April 21, 2016

Sattaimuni - Part 3

சட்டைமுனி 

Sattaimuni Siddhar's photo.“ஓம் நமோ நாராயணாய ” என்ற மந்திரத்திற்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறது? அதனின் மகிமை என்னவென்று தெளிவாகக் கூறினார் ஸ்ரீராமனுஜர். அதை கேட்ட அவருடைய குருநாதருக்குக் கோபம் வந்ததுவிட்டது. அதுபோல சட்டை முனி சித்தர் போகரிடமும், கொங்கணச் சித்தரிடமும் சில வித்தைகளைக் கற்றார். தான் கற்ற வித்தைகளை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக எளிமையாக எழுதினார். பொதுவாகச் சித்தர்கள் பரி பாஷையில் வடிவிலும்தான் எழுதுவார்கள். ஆனால் சட்டை முனி சித்தர், எளியோருக்கும் புரியும்படியாக எழுதினார். இதனால் கோபம் கொண்டு சட்டை முனி சித்தர் எழுதிய நூல்களைக் கிழித்து எறிந்தார் திருமூலர். சட்டை முனியோ அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இதுவும் இறைவனின் செயல் என்று இருந்துவிட்டார்.

நல்ல மனம் படைத்தவர்களுக்குதான் துன்பங்கள் துரத்தி கொண்டே வரும். அப்படி ஒரு துன்பம் சட்டை முனி சித்தரையும் துரத்தியது. அது என்ன? அரங்கன் கோயில் கதவு தானாக திறந்தது சட்டைமுனி ஊர் ஊராகச் சென்று எண்ணற்ற ஆலயங்களைத் தரிசித்தார். இப்படி ஒவ்வாரு ஊரில் இருக்கும் ஆலயங்களை தரிசித்து வந்து கொண்டு இருக்கும் போது, வெகு தூரத்தில் திருவரங்கம் கோயில் கலசத்தைக் கண்டார். “அட அரங்கனைத் தரிசிக்க வேண்டுமே” என்ற ஆவலில் திருவரங்கப் பெருமாளைத் தரிசிக்க தன்னுடைய நடையில் வேகத்தைச் செலுத்தினார். இருந்தாலும் நள்ளிரவு பூஜை முடிந்துவிட்டது. ஆலயத்தின் கதவு சாத்தபட்டது. ஆலயக் கதவு சாத்தி இருப்பதைக் கண்ட சட்டைமுனி மனம் வருந்தினார். “அரங்கா உன்னைக் காண விரைந்தோடி வந்தும், என்னால் உன்னைத் தரிசிக்க முடியவில்லையே” என்று வருந்தினார். இந்த வார்த்தை கேட்ட அடுத்த நொடியே ஆலயத்தின் கதவுகள் சலசலவென மணி ஓசையுடன் திறந்தது. ஆலயமே முழுவதும் தீப வெளிச்சம் சட்டை முனி சித்தரை வரவேற்றது. அதை கண்ட சட்டைமுனி மகிழ்ச்சியடைந்து அரங்கனின் கருவரைக்குள் சென்று அமைதியாகத் தியானத்தில் அமர்ந்தார்.

திருவரங்க ஆலயக் கதவு திறப்பதின் ஒசை கேட்ட அக்கம் பக்கத்தினரும் ஊர்மக்களும் அரங்கன் ஆலயத்தில் திரண்டார்கள். ஆலயத்தின் கதவு திறந்திருப்பதையும், கருவரைக்குள் யாரோ ஒருவர் அரங்கனின் உடலில் இருந்த நகைகளை தன் உடலில் அணிந்திருப்பதையும் கண்டு, “கள்வன் ஒருவன் கோயிலுக்குள் நுழைந்து நகையைத் திருடிவிட்டான். மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து தவத்தில் இருப்பது போல நடிக்கிறான்.” என்று கூறி சட்டை முனி சித்தரை அடி அடி என்று அடித்துவிட்டார்கள் ஊர்மக்கள். அத்துடன் அரசரிடம் இழுத்து சென்றார்கள்.

கம்பளிச் சட்டை முனி “நீ யார்? எந்த ஊர்?” என்றார் அரசர்.

“நான் சட்டை முனி“ என்றார் சித்தர். “நீ சட்டைமுனியா?

நிச்சயமாக இருக்க முடியாது. அவரை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். சிவபெருமானின் சிறந்த பக்தர் அவர். மாபெரும் சித்தர். கயிலாய மலையின் குளிர் தாங்காமல் இருந்தபோது ஈசனால் கம்பளிச் சட்டை தரப்பட்டது. அவர் எங்கு சென்றாலும் கயிலாயநாதர் தந்த கம்பளி சட்டையுடன் செல்லும் வழக்கம் கொண்டவர். அதனால் அவருக்குக் கயிலாயக் கம்பளிச்சட்டை முனி என்ற பெயரும் உண்டு அத்துடன் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தவர் எனக் கேள்விபட்டு இருக்கிறேன். அப்படி உயர்ந்த ஒருவரின் பெயரை சொல்லித் தப்பிக்கவா பார்க்கிறாய்?“ என்று கோபம் கொண்டார் அரசர்.

“அரசரே ஆத்திரம் வேண்டாம். புத்தியை மறைக்கும் கோபத்தால் எடுக்கும் முடிவும் பாதகமாகும் என்பதை நீ அறியாதவன் அல்ல” என்று அமைதியாகப் புன்னகையுடன் கூறினார் சித்தர்.

“ஒரு திருடன் நீ, எனக்கே உபதேசம் செய்கிறாயா? அதுவும் அரங்கனின் ஆலயத்தில் திருடிவிட்டு எதுவும் அறியாதவனாக இருக்கிறாயே? என்ன நெஞ்சழுத்தம்?” என்றார் அரசர்.

“அரசனே அமைதியாக இரு. வேண்டும் என்றால் என்னுடன் வா. அரங்கனிடமே கேள் நான் கள்வனா என்று” என்றார் சட்டை முனி.

“சரி அதையும்தான் பார்க்கிறேன்.” என்று கூறிய அரசர், சட்டை முனியை எல்லோரும் பார்க்கும் படியாக ஒரு திருடனை அழைத்துச் செல்வது போல் இரும்பு சங்கலியால் கட்டி கோயிலுக்கு இழுத்து வந்தார்கள் காவலர்கள். திருவரங்கம் ஆலயத்தின் முன் நிறுத்தப்பட்டார் சித்தர். “அரங்கா… நீ எனக்கு அணிவித்த நகையை நான் திருடி அணிந்துக்கொண்டேனாம். என்னைக் கள்வன் என்கிறார்கள்.

இரங்கநாதா, திருவரங்கப்பெருமானே! காவிரி சூழ் நாயகனே! இந்தப் பாழும் மனிதர்களின் சந்தேகத்தைத் தீர்த்து வை. இந்த மனிதகுலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் புரியும் பாஷையிலே, பல குறிப்புகளை எழுதி வைத்தேனே! அப்படிப்பட்ட எனக்கு, இவர்கள் தந்திருக்கும் பரிசைப் பார்! என்னைத் திருடன் என்கிறார்கள். நானா திருடன். சிவபெருமான் அளித்த கம்பளிச் சட்டையைத் தவிர வேறெந்த ஆடம்பரமும் இல்லாத நானா உன் அணிகலன்களுக்கு ஆசைப்படுவேன்! நீயே இவர்களிடம் உண்மையை நிரூபி, அரங்கா.. அரங்கா.. அரங்கா…” என்று மூன்று முறை அரங்கனை அழைத்தார் சட்டை முனி. 
அர்த்தஜாம பூஜைக்குப் பின் சாத்தியிருந்த ரங்கநாதர் கோயில் கதவுகள் தானாகவே திறந்தன.சட்டை முனி மீது குற்றம் சாட்டியிருந்தவர்க ளெல்லாம் பதறிப் போனார்கள். 
அப்போது கோயிலுக்குள் இருந்து மணியோசை ஒலித்தது. மேளதாளங்கள் ஒலித்தது. கருவரையில் அரங்கன் அணிந்திருந்த நகைகள் தானாகக் கருவரைக்குள் இருந்து வெளியேறி, கோயிலின் வாசல் வழியாக வெளியே வந்து சட்டை முனி சித்தரின் கழுத்தில் விழுந்தது. அரங்கனின் நகைகள் சட்டை முனி சித்தரை அலங்கரித்தது. அப்போது திருவரங்கநாதன் சட்டைமுனி அருகில் காட்சி தந்தார்.

இந்த அற்புத காட்சியை கண்ட அரசரும் ஊர்மக்களும் மெய்சிலிர்த்துப் போனார்கள். உண்மையை உணர்ந்தார்கள். 
மன்னன் தலை குனிந்தான். சரியாக விசாரிக்காமலும், இந்த சித்தரின் மேன்மை புரியாமலும் சந்தேகப் பட்டு விட்டோமே என மனம் வருந்தினான்.
“உன் அருமை தெரியாதவர்களின் அருகில் கூட நிற்க வேண்டாம். இனி நீ என்னுடனும் சிவபெருமானுடனும் இருப்பதே நல்லது.” என்று எண்ணினாரோ என்னவோ, சட்டைமுனிவர் இறைவனுடன் ஒளிவடிவமாக இரண்டறக் கலந்தார். பிறவி இல்லா வரத்தை பெற்றார். இறைவனை நம்பினால் ஆபத்தில் இருந்தாலும் அவனே முன் வந்து காப்பார். .

விளையாடுவதும் அவன்தான், நம்மை ஆட்டுவிப்பதும் அவன்தான். இறைவனை நம்பி எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாக அமையும். முதலில் வெற்றி பெறத் தேவை முழுமையான நம்பிக்கை. அந்த நம்பிக்கையே வெற்றிக்குப் பாதையாக அமையும்.

யார் இந்தச் சட்டை முனி? கடல்சூழ் இலங்கையிலே சிங்கள தாசிப்பெண் ஒருத்திக்குப் பிறந்தவர் சட்டை முனி. இந்தப் பெண்மணியும், அவரது கணவரும் பிழைப்புக்காக தமிழகம் வந்தனர். சட்டைமுனி இளமையிலேயே தியானம், தவம் என அலைந்தார். மகனைச் சீர்திருத்தி, இல்லறத்தில் அடியெடுத்து வைக்கச் செய்ய மிகவும் போராடினர் பெற்றோரான சிங்கள தம்பதியர். மிகவும் கட்டாயப்படுத்தி மகனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டனர்.ஆனால், இறைவன் சித்தமோ வேறு மாதிரியாய் இருந்தது. சட்டைமுனிக்கு இல்லறத்தில் அறவே நாட்டமில்லை. துறவறம் பூண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். காடு, மலைகளில் திரிந்த அவர் போகர், திருமூலர், அகத்தியர் ஆகிய சித்தர்களைத் தரிசித்து அவர்களுடன் உரையாடி தானும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனவும், தனக்கு உபதேசிக்கும்படியும் வேண்டினார்.


சட்டைமுனி (நாதர்) .

ஒருமுறை உரோமசர் என்ற முனிவரை பொதிகை மலையில் தரிசித்தார். கயிலைக்குச் செல்லாமல் பொதிகைக்கு சிவபெருமானை வரவழைக்கும் அற்புதமான தவத்தில் ஈடுபட்டிருந்தவர் இந்த முனிவர். ஒருமுறை சிவன் இவருக்கு காட்சி கொடுத்து, முனிவரே! கயிலையில் கங்கைக்கு ஈடான பலன் கொடுக்கும் நதி ஒன்று அகத்தியரால் இங்கு பிறக்கும். தாமிரபரணி எனப்படும் அந்த நதி வற்றாத ஜீவநதியாக ஓடும். அந்நதியில் நீ ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடு. அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் அமைத்து வழிபடு. கயிலைக்கு அடுத்தபடியாக பொதிகையும் என் இருப்பிடங்களில் ஒன்றாக உன் விருப்பப்படியே அமையும், என்று அருள்பாலித்தார். (இந்த தலங்களே தற்போது நவகைலாயங்கள் என்ற பெயரில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன).இப்படி சிவதரிசனம் பெற்ற உரோமசரைச் சந்தித்த சட்டை முனி, முனிவரே! இந்த மக்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக உள்ளனர். அடுத்தவர்களின் குறைகளைக் காணுகிறார்களே தவிர தங்கள் குறையைக் களைவது பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இந்த மக்களை நேர்வழிப்படுத்த விரும்புகிறேன். அதற்கு தாங்களே வழிசெய்ய வேண்டும், என்றார். அன்பனே! உன் உயர்ந்த நோக்கம் எனக்குப் புரிகிறது. சிவபெருமானே இதற்கு உனக்கு வழிகாட்ட இயலும். அவரது தரிசனம் வேண்டுமானால் நீ கயிலைக்குச் செல். அவரை வழிபடு. கயிலைக்கு நீ இங்கிருந்து நடந்து செல்ல முயற்சிக்காதே. கடுமையான தவமிரு. அஷ்டமாசித்திகளை உன்னுள் வரவழைக்க கடும் பயிற்சி மேற்கொள். அவற்றை நீ அடைந்து விட்டால், உன் உடம்பைப் பஞ்சாக்கி நீ எந்த இடத்திற்கும் செல்ல முடியும், என அருளுரை வணங்கினார்.சட்டைமுனி சதுரகிரி எனப்படும் மலைக்கு வந்தார். அங்கே பல சித்தர்களின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவர்களுக்கு சேவை செய்து, அவர்களின் நம்பிக்கையை பெற்று அஷ்டமாசித்திகளை அடைந்தார். கடும் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து சென்றார். கயிலைமலையான் இவரது முயற்சியைக் கண்டு, நண்பன் போல இவருடன் பேசினார்.
 
சிவதரிசனம் பெற்ற சட்டைமுனி மீண்டும் தென்னகம் வந்தார். மக்களின் நோய் போக்க தமிழிலேயே மருத்துவக் குறிப்புகளை எழுதினார். அத்துடன் மக்கள் சுபிட்சமாக வாழவும், இறந்தவர்களை எழுப்பும் வழிமுறைகளையும் பகிரங்கமாக எழுதினார். இறந்தவர்களை எழுப்பும் கலையை சித்தர்கள் சங்கேத மொழியிலேயே குறித்து வைப்பர். ஏனெனில், சித்தர்களின் குறிப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம். சட்டை முனி பகிரங்கமாக எழுதியதால் ஆத்திரப்பட்ட சில சித்தர்கள் அந்தக் குறிப்புகளை கிழித்து எறிந்து விட்டனர். எனவே, அவரது மருத்துவக் குறிப்புகளும், இன்னும் சில பயனுள்ள தகவல்களும் மட்டுமே எஞ்சின. மேலும், சட்டைமுனிவர் பற்றி சிவபெருமானிடமும் புகார் சொல்லி, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரீரங்கம் வந்த சட்டைமுனி ரங்கநாதனைச் சேவிக்கச் செல்லும்முன் அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டு விட்டது. சட்டைமுனி வெளியில் இருந்தபடியே, ரங்கநாதா! உன்னை இன்றைக்குள் தரிசிக்க அவசர அவசரமாக வந்தேனே! பயனின்றி போய் விட்டதே, எனச் சொல்லி அரற்றினார்.தன் பக்தனின் அபயக்குரலைக் கேட்ட பெருமாள் நடையைத் திறக்கச் செய்தார். சித்தர் கருவறை அருகே சென்றதும், தனது அணிகலன்களை அவருக்கு சட்டை போல் அணிவித்தார்.(இதனாலும் இவர் சட்டைமுனி என பெயர் பெற்றார் என்பதுண்டு). அப்போது, ஊர் மக்கள் அவரைத் திருடனென சந்தேகித்து அரசனிடம் கொண்டு போய்விட, மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்தது.
இவர் திருவரங்கம் அல்லது சீர்காழியில் சமாதியாகி இருக்கலாம் என நம்புகின்றனர். சித்தர்களில் குறிப்பிட்ட நாளில் விரதம் இருப்பது இவருக்கு மட்டுமே. திருவோணம், புனர்பூசம், பூசம், திருவாதிரை நட்சத்திர நாட்களிலும், புதன்கிழமைகளிலும், அமாவாசை மற்றும் வாஸ்து தினத்தன்றும் ஸ்ரீசட்டைநாத மாமுனி தர்ப்பயாமி என்று குறைந்தது 18 முறையும், அதிகபட்சமாக 108 முறையும் சொல்லி வழிபட்டால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.
 
திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர் இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்ற்க் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்” என்ற நூலில் காணப்படுகிறது. 
சட்டைமுனி இயற்றிய நூல்கள்:
சட்டைமுனி நிகண்டு – 1200
சட்டைமுனி வாதகாவியம் – 1000
சட்டைமுனி சரக்குவைப்பு – 500
சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500
சட்டைமுனி வாகடம் – 200
சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200
சட்டைமுனி கற்பம் – 100
சட்டைமுனி உண்மை விளக்கம் – 51
 

தியானச் செய்யுள்
சித்த வேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற அற்புத மூர்த்தியே எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!
 

சட்டைமுனி சுவாமி பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை ஜாதிப்பூ அல்லது விருட்சிப்பூ அல்லது வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி!
2. ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி!
3. தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி!
4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி!
5. அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி!
6. வருண பகவானை வணங்குபவரே போற்றி!
7. நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி!
8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி!
9. கவலைகளை அகற்றுபவரே போற்றி!
10. நோய்களை அழிப்பவரே போற்றி!
11. வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி!
12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி!
13. சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி!
14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
15. ராமநாமப் பிரியரே போற்றி!
16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான
“ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி!” என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.
பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி (செவ்வாழை) வைத்து படைத்து, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.


ஸ்ரீ சட்டைமுனி சுவாமியின் பூசை பலன்கள்: இவர் நவக்கிரகத்தில் கேது பகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்,


1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும்.
2. மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு அறிவு அபிவிருத்தி ஏற்படும்.
3. சரியாகப் படித்தாலும் பரிட்சை எழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும்.
4. மூளையில் ரத்தம் உறைதல், மன உலைச்சல், வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தன்மை அகன்று தெளிவு ஏற்படும்.
5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படும் திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கும்.
6. போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. ஆன்மிகப்பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும்.
8. இவருக்கு பல வர்ணங்கள் கலந்த வஸ்திரத்தை அணிவிக்கலாம்.
பூசை செய்து வழிபட வேண்டிய சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.

Home
Pathinettu Siththargal
Previous                                                    Next

2 comments:

  1. Thanks for writing this blog. I could not take my eyes off and read it in 3 hours.

    ReplyDelete
  2. சித்தர்கள் பாஷயில் 100 என்ரால் 3 1000 என்றால் 4 என்று ஸ்தான ஸங்கேதமாக சொல்வார்கக்ல் என்று படித்திருருக்கிறான். அதைப்பற்றி தெரியுமா?

    ReplyDelete