February 02, 2016

Tirumular - Siththar - Part 4

திருமூலர்

திருமூலரின் வரலாற்றுக்குச் சான்றாக உள்ளவை சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்துள் திருமூல நாயனார் புராணமும், நம்பியாண்டார் நம்பி திரு மூலரைப் பற்றிப் பாடிய பாடலும் ‘தமிழ் மூவாயிரம்’ என்னும் திரு மந்திரப் பாயிரத்தில் உள்ள ‘திருமூலர் வரலாறு’ என்னும் அதிகாரமு மாகும். இவற்றுள், பாயிரத்தில் உள்ள பல பாடல்கள் இடைச் செருகலாக உள்ளன.

திருமூலர் பொதிகை மலையில் அகத்தியரைக் காண்பதற்காகக் கயிலை மலையிலிருந்து தென் திசைக்கு வந்தார் என்ற பெரிய புராணச் செய்திக்குத் திருமந்திரப் பாயிரத்தில் ஆதாரம் யாதுமில்லை. மாறாக, ஆசிரியர் நூலினுள் அகத்தியரின் வரலாற்றைஅவர் பொதிய மலைக்கு வந்த காரணத்தை ஒரு புராணக்கதை போலக் கூறுகின்றார். அகத்தியர் பற்றிய வரலாறுகள் பல. அவற்றுள் எந்த அகத்தியர் திரு மூலருக்குச் சம காலத்தவர் எனத் தெரியவில்லை.

‘திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தார், ஆண்டுக்கு ஒரு பாடலாகத் திருமந்திரப் பாடல்களை இயற்றினார்’ என்று சேக்கிழார் கூறும் செய்தி அவர் செவி வழிக் கேட்டதாதல் வேண்டும். திருமூலர் யோக ஆற்றலால் மிகப்பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது உண்மையே. ஆனால், யோகத்தில் 3000 ஆண்டுகள் இருந்து ஆண்டுக்கொரு பாடலாகத் திருமந்திரத்தைப் பாடினார் எனக் கொள்ளுதற்குச் சான்றில்லை. மாறாக, திருமந்திரத்தின் பல பகுதிகளை நோக்கும் போது, அவை ஒருங்கே ஒரு காலத்தில் செய்யப்பட்டனவாகத் தோன்று கின்றனவே அன்றி, ஆண்டுக்கொரு பாடலாக வெளிப் போந்தவையாகத் தோன்ற வில்லை.
இலக்கிய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்கள் திருமூலரின் காலத்தைக் கண்டறிவதில் இடர் பாடுகள் உள்ளமையைத் தெரிவித்துள்ளனர். ஆயினும் இங்கு ஒரு சில அகச் சான்றுகளைக் கொண்டு அவரது காலத்தை வரையறுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் திருத் தொண்டத் தொகையுள் ‘நம்பிரான் திருமூலர்’ எனக் குறிப்பிடுகின்றமையால், 8ஆம் நூற்றாண்டையே திருமூலரின் காலத்திற்குப் பின் எல்லையாகக் கொள்ளலாம். திரு மந்திரத்துள் ‘தமிழ் மண்டலம் ஐந்து’ என்னும் குறிப்பு வருகிறது. சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுடன், கொங்கு மண்டலமும் தொண்டை மண்டலமும் சேர்ந்து ஐந்து மண்டலங்களாக எண்ணப்படும் வழக்கு உண்டான பின்னரே திருமூலர் நூல் பாடியிருக்க வேண்டும். சங்க இலக்கியத் திலும், சிலம்பிலும் கொங்கரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன என்ற போதிலும் கொங்கு மண்டலம் என்ற குறியீடு இல்லை. தொண்டை மண்டலம் என்ற வழக்குப் பல்லவர் ஆட்சிக்குப் பின்னரே உண்டாயிற்று. பல்லவரின் ஆட்சி கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம்நூற்றாண்டு வரை நிலவியது. திருமூலர் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றார். சிற்றம்பலத்தில் முதன்முதலில் பொன்வேய்ந்தவன் 5ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னாகிய சிம்மவர்மன் ஆவான்.
தேவார காலத்திலும் அதற்குப் பின்னும் சமய, காப்பிய இலக்கியங்களைப் பல்வகை விருத்தயாப்புகளில் பாடும் வழக்கம் இருந்தது. திருமூலரோ கலிவிருத்த யாப்பையே மேற்கொண்டுள்ளார். இக்காரணத்தால் அவர் தேவார காலத்திற்கும் முன்பிருந்தவராதல் வேண்டும்.
வெள்ளை வாரணனார் திருமந்திரத்தின் சொற்கள், தொடர்கள் ஆகியவை மூவர் தேவாரத்திலும் ஆளப் பெற்றமையை எடுத்துக் காட்டுகின்றார்.
மேற்குறித்த காரணங்களைக் கொண்டு திருமூலர் நூல் பாடிய காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டினை யொட்டிச் சற்று முன்பின்னாகக் கொள்ளப் படலாம்  நந்தியின் சீடர்கள்எண்மர். அவர்கள் ‘நாதன்’ என்ற பட்டப் பெயர் பெற்றவர். அவர்கள் நான்கு நந்திகள், சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிர பாதர், திருமூலர் என்போர்.
திருமூலருக்குச் சிவன் ஏழுலட்சம் முறைகளைக் கூறினார். அவைகளைத் திருமூலர் செய்து பார்த்துத் தேர்ந்தார் அம்முறைகளைச் சுருக்கிச் கொங்கணர் பாடினார். 
திருமூலர் அறிந்த முறைகளைக் கொங்கணர் பாடினார் என்றதனால் கொங்கணர் திருமூலரின் மாணவராதல் வேண்டும்.
திருமூலர் சோழனின் வேண்டுகோளுக்கிணங்க சிதம்பரத்தில் நடராசன் சிலையைத் தங்கத்தால் வார்த்துத் தந்தார் என்று அகத்தியர் குறிப்பிடுவதனால் திருமூலருக்கு அகத்தியர் சமகாலத்தவராகவோ அல்லது பிற்பட்டவராகவோ இருக்கலாம்.
“வெல்லுமே யினியென்ன இராசாளி முன்னே
மேவுமோ கொக்குகள் கொங்கணரே ஐயா
சொல்லுமே சட்டைமுனி சொன்ன வாரே
தூண்டினதை மூலரென் சிறிய தந்தை
பல்லுறவை படித்தாரே பிண்ணாக் கீசர்
பாடுமென்ற உரைப்படி பாடி னேனே” ,
 

என்னும் மச்சமுனி உரையால், திருமூலர், கொங்கணர், சட்டைமுனி, பிண்ணாக்கீசர் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவராவர்.

“செய்யவே திருநீல கண்டர் வைப்பு”
“நீலகண்டர் உரைத்திருத்த பாண்டம் கூட”
“உள்ளபடி திருநீல கண்டர் வித்தை
உற்றுப்பார் திருமூலர் உரைத்தா ரப்பா”

சிவ யோகம்
யோகத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக எட்டு படிமுறைகள் உள்ளன. இந்த படிமுறைகள் யாவற்றையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பூரணமான யோக நெறியை அட்டாங்க யோகம் என்று கூறுவர். அட்ட என்றால் எட்டு என்று பொருள். அங்கம் என்றால் பகுதி. எட்டு பகுதிகளை உடையதால் இதற்கு அட்டாங்க யோகம் என்று பெயர். இதைப்பற்றி தமிழில் திருமந்திரமும், சமஸ்கிருதத்தில் ஆகமங்களும், பதஞ்சலி யோக சூத்திரமும் விரிவாகச் சொல்லுகின்றன. பல விதமான யோக முறைகள் விலை போகும் இந்தக் கால கட்டத்தில் விற்பனையாளர்களினால் ஏமாற்றப்படாமல் இருக்க யோகா பற்றிய அடிப்படை விளக்கம் நம் எல்லோருக்கும் தேவை. விலைக்கு வாங்கும் இந்த யோகப்பயிற்சிகளினால் கொஞ்சம் உடல் தசைகள் இளகி, சிறிது மன இளக்கமும் உண்டாகலாம். ஆனால் இவைகளுக்கும் மேலான ஆன்மீக நலன்களைப் பெற வேண்டுமாயின் வியாபார நோக்கமில்லாத, அனுபூதி பெற்ற குரு ஒருவர் மூலமாக யோகக்கலையைப் பயில வேண்டும். இதையே மேலான சிவ யோகம் என்றும், விளம்பரம் போட்டு, தியானம் என்றும், குண்டலினி தீட்சை என்றும், ஜீவன் முக்த தீட்சை என்றும் விலை கூறி விற்கப்படும் யோகங்கள் எல்லாம் அவயோகம் என்று திருமூலர் சொல்லுகின்றார். அவ என்றால் கீழிறங்குதல். அவயோகம் என்றால் மேலிருந்து கீழ் நிலைக்கு விழுத்தும் யோகம் என்று பொருள்.

சிவயோகம் ஆவது சித்து, அசித்து என்று தவயோகத்து உள்புக்குத் தன்னொளி தன்னால் அவயோகம் சாராது அவன் பதி போக நவயோக நந்தி நமக்களித் தானே -திருமந்திரம் 122 இந்த பூரணமான, முழுமையான யோகக்கலையான அட்டாங்க யோகத்தின் எட்டு படிமுறைகளையும் இப்போது பார்ப்போம்.

1. இயமம்; யோகம் பயில்வதற்கு முதற்படி இயமம். அகிம்சை, சத்தியம், பொருள் கவராமை, காமத்தை வழிப்படுத்தல், அவா குறைத்தல் இந்த ஐந்தும் யோகத்தின் முதலாவது படியான இயமத்தின் வழிமுறைகள் (disciplines).
 

கொல்லான், பொய் கூறான், களவிலான், எண்குணன்
நல்லான், அடக்க முடையான், நடுச்செய்ய
வல்லான், பகுந்துணபான், மாசிலான், கள், காமம்
இல்லான், இயமத் திடையில்நின் றானே.
என்று திருமந்திரம் இவற்றை மேலும் விரித்துக் கூறும்.

2. நியமம்; தூய்மை, திருப்தி, தன்னடக்கம், தன்னாய்வு, கடவுளிடம் சரண் இந்த ஐந்தும் யோகத்தின் இரண்டாவது படியான நியமத்தின் வழிமுறைகள் (disciplines).
 

தூய்மை, அருள், ஊண் சுருக்கம், பொறை, செவ்வை
வாய்மை, நிலைமை வளர்த்தலே, மற்றுஇவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே
தவம், செபம், சந்தோடம், ஆத்திகம், தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகஞ்சிவ பூசை,யொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே
என்று திருமந்திரம் இவற்றை மேலும் விரித்துக் கூறும்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இயம நியமங்களைக் கடைப்பிடிப்பது கடினமாகத் தோன்றலாம். இது நீந்தத் தெரிந்தவன்தான் தண்ணீரில் இறங்கலாம் என்பது மாதிரியாக. ஆனாலும் இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று ஊக்கியாக இருப்பதால் ஒன்றைத் தொடங்கும்போதே மற்றது இலகுவாகத் தானாகவே கைவரத்தொடங்குகின்றது. பொய்மை, கோபம், அவா போன்றனவும் நித்திரையிலே எமது கையிலுள்ள பொருள் நாமறியாமலே வழுவுமாப் போல் தானாக வழுவி விலகத்தொடங்குகின்றன. ஆகவே இயம நியமங்களைப் பார்த்து யாரும் அஞ்சி ஒதுங்கத் தேவையில்லை. யோகம் என்பது வாழ்க்கையைச் செவ்வனே வாழுவதற்கும், அனுபவிப்பதற்கும் அத்தியாவசியமான, எல்லோருக்கும் பொதுவான, எல்லோருக்கும் உரியதான ஒன்று.

3. ஆசனம்; நாம் பயிலும் யோகாசன அப்பியாசங்கள் எல்லாம் இயம நியமத்துக்கு அடுத்த படியாகத்தான் வருகின்றது. நாளும் பல்வேறு வழிகளிலும் சிதறிப்போய் வீணாகும் எமது உடல், உள, ஆத்மீக சக்திகளை ஒரு வழியில் ஒழுங்கு படுத்த உதவுபவை (channeling the energies) இந்த இயம நியம வழி முறைகள். இயம நியமங்களைப் புரிந்து கொண்டு அவற்றை தத்தமக்கு குரு விதித்த படி கடைப்பிடிக்க முயலாமல் இந்த ஆசனங்களின் முழுப்பயன்களையும் அடைய முடியாது. அதற்காக இயம நியமங்கள் நமக்கு இன்னும் நடைமுறைக்கு வரவில்லையே என்று காத்திருக்க வேண்டியதில்லை. இவற்றை அறிந்து கொண்டு யோகப்பயிற்சியில் இறங்கினால் நாளாக நாளாக இவை தம் பாட்டில் வந்து கை கூடும்.

4. பிராணாயாமம்; மூச்சுப்பயிற்சி என்னும் பிராணாயாமம் என்பது நாம் இன்று மேலைத்தேச மருத்துவத்திலும் மன உளைச்சல், மனப்பதட்டம், மனச்சோர்வு, மன எரிச்சல், கோபமிகுதி, ஆத்திரத்தில் அடித்துடைத்தல் போன்ற மனக்குழப்பங்களுக்கும், நீண்ட நாள் தலையிடி, கழுத்து நோ, முதுகு வலி, உடல் வலி, போன்ற உடல் நோய்களுக்கும் சிகிச்சையாகப் பரிந்துரைக்கிறோம். ஆயினும் முன் சொன்ன இயம, நியம, ஆசனங்களைப் பின்பற்ற முயலாமல் பிராணாயாமத்தின்முழு நலன்களையும் பெற முடியாதுள்ளது. ஒரு சில உள நலச் சிகிச்சையாளர்கள் யோகாப்பியாசத்தையும், அரிதாகச் சிலர் சைவ உணவையும் பரிந்துரைத்தாலும் இதற்கும் மேல் தூய்மை, திருப்தி, அவாக் குறைத்தல், அகிம்சை போன்றவற்றைப் பற்றிக் கூறுவது அரிது. முறையாகப் பயிலும்போது பிராணாயாமமானது மூச்சு ஓட்டம் மூலமாக எமது உயிர்ச்சக்தியை எழுப்பி விரிவடையச் செய்கின்றது. பிராணன் என்றால் உயிர்ச்சக்தி (vital force); ஆயம என்றால் விரிவடைதல் (expansion).
 

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம், தானே களிதரும்,
துள்ளி நடப்பிக்கும், சோம்பு தவிர்ப்பிக்கும்,
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே
 

என்று திருமந்திரம் இதை மேலும் விரித்துக் கூறும். புள் என்பது பறவை; புரவி என்பது குதிரை. "பறவையை விட விரைவான மூச்சோட்டம் என்னும் குதிரையைப் படியப்பண்ணினால் அது தானாகவே உள்ளத்தில் ஆனந்தத்தைத் தரும். களிப்பு அல்லது மகிழ்ச்சிக்காக நீங்கள் கள் போன்ற மது பானங்களை அல்லது போதையேற்றும் பொருட்களைப் பாவிக்க வேண்டியதில்லை. உங்களுடைய உடலிலும் புத்துணர்ச்சியையும், ஊக்கத்தையும் தூண்டி உங்கள் சோம்பலை விரட்டி உங்களை துள்ளல் நடையுடன் கூடிய புதிய மனிதராக ஆக்கும்" என்பது இதன் விளக்கம் ஆகும்.

5. பிரத்தியாகாரம்: அட்டாங்க யோகத்தின் ஐந்தாவது படி பிரத்தியாகாரம். மெதுவாக, படிப்படியாக எமது புலன்களை உள்முகமாக நோக்கச் செய்தல் பிரத்தியாகாரம்.
 

“கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம்” – திருமந்திரம்-.

முன் சொன்னபடி குருவின் வழிகாட்டலுடன் இயம, நியம, ஆசன, பிராணாயாமங்களைப் பழகி வர மனம் தானாகவே புலன்களை உள்ளே இழுக்கத் தொடங்கும். இதற்காக கஷ்டப்பட்டு மனத்தை அடக்கிப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. அதீத முயற்சியும் கட்டுப்பாடும் நன்மையை விட தீமையையே விளைவிக்கலாம். சில வேளைகளில் மனக்குழப்பங்களையும், மன நோய்களையும் கூட உண்டாக்கலாம்.

“ஓராதே, ஒன்றையும் உற்று உன்னாதே, நீ அதனைப்
பாராதே, பாரத்ததனைப் பார்”- திருவருட்பயன்-.

ஒன்றையும் அதீதமாக முயற்சி பண்ணி வருந்தவோ தம்மை வருத்தவோ கூடாது. அந்தப்படிமுறையில் பயின்றுவர அது தானாகவே கை வரும். அப்பொழுது நாம் அதனை அறிந்து கொள்ளலாம்.

6. தாரணை; அட்டாங்க யோகத்தின் ஆறாவது படி தாரணை. இதன்போது மன ஒருமிப்பு (concentration, attention and focusing) பழக்கப்படுகின்றது. எதையும் பார்த்தவுடனே கிரகிக்கும் தன்மை, விளங்கிக்கொள்ளும் தன்மை வெளிப்படுகின்றது.

7. தியானம்; அட்டாங்க யோகத்தின் ஏழாவது படிதான் தியானம். ஆனாலும் பலர் இயம, நியம, ஆசன, பிராணாயாமம் போன்ற அடிப்படைப் படிநிலைகளை அறியாமலும், பயிலாமலும், பழகாமலும் தியானம் என்று தொடங்கி முயன்று அல்லலுறுகின்றனர். அனேகர் கண்ணை மூடிக்கொண்டு அரை நித்திரை கொள்ளுதல்தான் தியானம் என்றும் நினைத்து விடுகிறார்கள். தியானம் என்பது யோகத்தின் முதல் ஆறு படிநிலைகளினூடாகக் குருவின் வழிகாட்டலுடன் செல்லுகையில் தானாகப் பிறக்கின்ற, வருகின்ற ஒன்று. அது வரைக்கும் தியானம் என்று கண்ணை மூடிக்கொண்டு கஷ்டப்படாது ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தையோ தமது இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தையோ அல்லது தமது குரு மூலமாகக் கிடைத்த மந்திரத்தையோ வாய் விட்டோ அல்லது தனக்கு மட்டும் கேட்கும் படியாகவோ மீண்டும் மீண்டும் சொல்லி செபிக்கும் மந்திர செபமே ஒரு தியானம் தான். அல்லது தமக்குத் தெரிந்த அல்லது பிடித்தமான கடவுள் தோத்திரங்களையோ, கதைகளையோ, புராணங்களையோ படித்து பாராயணம் செய்தலும் ஒரு வகைத் தியானமே.

வருமாதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.

The ten, five basic elements, five senses
Being contained, one by the other
The Buddi in turn contains the sences
Thus is dhyana born; para dhyana first
That is Shakthi centered, Siva dhyana next
that is by Guru blessed, these are the ways

8. சமாதி; அட்டாங்க யோகத்தின் இறுதி நிலை சமாதி. இது முன் சொன்ன ஏழு வழி முறைகளும் சித்தியாகிக் கூடி வரும்போது பிறக்கின்ற முழுமையான ஒருங்கிணைந்த ஆழ்ந்த தியான நிலையாகும். யோகத்தின் இறுதி நிலையே சமாதி.

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படும் தானே.
Samadhi is the end of iyama and the rest
Samadhi is consummation of Siddhis eight
Who persevere in the path from iyama to the end
Will alone the end samadhi attain

கர்மயோகம், பக்தியோகம், தியானயோகம், இராஜயோகம், ஹடயோகம் என்று பல விதமாகப் பகவத் கீதையிலும், ஹடயோகப் பிரதீபிகா போன்ற வேறு பல நூல்களிலும் பரிந்துரைக்கப்படுகின்ற யோக நெறிகள் எல்லாம், இந்த அட்டாங்க யோக மார்க்கத்துள் அடங்குகின்றன. திபேத்திய பௌத்தர்களினால் பின்பற்றப்படுகின்ற சென் தியான முறை ( Zen meditation) தியான யோகமே. பகவத் கீதை மற்றும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் ஆகியவற்றில் குறிப்பிடப்படாத குண்டலினி யோகமும், ஆறு ஆதாரச் சக்கர யோக நெறிகளும் திருமந்திரத்திலும், ஆகம நூல்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. யார் யாருக்கு எந்தெந்த படி முறைகள் எந்தெந்த காலங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே குருவினுடைய பணி. யோக நெறியின் முழுமையான நிலைகளையும், பலன்களையும் எட்டுவதற்கு இவற்றில் அனுபவமும், அனுபூதியும் வாய்ந்த குரு ஒருவரின் நேரடியான வழிகாட்டல் தேவை. அனுபவமும் அனுபூதியும் இல்லாமல் மற்றவர்களுக்கு ஞான உபதேசம் செய்யக்கூடாது என்பது ஆகம நெறி.

Home Pathinettu Siththargal Previous                                                                Next

No comments:

Post a Comment