February 19, 2016

Idai Kaadar - Part 4

இடைக்காடர் சித்தர் வாழ்க்கை வரலாறு – பாகம் 3


நவக்கிரக நாயகர்கள் தம் குடிசைக்கு வந்ததைக் கண்டு இடைக்காடர் போரானந்தம் அடைந்தார். ஐயோ என்ன விந்தை இது விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்துள்ளீர்களே முதலில் கொஞ்சம் சாப்பிடுங்கள். இந்த ஏழையிடம் என்ன இருக்கப் போகிறது வரகு ரொட்டியும், ஆட்டுப் பாலும்தான் உள்ளன. இவை எளிய உணவு என்று இகழாதீர்கள். என் உயிரைக் கலந்து நான் தருகிறேன். இவ்வுணவை உண்டு சிரம பரிகாரம் செய்துகொள்ளுங்கள். பிறகு பேசுவோம் என்று தம் குடிசைக்கு வந்த நவக்கிரக நாயகர்களை உபசரித்தார்.

சித்தரான இடைக்காடரின் வேண்டுதலை மறுக்க முடியாது நவக்கிரக நாயகர்களும் அவர் அளித்த வரகு ரொட்டிகளை உண்டு ஆட்டுப்பாலைப் பருகினார். எருக்கிலைச் சத்து நிறைந்த பால் என்பதால் அதை அருந்தியதும் நவக்கிரக நாயகர்கள் மயங்கி விழுந்தனர். கிரக நாயகர்கள் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்டதும் இடைக்காடர் அவை யாவும் எந்தெந்த இடத்தில் இருந்தால் மழை பொழியுமோ அந்த அமைப்பில் மாற்றிப் படுக்க வைத்துவிட்டார்.

உடனே வானில் கருமேகங்கள் திரண்டு இருண்டது. மழை பொழிந்தது. வறண்ட பூமி குளிர்ந்தது. ஆறு, குளம், குட்டைகள் என யாவும் நிரம்பி வழிந்தன. மயக்கம் தெளிந்து விழித்தெழுந்த நவக்கிரக நாயகர்கள் தாங்கள் இடம் மாறி அமைந்திருப்பதைக் கண்டு திகைத்தனர். நொடியில் அவர்களுக்கு இது சித்தர் செய்த அற்புதம் என்பதை உணர்ந்தனர். நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கிய இடைக்காடரின் நுண்ணறிவை மெச்சிய அவர்கள் அவர் வேண்டிய வரங்களை அளித்து விடைபெற்றுச் சென்றனர்.

இதனால் இடைக்காடரின் புகழ் பாரெங்கும் பரவியது. அவரைத் தரிசிக்கவும், உபதேசம் பெறவும் உலகில் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் பெருந்திரளாக வந்து கூடினர்.

ஒரு முறை திருமாலை வழிபடுவோர்க்கு ஓர் ஐயம் உண்டானது. திருமால் பத்து அவதாரம் எடுத்துள்ளாரே இதில் எந்த அவதாரத்தை வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்று ஆலோசித்தனர். இதற்கான விடை காணாது தவித்த திருமாலின் பக்தர்கள் சித்தரிடம் இதற்கான விடையைப் பெற்றிடலாம் எனக் கருதி இடைக்காடரிடம் வந்து கேட்டனர். ஆனால் சித்தர் பெருமானாகிய இடைக்காடரோ, ஏழை இடையன் இளிச்சவாயன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

தங்கள் ஐயப்பாட்டுக்கு விடை தேடி வந்த திருமால் பக்தர்களுக்கு சித்தரின் பதில் சட்டெனப் புரியவில்லை. நீண்ட நேரம் யோசித்தனர். பின் இடையன் என்றால் கிருஷ்ணர், இளிச்சவாயன் என்றால் நரசிம்மர், ஏழை என்றால் சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த இராமன் என்று முடிவு செய்தனர். அதன்படி ஸ்ரீ கிருஷ்ணபகவான், நரசிம்ம மூர்த்தி, ஸ்ரீ இராமபிரான் ஆகிய மூவரையும் வழிபட்டால் விரைவில் இறையருள் கிட்டும் என்பதை உணர்ந்து தெளிந்தனர். தங்களது ஐயப் பாட்டை எளிதில் தீர்த்தருளிய இடைக் காடரின் நுண்ணறிவைப் போற்றி மகிழ்ந்தனர்.

இடைக்காடர் வாழ்ந்த காலம் கடைச்சங்க காலம் என்றும், திருவள்ளுவ மாலையில், கடுகைத் துளைத்து, ஏழு கடலைப் புகுத்தி என துவங்கும் திருக்குறளின் பெருமைகளைப் பறைசாற்றும் பாடல் இவர் பாடியது என்றும் கூறுவர்.

இவர் குலசேகர பாண்டியன் காலத்தவர் என்றும், கபிலருடன் சேர்ந்து பாண்டிய மன்னரைக் காண வந்தபோது மன்னர் மரியாதை செய்யாததால் அங்கிருந்து கோபித்துக் கொண்டு சென்று விட்டார் என்றும், இடைக்காடர் சென்றதைத் தொடர்ந்து கபிலர் உள்ளிட்ட சங்கப் புலவர்களும் உடன் நீங்கினர் என்றும் கூறப்படுகிறது. இதனைக் கண்டு மனம் வருந்திய பாண்டிய மன்னர் இடைக்காடரிடம் தம் தவறை மன்னித்தருளுமாறு வேண்டி அவரை உரிய மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து வரப் பிற புலவர் பெருமக்களும் அரசவைக்குத் திரும்பினர் என்றும் கூறுவர். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இப் பாடல்களைப் பாடிய இடைக்காடர் வேறு நபர் என்று கூறுவோரும் உள்ளனர்.

கேரளத்தில் உள்ள இடைக்காடு என்ற ஊரில் பிறந்து ஊசிமுறி என்ற நூலை இயற்றியவர் இவரே என்றுரைப்போரும் உண்டு. ஒரு சிலர் இவர் திருமாலின் அவதாரம் என்றும்கூடக் கூறியுள்ளனர்.தம்முடைய ஞானசூத்திரம் 70 என்ற நூலின் காப்புப் பாடலில் இடைக்காடர்,
Imagesஇடைக்காடர்.jpgகாப்பு முதல் காட்சி என்று கடைசியில் நின்று
கடைச் சரக்கைக் கண்டுகொள்ளக் காப்பிற் பாடி
காப்பு முதல் முதற்சேர்த்து நடுவில் நின்று
கணபதி தாளிரு சரணம் காப்பாம் என்று
காப்பு முதல் மூலர் கோரக்க நாதர்
கமலமுனி போகரிஷி பாதங் காப்பு

என்று பாடியுள்ளார். இதனால் போகமுனிவரே இவரின் குருநாதர் என்றும், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இடைக்காடருக்கு மெய்ஞ்ஞான உபதேசம் செய்தருளியவர் போக முனிவரே என்றும் உறுதிபடக் கூறப்படுகிறது. இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதி கொண்டுள்ளார் என்று போகர் ஜனன சாதரத்தில் கூறப்பட்டுள்ளது


இவரை மகா விஷ்ணு அவதாரம் என்றும் கருதுகிறார்கள். ஒரு சமயம் இவரிடம் சித்தர்கள் சிலர் வந்து. மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மிகவும் வணங்கத்தக்கவை எவை என்று கேட்டபோது “ஏழை  இடையன் இளிச்சவாயன்’’ என்று கூறிச் சிரித்தாராம். இவர் சாரீரம் என்னும் வைத்திய நூல் இயற்றினார் என்றும், போகரின் மாணவர் எனவும், மதுரைக்குக் கிழக்கிலுள்ள இடைக்காட்டில் பிறந்தவரெனவும் கூறுவர்.இடைக்காரர் என்னும் பெயரில் சங்க காலத்திலும் ஒரு புலவர் இருந்து அகநானூறு, குறுந்தொகை, திருவள்ளுவ மாலை முதலிய நூல்களில் சில பாடல்கள் இயற்றியிருக்கிறார். 

தொல்லப் பிறவியின் தொந்தமுற்று அறவே
சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் பதம் உமக்கு
இல்லையென்று எண்ணுவீர் கோனாரே!

[இந்த மானிடப் பிறவி என்பது தொல்லை நிறைந்தது. அன்றாட உணவுக்காவும், வேலைக்காவும், உடைகளுக்கும், இருப்பிடத்திற்காகவும் படும் துன்பங்களை காண்கிறோம். இந்த பிறவியை ஞானிகள் துன்பம் என்றும், நோய் என்றும் கூறுகிறார்கள். இடைக்காரர் தொல்லைறுரும் பிறவி என்கிறார். இந்த துன்பங்கள் தீங்க சோம்பலை தீக்கி தவம் செய்ய வேண்டும். தவத்தின் மூலம் இறைவனின் பதம் நமக்கு வாய்க்கும், நம்முடைய பிறவி நோயும் தீரும்.]

பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்றற்ற நின்றதைப் பற்றி அன்பாய்
நெஞ்சத்து இருத்தி இரவு இரவு பகலுமே
நேசித்துக் கொள்ளூவீர் கோனாரே !

[மெய், வாய், கண், செவி இவைகள் ஐந்தும் மனிதனை தீயவழியில் அழைத்துச் செல்கிறது. இந்தப்  பொறிகளின் மூலம் எப்பொழுதும் சஞ்சலமே. இந்த சஞ்சலம் நீங்க இவ்வைந்துபாவங்களை போக்க இறைவன் பால் திரும்ப வேண்டும். பற்றற்றவன் இறைவன், உடலால்இறைவனை வணங்கவும், வாயால் திருமாம் கூறவும், கண்ணால் திருமேனியைக் காணவும், மூக்கால் வாசனை அறிந்து,செவியால் இறைவனின் நாமம்கேட்டு வந்தால் துன்பம் நீங்கும்.]
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
[ நன்றி - நூல் குறிப்பு உதவி :- இறவா சித்தர்கள், சித்தமெல்லாம் சிவம்]

Home Pathinettu Siththargal Previous                                                                Next

No comments:

Post a Comment