September 16, 2015

Bogar Siththar - Part 3

நவநாத சித்த தரிசனம் கண்ட போகர் - கவிப்ரியன்


அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.

போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது.

போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு – 1700
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண விகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.

“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.

பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.

இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுர கிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.

தியானச்செய்யுள்

சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு;
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே;
சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே;
நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க…

மகா போகர் சித்தர் பூசை முறைகள்:

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ மகா போகர் சித்தர் படத்தை வைத்து அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பட பட்டிருக்கும் தியானச் செய்யுளைக் கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி புஷ்பம், சாமந்திப்பூ, அல்லது சம்பங்கிப்பூ, கதிர்பச்சை கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி!
2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி!
3. மகா முனிவர்களால் பூஜிக்கப்படுவரே போற்றி!
4. ப்ரணவ ள்வரூபமாக இருப்பவரே போற்றி!
5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி!
6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி!
7. மூலிகை, புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி!
8. ஆம், ஊம் என்ற பீஜக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி!
9. பசும்பால் பிரியரே போற்றி!
10. நவபாஷாணம் அறிந்தவரே போற்றி!
11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
12. நாக தேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளிஅயும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை செபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.
ஸ்ரீ போகரின் பூசை முறைகள்

இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் நிலத்தகராறும், சகோதர சகோதரிகளுக்குள் உட்பூசல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீ மகா போகர் பழனி தண்டாயுதபாணியை நவ பாஷானத்தால் உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்கண்ட பலன்கள் கிடைக்கும்.

1. நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் இவற்றின் பிரச்சினைகள் தீர்ந்து வெற்றி கிடைக்கும்.
2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும்.
3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும்.
4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
5. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
6. பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
7. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
8. இவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து அவருக்கு செவ்வரளி புஷ்பங்களால் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.



Home Pathinettu Siththargal  Previous                                                              Next
 

No comments:

Post a Comment