September 16, 2015

Kamala Muni Siththar - Part 2

கமலமுனி திருமூலருடைய மாணவர்களுள் ஒருவர். வைகாசி மாதம் பூச நட்சத்திரத்தில் பிறந்த இவர் சீன தேசத்தில் நெடுங்காலம் வாழ்ந்தார். கமல முனியும் காலாங்கிநாத சித்தரும் ஒருவரே என்று ஒரு கருத்து நிலவுகிறது.

சீனாவிலிருந்து நாடோடியாய் தமிழகம் வந்த கமலமுனி குறவர் கூட்டத்துள் ஒருவராய்த் திரிந்தார். யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். இவர் பெற்ற யோக ஞானத்தால் அஷ்டமா சித்திகளையும் அடைந்தார்.

சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர் என்ற பெயர் காலாங்கிநாதருக்கு உண்டு. காலாங்கிநாதர் திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர். காற்றை உடலாகவும், காலனால் நெருங்க முடியாதவராகவும் இருந்தார். இதனாலே மூவாயிரம் வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தவர்.

இவ்வாறு இவர் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த திரேதாயுகத்தில் மிகப்பயங்கரமான பிரளயம் ஏற்பட்டது. மழையும் புயலும் ஒன்று சேர்ந்து கோரத்தாண்டவம் ஆடியது. காணும் இடமெல்லாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, நீரில் மூழ்கியது.
 

மரம், செடி, கொடிகள் எல்லாம் நீருக்குள் ஐக்கியமாகின. மக்கள் அனைவரும் உயரமான மலையை நோக்கி ஓடினர். காலங்கிநாதரும் ஒரு பெரிய மலைமேல் ஏறினார். வெள்ளம் குறைந்தபாடில்லை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. காலாங்கிநாதரும் மலை உச்சியை நோக்கி ஏறிக் கொண்டே இருந்தார்.

இப்படியொரு பெரிய பிரளயம் தன் வாழ்நாளில் அவர் கண்டதில்லை. மக்கள் எல்லோரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். கனத்த துயரம் அவர் நெஞ்சை வாட்டியது. வேதனையோடே மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
 

அந்த மலையின் ஓரிடத்தில் ஏராளமான சித்தர்கள் தங்கியிருந்தனர். கூட்டமாக ஒரே இடத்தில் நிறைய சித்தர்களைக் கண்டதில் சோக மனதிலும் மகிழ்ச்சி பூத்தது. அவர்களுக்கு தனக்குத் தெரிந்த காயகல்ப முறைகளையும், ரசவாத வித்தைகளையும் கற்றுத் தந்தார்.

“காலங்கியாரே! இதற்கு மேல் எங்களால் உயரமாக செல்ல முடியவில்லை. ஆதனால்தான் இங்கேயே நின்றுவிட்டோம். நீங்கள் உயரே ஏறிச்சென்று உயிர்பிழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி வழியனுப்பிவைத்தனர்.

அதன்பின் காலங்கிநாதர் பல காலம் அந்த மலை மேலே தவம் செய்தார். அந்த மலையின் பெயர் சதுரகிரி மலை. ஒரு நாள் காலங்கிநாதர் தவத்தில் இருந்த போது அவர் முன்னால் மனித முகம் கொண்ட ஒரு ஆமை வந்தது. அது ஆமை உருவில் உள்ள சித்தர் என்பதை அறிந்து கொண்ட காலங்கியார் அவரை வணங்கினார். அவரும் ஆசீர்வாதம் செய்துவிட்டு மறைந்தார். பின்னர் வராகரிஷி முன் தோன்றினார்.

“காலாங்கிநாதா ! காலம் பல கண்டவன் நான். ஆனால் என்னை இதுவரை யாரும் கண்டதில்லை. புனிதமானவர்கள் கண்களுக்கு மட்டுமே நான் தெரிவேன். சிறிதும் மனச்சோர்வு கொள்ளாமல் தொடர்ந்து தவம் செய்து வரும் உனக்கு நிச்சயம் இறையருள் கிட்டும்” என்று கூறி ஞான உபதேசம் செய்து மீண்டும் சமாதி நிலைக்கு சென்றுவிட்டார்.

அதன்பின் காலாங்கிநாதர்சதுரகிரி மலை மீது உலாவி சிங்க சித்தர், வாமன சித்தர், பரசுராமசித்தர், ராமசித்தர், பலராமசித்தர், கிருஷ்ணசித்தர், குதம்பைச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், வேதாந்த சித்தர், தவசித்தர், போகசித்தர், கற்கிமுகிச் சித்தர் போன்ற பல சித்தர்களை சந்தித்து சித்த வித்தைகளைக் கற்றுக் கொண்டார்.

ஒரு நாள் காலாங்கிநாதர் ஆழ்ந்த தவத்தில் இருந்த போது அவரின் தவத்தை கலைக்கும் விதமாக ஒரு மனிதனின் அழுகுரல் கேட்டது. தவம் கலைந்து எழுந்தார். தன் காலில் விழுந்து வணங்கி அழும் மனிதனிடம் ‘என்ன பிரச்சனை உனக்கு?’ என்று கேட்டார்.

“சித்தர் பெருமானே! நான் ஒரு வணிகன். எனக்கு நீண்ட நாட்களாக மனதுக்குள் ஒரு ஆசை உண்டு. எப்படியாவது சிவன் கோவில் ஒன்றை கட்டியாக வேண்டும் என்று, அதற்காக எனது வீடு வாசல், தோட்டம் எல்லாவற்றையும் விற்று வேலையைத் தொடங்கினேன். நினைத்தது போல் கோவில் வேலை சுலபமாக இல்லை. கோவில் பாதியிலே நிற்கிறது. மேற்கொண்டு வேலையைத் தொடங்க என்னிடம் பொருள் எதுவும் இல்லை. வறுமை வேறு வாட்டி எடுக்கிறது. பல நாள் பட்டினியாக இருக்கிறேன். கோவில் விஷயம் என்பதால் அரசன் முதல் செல்வந்தர்கள் உதவி கேட்டுப்பார்த்துவிட்டேன். யாரும் உதவ முன்வரவில்லை அப்போதுதான் உங்களைப்பற்றி கேள்விப்பட்டேன். தாங்கள் நின்று போன சிவாலயப்பணி தொடர்ந்து நடைபெற வழிசெய்ய வேண்டும்” என்று அழுதான்.

கதறி அழும் வணிகரை காலாங்கியார் கண்டு கொள்ளவேயில்லை. அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். வணிகனும் அவரை விடுவதாக இல்லை. இரவு பகல் பாராமல் காலாங்கியாருக்கு சேவை செய்தாவது அவரது கல் மனதை கணிய வைத்துவிட வேண்டும் என்று முடிவில் இருந்தான். அந்த முடிவோடே காலாங்கிநாதருடன் தங்கிவிட்டான்.
 
காலாங்கியார் எவ்வளவோ சொல்லியும் அவன் அவரை விட்டு செல்வதாக இல்லை. துறவியான தன்னிடம் எதை எதிர்பார்க்கிறான் என்றும் புரியவில்லை.
 
இரவு நேரங்களில் அந்த வணிகன் தூக்கமில்லாமல் “நான் என்ன செய்வேன்? எப்படி ஆலயத்தைக் கட்டி முடிப்பேன். எப்போது சிவனை பிரதிஷ்டை செய்து வணங்குவேன்? யாரும் எனக்கு உதவமாட்டேன் என்கிறார்களே. சிவனே..! இனி நான் என் செய்வது?” என்று ஓயாமல் பிதற்றிக் கொண்டேயிருந்தான்.

உண்மையிலேயே இந்த வணிகன் ஆலயம் கட்டும் ஏக்கத்தில்தான் தன்னிடம் வந்துள்ளான்என்பதை அறிந்த காலாங்கிநாதர் அவனுக்கு உதவ முன்வந்தார். மலையின் மீது பல பகுதிகளில் அலைந்து திரிந்து பல அரிய மூலிகைகளைக் கொண்டு வந்து ஒன்று சேர்த்தார். அவற்றைக் கொண்டு வகாரத் தைலம் உருவாக்கினார்.

அந்த வகாரத்தைலத்தை கொண்டு பொன்னை உண்டாக்கினார். பின் வணிகனைப் பார்த்து, “வணிகரே! சிவாலயம் கட்ட உதவி கேட்டு என்னிடம் வந்தீர். இதோ கோவில் கட்ட உமக்கு எவ்வளவு பொன் தேவையோ அவ்வளவற்றையும் நீ எடுத்துக்கொள். கோவிலை சிறப்பாக கட்டி முடி” என்றார்.

வணிகனுக்கோ மனம் கொள்ளாத மகிழ்ச்சி காலாங்கிநாதருக்கு நன்றி சொல்லி தேவையான பொன்னை எடுத்துக்கொண்டு கிளம்பினான். கோவிலையும் சிறப்பாக கட்டி முடித்தான்.

ஆனாலும் வணிகருக்காக சித்தர் சேகரித்த மூலிகை வகாரத்தைலம் தொடர்ந்து பொங்கிக் கொண்டேயிருந்தது. அதைப் பார்த்த காலாங்கிநாதர் பொங்கிவரும் அந்த தைலத்தை ஒரு கிணற்றில் தங்கச் செய்தார். தங்கம் உருவாக்கக் கூடிய இந்த தைலம் யாராவது கெடுமதி கொண்டவர்கள் கையில் கிடைத்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த அவர்.

அந்தக் கிணற்றின் மீது மிகப்பெரிய பாறையை வைத்து மூடினார். அதோடு விட்டுவிடாமல் அந்த பாறையை யாரும் நகற்றிவிடக்கூடாது என்பதற்காக நான்கு திசைகளிலும் வராகி, காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன் போன்ற காவல் தெய்வங்களை நியமித்துவிட்டுச் சென்றார்.

அதன்பின்னர் வேறிடம் சென்று தவத்தில் ஈடுபட்டார். ஒருமுறை தன்னிலை மறந்து சமாதியில் ஆழ்ந்துவிட்டார். அப்படியே காலங்கள் பலவும் கடந்துவிட்டன. இதனைக்கண்ட திருமூலர் தன்னுடைய சீடரான காலாங்கி முன் தோன்றினார்.

“காலாங்கி! நீயே திடீரென்று சமாதியில் ஆழ்ந்துவிட்டால் எப்படி? சித்தர்களின் மரபு வழிவழியாக வளர வேண்டாமா? என்னிடம் உரிமைகொண்டு நீ பெற்ற உபதேசத்தை நல்லவர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களுக்கு உபதேசம் செய். அதுதான் உன் கடமை அதை எப்போதும் தவறாதே!” என்று கட்டளையிட்டார்.

குருவின் கட்டளைக்கு கீழ்படிந்தார் காலாங்கிநாதர். சுகன குளிகையின் உதவியோடு வான்வெளி வழியாக உலகமெங்கும் சென்றார். நல்லவர்களுக்கு ஞான உபதேசம் செய்தார். அடிக்கடி சீன தேசம் சென்றார். பிறகு அங்கேயே சமாதி அடைந்தார். தாம் கண்ட அதிசயங்களை சீன மக்களுக்கு கூறினார்.

போகர் சீனாவிற்கு அடிக்கடி செல்வதே தனது குருநாதரான காலாங்கிநாதர் சமாதியை தரிசிப்பதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது. சீன நாட்டிற்கு வந்ததும் தனது குரு காலாங்கி நாதர் சமாதியடைந்திருக்கும் முக்காதக் கோட்டைக்குள் மிகவும் சந்தோஷமாக நுழைந்து மேற்கு புற வாசல் வழியாக சமாதியின் அருகில் சென்று நின்று கை கூப்பி வணங்குவார். உடனே சமாதியின் கதவு திறக்கும். அங்கு இன்னிசை வாத்தியங்கள் முழங்க… ஒளிமயமாக காலாங்கி நாதர் தோன்றி போகருக்கு தரிசனம் தருவார்.

காலங்கி நாதர் சீனாவில் சமாதி கொண்டிருப்பதாக போகர் குறிப்பிடுகிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் காலாங்கிநாதர் முக்தி அடைந்ததாகவும் சொல்கிறார்கள்.

"கமலமுனி முந்நூறு'' என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது. இவர் மதுரையம்பதியில் சமாதியில் வீற்றிருப்பதாகப் போகர் ஜனன சாகரத்தில் கூறப்பட்டுள்ளது.

Home Pathinettu Siththargal Previous                                                                Next

No comments:

Post a Comment