May 16, 2015

Pathinettu Siththargal Glimpses

பதினெட்டு சித்தர்கள் - 1

சித்தர்கள் வரலாறு

எனது அன்புத் தம்பி ஹரி கேட்டுக்கொண்டதன் பேரில் இனி வியாழன் தோறும் பதினெட்டுச் சித்தர்கள் குறித்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் பெறும். இவை அனைத்தும் நான் படித்துத் திரட்டியதும் இணையதளங்களில் காணப்பெறும் தகவல்கள் மட்டுமே.

சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்குச் சித்தி பெற்றவர் என்று பொருள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள்.

சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள்.அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.சித்தம் என்றால் அறிவு; சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.

மருத்துவத்தோடு யோகம் சோதிடம் மந்திரம் இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் ஐந்து தகுதிகளாக உள்ளடக்கி சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

முதல் தகுதி சித்தத்தை அடக்க வல்லவர்கள்.

இரண்டாம் தகுதி எண்வகைச் சித்துக்களைச் செய்ய வல்லவர்கள்.

மூன்றாம் தகுதி
முற்றும் துறந்தவர்கள்: பாச இருளகற்றவர்கள்: யான் என்ற அழுக்கற்றவர்கள்.

நான்காம் தகுதி
பிறப்பிற்குக் காரணமான வினைவித்தைக் கெடுத்துத் தூய உணர்வில் மாறி ஐம்புலன்களை அடக்கிச் சித்தத்தை ஒருமுகப் படுத்தி ஆன்மீக ஆற்றலைப் பெற்றுப் புற உணர்வில் செத்துக் கிடப்பவர்கள்.

ஐந்தாம் தகுதி
உயிரினங்களின் இன்னல்களை நீக்க இடையராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெரிந்து ஆய கலைகள் அறுபத்தி நான்கையும் உணர்ந்து இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும் உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற மருத்துவ முறையைக் கொண்டு வந்தவர்கள்.முக்காலமும் உணர்ந்த முழுமுதல் ஞானிகள். எக்காலமும் எத்திக்கும் போற்றப்பட வேண்டிய தமிழ்க் குலத் தலைவர்கள்.


சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுதப் பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் அல்ல. “மெய்ப்புலன் காண்பது அறிவு” என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

முதல் சித்தர் பதினெட்டுச் சித்தர்கள் என்கிற கணக்கு ஏனோ, எப்போதுமே சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டோடு நின்றுவிடவில்லை. அகத்தியர் முதலாய் வள்ளலார் வரையில் அநேக சித்தர்கள் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர். நாம் அறிந்தும், அறியாமலும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாருக்கும் முதல்வராய், ஆதி சித்தர் யாரென தேடினால்......,

"நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நிர்மலமாம் சதாசிவனார் என்னக்குச் சொன்னார்" - அகத்தியர் -

"சிவனார் உரைத்த மொழி பரிவாய் சொன்னார்"
- தேரையர் -

"தாரணிந்த ஈச
னன்று ஆயிக்குச் சொல்லதாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல" - போகர் -

"சொல்லவே தேவிக்கு சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல"- தன்வந்திரி -

"பாதிமதி அணிந்தவர் தான் சொன்னதிது
பதியான விதியாளி அறிவாள் பாரே"- யூகிமுனி -

இது மாதிரி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை எடுத்
துக் காட்டாய்ச் சொல்லலாம். இவர்கள் அனைவரும் சிவன் எனும் சிவபெருமான் சொன்னதாகவே சொல்லுகின்றனர். ஆக, சிவனே முதல் சித்தர் என்று அறுதியிட்டுக் கூறலாம். சித்தர்கள் வாழ்ந்ததாகக் கருதப் பெறும் இடங்களிலெல்லாம் சிவலிங்கப் பிரதிஷ்டை காணப்படுவது மூல குருவுக்கு வணக்கமாக இருக்கலாம்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. எனினும், முற்காலத்தில் உயரிய இறை நிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காகப் பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காகச் செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர்.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர். சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம்.

நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே. சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

இப்பதினெட்டு சித்தர்களுக்கு முன் இரேதாயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுலகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 3,75,000 சித்தர்கள் தோன்றினர் என்று தேரையர் கூறுகின்றார்.

சித்தர்கள் வரலாறு

இம்மண்ணுலகில் பிறந்த உயிரினங்களில் தலைமையான உயிரினமே மனித இனம். இந்த மணீசர்களோடு பதினெண் சித்தர்கள் உறவு கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்.... என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:

1. பதினெட்டாம்படிக் கருப்புகள்
2. நவகோடி சித்தர்கள்
3. நவநாத சித்தர்கள்
4. நாத சித்தர்கள்
5. நாதாந்த சித்தர்கள்
6. வேத சித்தர்கள்
7. வேதாந்த சித்தர்கள்
8. சித்த சித்தர்கள்
9. சித்தாந்த சித்தர்கள்
10. தவ சித்தர்கள்
11. வேள்விச் சித்தர்கள்
12. ஞான சித்தர்கள்
13. மறைச் சித்தர்கள்
14. முறைச் சித்தர்கள்
15. நெறிச் சித்தர்கள்
16. மந்திறச் சித்தர்கள்
17. எந்திறச் சித்தர்கள்
18. மந்தரச் சித்தர்கள்
19. மாந்தரச் சித்தர்கள்
20. மாந்தரீகச் சித்தர்கள்
21. தந்தரச் சித்தர்கள்
22. தாந்தரச் சித்தர்கள்
23. தாந்தரீகச் சித்தர்கள்
24. நான்மறைச் சித்தர்கள்
25. நான்முறைச் சித்தர்கள்
26. நானெறிச் சித்தர்கள்
27. நான்வேதச் சித்தர்கள்
28. பத்த சித்தர்கள்
29. பத்தாந்த சித்தர்கள்
30. போத்த சித்தர்கள்
31. போத்தாந்த சித்தர்கள்
32. புத்த சித்தர்கள்
33. புத்தாந்த சித்தர்கள்
34. முத்த சித்தர்கள்
35. முத்தாந்த சித்தர்கள்
36. சீவன்முத்த சித்தர்கள்
37. சீவன்முத்தாந்த சித்தர்கள்
38. அருவ சித்தர்கள்
39. அருவுருவ சித்தர்கள்
40. உருவ சித்தர்கள்
பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.

“எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)"
“எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”
“ஏதமில் நிறை சித்தர் எழுவர்”
“விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”

-- என்று பல குறிப்புகள் உள்ளன.

சித்தர்கள் வேறுபாடுகள் அற்றவர்கள் – இனம், மதம், மொழி,நாடு என்ற நம்முடைய பிரிவினை களுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள்.

காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாகராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார்.

அந்தந்த நாடுகளுக்குத் தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பலநாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப் பெற்றுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராய்ந்து பார்த்துப் பலநாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனைச் சேர்க்கத் தொடங்கியுள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், இரவிசங்கர் குருஐி, வேதாந்திரமகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காகத் தந்து யோகநிலைகளைக் கற்றுத் தருகிறார்கள். மதம், இனம் கடந்து தங்கள் சேவையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.


Home  Previous  Saptha-rishi Main Page  Azhvargal Main Page Pathinettu Siththargal Main Page                                                                                    Next

No comments:

Post a Comment