February 02, 2016

Tirumular - Siththar - Part 5

திருமூலர் காட்டிய வாழ்க்கை நெறி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழ மொழி ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான சூழலில் ஏற்பட்டுள்ள ஏராளமான பிரச்சனைகளால் நோயற்ற மனிதனைப் பார்ப்பது அரிதாகி விட்டது. வாழ்க்கைத்திறன் அதிகரித்திருப்பதாக நினைக்கும் அறிவாளிகள் கூட இன்றைய சூழலில் சிக்கி தவிக்கின்றனர். காலையில் எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை நம் வாழ்க்கை முறைமாறி மாறி, உடல் உழைப்பு குறைந்ததனால் உடலின் பலம், நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவை குறைந்ததுடன் ஆயுளும் சுருங்கி விட்டது. விஞ்ஞானம், நாகரீகம் வளர்ந்தது ஆனால் மனிதனின் வாழ்க்கைத் தரம் குறைந்து விட்டது. போட்டி, பொறாமைகளினால் நமது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. நாம் நமது கலாச்சாரத்தை, பண்பாட்டை, நாகரீகத்தை இழந்து தவிக்கிறோம். அதற்கு தீர்வு யோகம் கற்று வாழ்க்கையை மேம்படுத்துவதே.  

நம் நாட்டில் வாழ்ந்த ரிஷிகள் நமக்கு கொடுத்த விஷயங்கள் ஏராளம் அவற்றினுள் யோகம் முதலிடம் வகிப்பதோடு மட்டுமல்லாமல் இன்றய தேவையும் கூட. யோகம் என்ற சொல் யுஜ் என்ற வேர் சொல்லிலிருந்து வந்தது. யுஜ் என்றால் இணைதல் என்று பொருள். அதாவது ஜீவாத்மாவும் பரமாத்வாவும் இணைய வேண்டும் என்பது நோக்கம். யோகத்தில் பல வகைகள் உள்ளன. உதாரணம் ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம் அஷ்டாங்க யோகம், ஹட யோகம், குண்டலினி யோகம் இன்னும் பல உள்ளன.

யோகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் தமிழ் நாட்டில் தோன்றிய திருமூலர் மிக முக்கிய அங்கம் வகிக்கிறார். அவர் இயற்றிய திருமந்திரம், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டது. அவற்றில் அஷ்டாங்க யோகம், அஷ்ட சித்தி, குண்டலினி யோகம் போன்றவை தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன.
திருமூலர்

திருமூலரின் இயற்பெயர் சுந்தரனார். பிற்காலத்தில் இவருடைய பெயர் மருவி திருமூலர் ஆனார். இவரும், யோக சாஸ்த்திரத்தை இயற்றிய பதஞ்ஜலி முனிவரும் ஒரே குருவிடம் பயின்றவர்கள் என்று திருமூலரே திருமந்திரம் என்னும் நூலில் கூறியுள்ளார். கீழ்கண்ட பாடலின் மூலம் இருவரும் சம காலத்தவர் என்று கணிக்க முடிகிறது.

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்று இவர் என்னொடு எண்மரும் ஆமே. (67) - திருமந்திரம்

திருமூலர் ஒரு வருடம் தவமியற்றி ஒரு பாடல் இயற்றினார், இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகள் தவமிருந்து இயற்றிய நூல் திருமந்திரம். கீழ் வரும் பாடலில் திருமூலரே விளக்குகிறார்.

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. (80)

திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” மற்றும் “அன்பே சிவம்” என்பவை உலகப் புகழ் பெற்ற வாக்கியங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய இக் கருத்து ஹிந்து தர்மத்தின் பரந்த மனப்பான்மையை உலகுக்குப் பறை சாற்றுகின்றன. திருமந்திரத்தில் ஒன்பது தந்திரங்கள் உள்ளன. அவற்றில் நாம் அஷ்டாங்க யோகத்தைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.

உடலின் முக்கியத்துவம்

“சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்” என்பது பல மொழி, அது போல உடம்பு இல்லாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை, எனவே இன்றய காலகட்டத்தில் உடலினைப் பேணிப் பாதுகாப்பது என்பது அவசியமானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. உடலினைப் பேணிப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத் திருமூலர் கீழ் வரும் பாடலின் மூலம் விளக்குகிறார்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (724)

உடல் அழிந்தால் உயிர் அழிவதுடன் அறிவும் வளராது எனவே உடலை வளர்க்கும் முறையை அறிந்து, உடலை வளர்த்து உயிரையும் வளர்த்தேன் என்கிறார்.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (725)

இந்தப் பாடலில் உடலினை இழுக்கென்றிருந்தேன், பிறகு அதனில் கடவுள் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு உடலை பாதுகாத்தேன் என்கிறார். நாம் ஒவ்வொருவரும் உடலினைப் பேணிப் பாதுகாத்துப் பயனுற வேண்டும். அவ்வாறு உடலையும் மனதையும் பேணிப் பாதுகாக்க திருமூலர் காட்டிய வழி அஷ்டாங்க யோகம். சென்ற வாரம் இதைப்பற்றி விரிவாகப் பார்த்திருந்தாலும் அதன் ஆழம் கருதி மறுபடியும் தருகிறேன்.

அஷ்டாங்க யோகம்
 

அஷ்டாங்க (அஷ்ட + அங்க) என்பது எட்டு வகையான படிகள் (பகுதிகள்) என எளிமையாகக் கூறலாம். திருமூலர் காட்டிய எளிய வழி அஷ்டாங்க யோகம். ஒரு பாடலில் திருமூலர் “யோக விசேடமே அட்டாங்க யோகமாம்” என்கிறார். பதஞ்ஜலி முனிவர் இயற்றிய யோக சாஸ்த்திரத்தில் அத்யாயம் இரண்டு, ஸ்லோகம் இருபத்தி ஒன்பதில் அஷ்டாங்க யோகத்தை பற்றி விளக்குகிறது. திருமூலரும் பதஞ்ஜலி முனிவரும் கூறிய அஷ்டாங்க யோகத்தைப் பற்றி விரிவாகக் காண்போம்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம் பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. (552)

அவை முறையே
 

1. இயமம் : தவிர்க்கப்பட வேண்டியவை
2. நியமம் : பின்பற்றப்பட வேண்டியவை
3. ஆசனம் : இருக்கை
4. பிராணாயாமம் : மூச்சுப் பயிற்சி
5. பிரத்தியாகாரம் : மனதை புலன் வழி நாட்டத்திலிருந்து திருப்புதல்
6. தாரணை : மனதை ஒருமுகப்படுத்துதல்
7. தியானம் : மனதை ஒரே சிந்தனையில் நிலைநிறுத்துதல்
8. சமாதி : ஆழ் நிலை தியானம்

இவற்றில் முதல் ஐந்தும் உடலும், மனமும் சம்பந்தப்பட்டவை எனவே இதை பகிரங்க யோகம் எனவும், அடுத்த மூன்றும் மனமும், ஞானமும் சம்பந்தப்பட்டவை எனவே அதை அந்தரங்க யோகம் எனவும் கூறப்படுகிறது.

இயமம்(தவிர்க்கப்பட வேண்டியவை)

கொல்லான்பெய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே. (554)

உயிர்களை கொல்லுதல், பொய் பேசுதல், திருடுதல், புலன் இன்பம் நாடுதல் மற்றும் அதிகமாக சேர்த்து வைத்தல் இவை ஐந்தையும் தவிர்த்தால் வளமோடு வாழலாம். அகிம்ஷா பரமோ தர்மஹ என்கிறது சாஸ்த்திரம். இயமத்தை உடலாலும் மனதாலும் சிந்தனையாலும் கடைபிடிக்க வேணடும்.
நியமம்(பின்பற்றப்பட வேண்டியவை)

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே. (556)

சுத்தம், சந்தோஷம், தவம், சுய வளர்ச்சி மற்றும் ஆத்ம சமர்ப்பணம் ஆகிய ஐந்தும் நாம் அவசியமாக பின்பற்றப்பட வேண்டியவை. சுத்தமும், சந்தோஷமும், ஆத்ம சமர்ப்பணமும் உடலாலும் மனதாலும் பின்பற்றப்படல் அவசியம். தவமும், சுய வளர்ச்சியும் அறிவாலும், ஆற்றலாலும் முன்னேற்றமடைய வேண்டும். ஐந்து நியமங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை எனவே முழுமையான வளர்சி ஏற்பட நியமங்கள் ஐந்தும் சரியாக பின்பற்றப்பட வேண்டும்.

ஆசனம்(இருக்கை)

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு
முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே. (563)

அஷ்டாங்க யோகத்தின் மூன்றாவது நிலை ஆசனம். ஆசனம் என்பது உடலை வளைத்து செய்யக் கூடிய பயிற்சி. இங்கு திருமூலர் ஏழு மிக முக்கியமான ஆசனங்களை விவரிக்கிறார். அவையாவன பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம் மற்றும் சுகாசனம். பல நூறு ஆசனங்களுள் இவை ஏழும் மிக முக்கியமானவை.

பிராணாயாமம்(மூச்சுப் பயிற்சி)

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே. (567)

பிராணன் என்பது காற்று. காற்றில் ஐந்து வகை உள்ளன அவை பிராணன், அபானன், உதானன், சமானன், வ்யானன். இந்த ஐந்து வகையான காற்றும் பல வேளைகளைச் செய்கிறது அவை முறையே சுவாசித்தல், மலஜலம் கழித்தல், ஜீரணம், விழுங்குதல் மற்றும் இரத்த ஓட்டம். காற்று மனதோடு சம்பந்தப்படது. எனவே காற்றை கட்டுப்படுத்தினால் மனதையும் கட்டுப்படுத்தலாம். மிக சுலபமாக சரீரம், மனம், ஆத்மா இவற்றை அடக்கி நல் வழியில் செலுத்த உதவும். பிராணனை கட்டுப்படுத்தினால் வாழ் நாள் அதிகரிக்கும்.

பிரத்தியாகாரம் (மனதை புலன் வழி நாட்டத்திலிருந்து திருப்புதல்)

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே. (578)

பிரத்யாகாரம் என்பது மனதை புலன் வழி நாட்டத்திலிருந்து திருப்பி நல்வழி படுத்துதல். கர்மேந்திரியங்கள் ஐந்து அவை கை, கால், வாய், ஆசன வாயு மற்றும் பிறப்புறுப்பு. ஞானேந்திரியங்கள் ஐந்து அவை கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல். இந்த கர்மேந்திரியத்தையும் ஞானேந்திரியத்தையும் நல்வழியில் உபயோகப்படுத்த அளிக்கும் பயிற்சியே பிரத்யாகாரம். அவ்வாறு செய்தால் மனம் ஒருமுகப்பட்டு பல நன்மைகள் கிடைக்கும்.

தாரனை (மனதை ஒருமுகப்படுத்துதல்)

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே. (588)

மனதை ஒரே சிந்தனையில் நிலை நிறுத்திப் பயிற்சி செய்தல் தாரனை. கர்மேந்திரியத்தையும் ஞானேந்திரியத்தையும் மனதால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அதற்குத் தாரனை மிக முக்கியமான பயிற்சி. இது தியானத்தின் முதல் நிலை எனக் கூறலாம்.

தியானம் (மனதை நிலைநிறுத்துதல்)
 

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே. (598)

மனம் என்பது குரங்கு, அது எக்காலமும் சிந்தித்துக் கொண்டே இருக்கும். அத்தகைய மனதைக் கட்டுப்படுத்தி கவனத்தை நிலை நிறுத்தினால் எளிமையாக தியானம் கைகூடும். மனதையும், சிந்தனையையும் ஒருநிலையில் செலுத்துதல் தியானம்.

சமாதி (ஆழ் நிலை தியானம்)

யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே. (1490)

அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை சமாதி. எவர் ஒருவருக்கு சமாதி கைகூடுதோ அவருக்கு அஷ்ட சித்தி கிடைக்கும். சமாதி நிலையை அடைந்தவர் சித்தராகிறார்.

இந்த எட்டு நிலைகளையும் படிப்படியாக கற்று முக்தி அடைய வேண்டும் என்பது நம் முன்னோர்களின் விருப்பம். இன்றைய காலகட்டத்தில் நம்மால் எந்த அளவுக்கு கடைபிடிக்க முடியுமோ அந்த அளவுக்கு கடைபிடிக்க வேண்டும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை “முயற்சி என்பது முடிந்தவரை செய்வதல்ல முடியும்வரை செய்வதே” எனவே முயற்சி செய்து முன்னேற்றம் அடைய வேண்டும்.

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தால் நமக்கு பல அரிய புத்தகங்களும், விளக்க உரைகளும் எளிதில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி யோகத்தின் வழி வாழ்க்கை நடத்த இறைவன் நமக்கு உதவி புரிவான். யோகத்தின் வழி வாழ்க்கை வாழ்ந்தால் நம் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதுடன் சமுதாயத்தில் அமைதியும், சாந்தமும் நிலவும்.



Home Pathinettu Siththargal Previous                                                                Next

No comments:

Post a Comment