February 17, 2016

Idai Kaadar - Part 2

இடைக்காடர் சித்தர் வாழ்க்கை வரலாறு – பாகம் 1

Inline image 1மதுரைக்குக் கிழக்கே உள்ள இடைக்காடு என்ற ஊர்தான் இடைக்காடர் பிறந்த ஊர் என்று கூறுவர். தொண்டை மண்டலத்தில் உள்ள இடையன்மேடு என்ற ஊரில் இச்சித்தர் வாழ்ந்தவர் என்பதால் இடைக்காடர் என்று அழைக்கப்பட்டார் எனக் கூறுவோறும் உண்டு.

நவக்கிரகங்கள்தாம் தத்தம் நிலைப் பாடுகளால் மனிதர்களை ஆட்டி வைப்பவையாகும். அத்தகைய நவக் கிரகங்களை ஆட்டி வைத்தவரான இச்சித்தர், தேவர் இட்ட சாபம் காரணமாக இடையர்களின் குலமாகிய கோனார் குலத்தில் பிறந்து எழுத்தறிவு இல்லாது ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்.

இவர் தமது ஊருக்கு அருகே உள்ள மலைச்சரிவுப் பகுதிக்கு நாள்தோறும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்வார். அப்பகுதியில் அவற்றை மேய விட்டுவிட்டு அங்கிருந்து ஒரு மரத்தடியில் தனது சிந்தனையை ஒடுக்கி சிவயோக நிலையில் தனது கொம்பினை ஊன்றி நின்றுவிடுவார். அப்போது உயிர் எங்கோ பறந்துகொண்டிருக்கும்.

ஒரு நாள் இவ்வாறு மெய்ம்மறந்த நிலையில் இவர் நின்றிருந்த சமயத்தில் வான் வழியே சென்று கொண்டிருந்த நவநாத சித்தர் ஒருவர் இவரை கண்டார். ‘எழித்தறிவு அற்ற இந்த மானிடன் சிவத்தில் ஒடுங்கி நிற்கின்றானே! இது எப்படி இவனால் முடிந்தது?’ என்று ஐயுற்று அந்த சித்தர் விண்ணிலிருந்து பூவுலகுக்கு இறங்கிவந்து இடைக்காடர் டம், மகனே அங்கு எதனை நீ காண்கிறாய்? எது உன்னிடம் பேசிக் கொண்டுள்ளது? உன்னுடன் உறவாடுவது எது? என்று பலவாறாகக் கேட்டார்.

நவநாத சித்தர் இவ்வாறு கேட்டதும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தார், இடைக்காடர். தம் எதிரே நின்ற சித்தரைக் கண்டதும் இடைக்காடர் பேருவகை கொண்டார். ஐயனே! தாங்களா? தாங்களா என் முன் தோன்றியுள்ளீர்கள்? ஐயோ…. கால் கடுக்க தாங்கள் நின்று கொண்டிருக்கிறீர்களே சற்று இங்கே அமருங்கள்….. அமருங்கள் என்று தன்னருகே இருந்த தர்ப்பைப்புல் விரிப்பைப் போட்டு அந்தச் சித்தர் பெருமானை இடைக்காடர் உபசரித்தார். பின் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆடு ஒன்றைப் பிடித்து வந்து அதன் பாலினைக் கறந்து சித்தரிடம் அளித்து இடைக்காடர் பேரானந்தம் அடைந்தார். பின் சித்தர் பெருமானும் மனம் களித்து இடைக்காடர் தமக்கு அளித்த ஆட்டுப்பாலை வாங்கிப் பருகியதுடன் அவருக்கு மெய்ஞ்ஞான பாலை வழங்கிடத் திருவுள்ளம் கொண்டார். 

அந்நொடி வரையில் எழுத்தறிவு இல்லாதிருந்த இடைக்காடர் மெய்யறிவு என்னும் ஒளி வெள்ளம் தம்முள் பாயக் கண்டார். பேரானந்தப் பெருவெளியில் அவர் இருந்தார். வாதம், வைத்தியம், ஞானம், யோகம் என அனைத்தையும் விரைவில் தெளிவுறக் கற்றுத் தேர்ந்தார்.

இடைக்காடருக்குத் தாம் கற்பித்திட வேண்டிய அனைத்தையும் கற்பித்து முடித்த நவநாத சித்தர் சட்டென மறைந்தருளினார். அதுகண்டு மனம் வருந்தினாலும் இடைக்காடர்,

ஆயிரத்தெட்டு வட்டமும் கண்டேன்
அந்தவட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
மாயிரு ஞாலத்து 
நூற்றெட்டும் பார்த்தேன்
மந்த மனத்தூறும் சந்தேகம் தீர்ந்தேன்

என்று மனம் தெளிந்து, இறை நெறியில் நின்று மனிதர்கள் உய்ய வேண்டித் தாம் உணர்ந்த ஞானத்தைப் பாடல்களாகப் பாடத் துவங்கினார்

இடைக்காடருக்கு ஞான உபதேசம் செய்தருளியவர் யார்? 

அவர் இட்ட கட்டளை யாது?

அடுத்த வாரம் பார்ப்போம்.


Home Pathinettu Siththargal Previous                                                                Next

No comments:

Post a Comment