February 16, 2015

Intro of Azhwars

பன்னிரு ஆழ்வார்கள் - சிறு குறிப்பு

வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிருவர் ஆழ்வார் எனப்படுவர்.
வரலாறு


கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.
அருள்மிகு ஆண்டாள்


ஆண்டாள் தமிழ் நாட்டில் இருந்த 12 வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். இவர்களுள் ஒரே பெண் ஆழ்வார் இவரே. வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.

ஆண்டாளின் தோற்றமும் வாழ்க்கையும்


ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் பிராமணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்த கோயிலுக்கு பூக்கள் கொய்து கொடுப்பதை கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.


இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். 

கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்த பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் பிடித்தவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாராம். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனை ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.


கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தாராம். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.

பொய்கையாழ்வார்



பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது. முதன்முதலில் விட்டுணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்
பூதத்தாழ்வார்



பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்துக்கு அண்மையில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில்.  



பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது. வேறு இரு ஆழ்வார்களான பொய்கையாழ்வாரும், பேயாழ்வாரும் இவரோடு வாழ்ந்த ஒரே காலத்தவராவர்.


மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. இக் கோயிலின் வெளிச் சுவரிலே அதனைப் பூதத்தாழ்வாரின் அவதார தலம் எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.


திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவ சமயத்தினர் நம்புகிறார்கள். திருமாலின் மீது இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது
பேயாழ்வார்


பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலைஎன வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், இது நூறு வெண்பாக்களைக் கொண்டது. இவர் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.

பெரியாழ்வார்


பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர். இவரது பாடல்கள் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன.

சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவர்கள் நம்புகின்றனர். இதன்படி பேயாழ்வார் நாந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.



இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் என்பவற்றுக்கிடையே போட்டி நிலவிய கால கட்டத்தில், இவ்விரு சமயப் பிரிவுகளிடையே ஒற்றுமை காண விழைந்தவர் பெரியாழ்வார் எனக் கருதப்படுகிறார். இவர் பாடிய பாசுரங்களிலே இதற்குச் சான்றுகள் உள்ளன.

திருமழிசையாழ்வார்


திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார்

நம்மாழ்வார்



நம்மாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். ஆழ்வார் திருநகரில் பிறந்தவர். 1010 பாடல்கள் பாடியுள்ளார். இவரது பாடல்கள் பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாய் மொழி, திருவாசிரியம் ஆகிய பகுதிகளில் அடங்கியுள்ளன.

மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டின் திருக்கோளூரில் பிறந்தார். இவர் ஒரே ஒரு பதிகம் பாடியுள்ளார்.

குலசேகர ஆழ்வார்



குலசேகர ஆழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.



குலசேகராழ்வார் சேர அரச மரபைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் சந்திர குலத்து அரசரான திடவிரதர் என்பவராவார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார்.



பின்னர் திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பாடியருளினார். இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம், திருவரங்கம் முதலான திருத்தலங்களைப் பாடியுள்ளார்.


கொங்கர் கோமான் குலசேகரன் என்ற அடியின்மூலம், இவர் சங்க காலச் சேரர்கள் (கரூர்) மரபினர் என்று தெரிகிறது. தனதாட்சிக்குட்பட்ட கொடுந்தமிழ் மண்டலங்களான வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் சேவித்துள்ளார்.

தொண்டரடிப்பொடியாழ்வார் 
தொண்டரடிப்பொடியாழ்வார்  வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் மண்டலங்குடி என்னும் ஊரில் பிறந்தார். 'விப்ர நாராயணர்' என்பது இயற்பெயர். இவரது பாடல்கள் திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகியவற்றில் அடங்கியுள்ளன
திருப்பாணாழ்வார்



திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் பிறந்தவர். திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர் எனினும், பாணர் குலத்தைச் சேர்ந்தவர் ஆதலால் திருவரங்கத்தின் உள்ளே செல்வதற்கு இவருக்கு அநுமதி கிடையாது. அதனால் இவர் காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருமாலை வழிபட்டுவந்தார். ஒரு முறை இவரை இழிவுபடுத்திய சிலர் அவரைக் கல்லாலும் அடித்துக் காயப்படுத்தினர். அவரது துன்பம் தீர்க்க விரும்பிய இறைவன் இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கர் என்னும் திருமால் பக்தரொருவருக்குக் கனவில் தோன்றியதாகவும், பாணரைக் கல்லால் அடித்தபோது அவர் மனத்திலிருந்த தனக்குக் காயமேற்பட்டதாகக் கூறியதாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. இறைவன் கேட்டுக்கொண்டபடி சாரங்கர், பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோழில் சுமந்து திருவரங்கத்துள் சேர்த்ததாகவும் கூறப்படுகின்றது.



இவர் திருமாலின் மீது பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். இவை வைணவத் தமிழ் நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பத்துப் பாடல்களும் திருமாலின் திருவடிகளில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகிய பத்தையும் பற்றிப் பாடியவை ஆகும்.

திருமங்கையாழ்வார்



திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் பிறந்தவர். 'கலியன்' என்ற பெயரும் கொண்டவர். ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். அவை சிறிய திருமடல், பெரிய திருமடல், திருக்குறுந் தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, பெரிய திருமொழி ஆகிய பகுதிகளில் அடங்கியுள்ளன.

 

Home  Previous                                                              Next

No comments:

Post a Comment