படுகிறார்
குலசேகரப் பெருமாள்!
எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும், அரங்கனுக்கு ஆட்பட்டால், முந்தைய நிலை மறந்து, அரங்கன் அடியாருடனே உறவாகிவிடுவர்.
கோவையில் புகழ்பெற்ற ஆடிட்டர் ஸ்ரீராமச்சந்திரன். இன்று அங்கேயுள்ள பெரும்பாலான ஆடிட்டர்கள் இவரின் ஜுனியர்களே! அரங்கனிடம் பெரும் பிரியம் கொண்ட அவருக்கு, ஒரு கட்டத்தில் மனச் சங்கடமான சூழ்நிலை ஏற்பட... தான் சேர்த்த செல்வங்களை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்தார். கட்டிக் கொள்ள மூன்று ஜோடி ஆடைகளுடன், எளிமையாக வாழத் தேவை யானவற்றை எடுத்துக் கொண்டு, தன் துணைவியாருடன் ஸ்ரீரங்கம் வந்தார். இங்கு வந்த அவருக்கு, 'ராமானுஜ கூடம்' எனும் பாகவதர்களை அரவணைத்து போஷிக்கும் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கினான் அரங்கன்! ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிக்காகவே அமைக்கப்பட்ட நெகமம் சாரிட்டி அமைப்பையும் கவனிக்கும் இவர், ஆடிட்டராக பணியாற்றிய போது கிடைக்காத மனநிம்மதி, திருவரங்கனுக்கு கைங்கர்யம் செய்யும் போது கிடைக்கிறது என்று ஸ்லாகிக்கிறார். ராமச்சந்திரனுக்கு நிகழ்ந்த சங்கடங்களும்கூட, ஸ்ரீரங்கத்துக்கு இவரை அழைப்பதற்காக அரங்கன் செய்த நாடகமே!
ஆடாதாரையும் ஆட்டி வைத்து ஆடுபவனல்லவா அரங்கன்?!
குலசேகர ஆழ்வாரும் , குலசேகர வர்மாவும்
குலசேகரப் பெருமாள் பாடிய பெருமாள் திருமொழி 105 பாசுரங்களைக் கொண்டது ஆகும். அது மட்டுமில்லாமல், அவர் கண்ணபிரானுக்காக, வட மொழியில் முகுந்த மாலை என்னும் பக்திப்பாடல் ஒன்றும் எழுதியுள்ளார். இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, வடமொழியில பாட்டு எழுதின ஒரே ஆழ்வார் இவர்தான். ;-))
ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமை பீடங்களான ஜீயர்கள், "ஆழ்வார்களும் வைணவமும்" என்ற புத்தகத்தில், கிருஷ்ண பக்தனான குலசேகர வர்மா என்ற திருவிதாங்கூர் கேரள வர்மாவையும் சங்க கால சேரர்களது மன்னான சர்கராம பக்தர் குலசேகர ஆழ்வாரையும் குழப்பிக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளனர். முன்னையவர் ராமானுசருக்குப் பிற்பட்டவர். ஆழ்வாரோ மிக முற்பட்டவர். ஆழ்வார் தமிழில் மட்டுமே ஸ்ரீராமரை பாடியுள்ளார். வர்மாவோ சமஸ்கிருதத்தில் மட்டுமே "முகுந்தமாலா" என்று கிருஷ்ணரை பாடியுள்ளார். இருவரும் ஒருவரல்ல. மேலும் குலசேகர பாண்டியன், குலசேகர சோழன் என்றெல்லாம் அரசர்கள் உண்டு. குலசேகர என்றால் ’தமது குலத்தின் சிகரமான’ என்று பொருள். பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இரு நபர்களை ஒன்றாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். மணவாள மாமுநிகளுடைய முகுந்தமாலை உரையில் எங்கும் அவர் “இது பெருமாள் திருமொழி பாடிய ஆழ்வார் குலசேகரர் எழுதியது” என்று குறிப்பிட்டதாக இல்லை. ஆழ்வார் சரிதம் பற்றிய நூலான “திவ்ய சூரி சரிதம்” முதலியவற்றில் முகுந்தமாலை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது. முகுந்தமாலை செய்த குலசேகர வர்மா பிறந்தது கேரளத்தில் கொடுங்களூருக்குத் தெற்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவ்வூருக்கு தற்காலத்திய பெயர் 'திருக்குலசேகரபுரம்'. அதற்கு வெகு அருகாமையில் கேரளப்பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் கோவில் ஒன்று உள்ளது. அதை குலசேகர வர்மாதான் கட்டியிருப்பார் என்பது அவ்வூரார் நம்பிக்கை.
அரசமரபும் துறவும்
கொங்கர் கோமான் குலசேகரன் என்ற அடியின்மூலம், இவர் சங்க காலச் சேரர்கள் (கரூர்) மரபினர் என்று தெரிகிறது. இவரது தந்தையார் சந்திர குலத்து அரசரான திடவிரதர் என்பவராவார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் தரிசித்துள்ளார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் இவருக்கும் 'குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று.
பெருமாள்திருமொழி
திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.
பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த் தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்:
மன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர் கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ!
குலசேகரப்படி
திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:
செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.
இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.
இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் ன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.
திருவரங்கத்திற்குச் செய்த பணி
திருவரங்கம்
பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால் தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளை பூமாலையாலும் பாமாலையாலும் பூஜை செய்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் சென்று பெருமாளை தரிசித்து நிற்கும் போது இறைவன் பேரருளால் இவ்வுலகை விட்டு வைகுண்டம் சேர்ந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் குலசேகர ஆழ்வார்.
தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 7 கோயில்களையும் என மொத்தம் 8 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
குலசேகர ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில் - 1 1. திருவித்துவக்கோடு (அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு, பாலக்காடு, கேரளா மாநிலம்)
குலசேகர ஆழ்வார் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மங்களாசாசனம் செய்த கோயில் - 7 குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (2) 1. திருச்சித்ர கூடம் (அருள்மிகு கோவிந்த ராஜ பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
2. திருவாழித் திருநகரி, (அருள்மிகு லட்சுமி நரசிம்மர், தேவராஜன் திருக்கோயில், திருவாழித் திருநகரி, நாகப்பட்டினம்)
குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் (1) 1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)
குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1) 1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)
குலசேகர ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2) 1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா) 2. திருப்பாற்கடல்
குலசேகர ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1) 1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
Next
No comments:
Post a Comment