December 19, 2014

Retriving of Panniru Thirumurai

பன்னிரு திருமுறைகளின் பெருமை!
1.வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்தது பிறகு திருத்தாளிட்டது
2.பாலை நிலம் நெய்தல் ஆனது
3.பாண்டியன் சுரம் தீர்த்து கூன் நிமிர்த்தியது
4.தேவார ஏடுகளை தீயில் கருகாமல் பச்சை யாக எடுத்தது எதிர் நீச்சல் இடவைத்தது
5.ஆண் பனை பெண் பனையாகியது
6.விஷத்தினால் இறந்த செட்டி உயிர்பெற்றது
7.எலும்பை பெண்ணாக்கியது
8.சுண்ணாம்புக் காளவாயில் 7 நாட்கள் இருந்தும் உயிர் பிழைத்தது
9.மத யானையை வலம் வரச்செய்து வணங்கவைத்தது
10.மானசரோவரில் மூழ்கி திருவையாற்றில் எழுந்தது
11.கல்லை தெப்பமாக கொண்டு கரையேறியது
12.செங்கல்லைப் பொன்னாக்கியது
13.விருதாசலத்தில் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை ஆரூர் குளத்தில் எடுத்தது
14.முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டது
15.காவேரி பிரிந்து வழி விட்டது
16.நரியை குதிரையாக்கியது
17.வெள்ளானையில் கயிலாயம் சென்றது
18.குதிரையை நரியாக்கியது
19.பிறவி ஊமையை பேச வைத்தது
20.பரம்பொருளான சிவபெருமானே எழுதிய பெருமைக்குரியது
இப்படி திருமுறைகளின் அற்புதங்கள் ஏராளம் அதன் பெருமைகளை அளவிட முடியாது திருமுறைகளை நாளும் ஓதுவோம் சிவானுபவம் பெறுவோம் .
==========================================================
பன்னிரு திருமுறைகளை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும், பொள்ளாப் பிள்ளையாரும்!
சிறப்பு மிக்க சைவ நெறி சார்ந்த நூல்கள் ‘பன்னிரு திருமுறைகள்’ என்றழைக்கப்படுகின்றன. பன்னிரண்டு திருமுறைகளும் 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
தேவாரத் திருமுறை ஓலைச் சுவடிகளை, தமிழை எதிர்த்தவர்களிடமிருந்து காப்பாற்றவும், மழை, வெள்ளம், புயல், காற்று போன்ற இயற்கைச் சீரழிவிலிருந்து காப்பாற்றவும், அவற்றை சிதம்பரத்தில் நடராஜர் கோயிலில் பூட்டி முத்திரை வைத்து விட்டார்கள்.
அபயகுலச் சோழன் என்று சைவ இலக்கியங்கள் சிறப்பித்து கூறிய தஞ்சையில் இருந்து அரசாண்ட ராஜராஜ சோழன், ஓதுவார்களும், இசைவாணர்களும் பாடக் கேட்டு தேவாரப் பாடல்கள் மீது அளவுகடந்த ஈடுபாடு கொண்டார். அவற்றைத் தொகுக்க விரும்பினார். அவை கோவிலில் அறையில் பூட்டி வைத்திருப்பது தெரிந்து அவற்றை எப்படி எடுப்பது என்று யோசித்தார். அப்போது அவரது அவைப் புலவர்கள், நம்பியாண்டார் நம்பி மனது வைத்தால் அவற்றைத் தொகுக்கலாம் என்று ஆலோசனை கூறினார்கள். அப்படி என்ன சிறப்பு நம்பியாண்டார் நம்பியிடம் என்று ராஜராஜன் வியந்து கேட்டார். அவைப் புலவர்கள் நம்பியாண்டார் நம்பியின் கதையைச் சொன்னார்கள்.
நம்பியாண்டார் நம்பியின் கதை
நம்பியாண்டார் நம்பியின் தந்தை சிதம்பரத்துக்கு அருகில் உள்ள திருநாரையூரில் பிள்ளையார் கோவில் ஒன்றில் அர்ச்சகராகப் பணியாற்றினார். நம்பி சிறுவனாக இருந்த போது, ஒரு நாள் அவருடைய தந்தை வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அன்றைய பூஜை செய்யும் பொறுப்பை, சிறுவன் நம்பியிடம் ஒப்படைத்துச் சென்றார். நம்பியின் தாய் பிரசாதத்தைத் தயார் செய்து கோவிலுக்குக் கொடுத்தனுப்பினாள்.
polla-pillaiyar-thirunaraiyur1 copy


















சிறுவன் நம்பியும் தந்தையின் கட்டளைப்படி பிள்ளையாருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து, தான் கொண்டு வந்த பிரசாதத்தைப் பிள்ளையாருக்குப் படைத்தார். வெகு நேரம் ஆகியும் பிரசாதம் அப்படியே இருந்தது. பிள்ளையார் உண்மையாகவே பிரசாதத்தைச் சாப்பிடுவார் என்றெண்ணியிருந்த நம்பிக்கு அது ஏமாற்றமாய்ப் போய்விட்டது. தான் செய்த பூஜையில் பிழை இருந்தால் மன்னித்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அதன் பிறகும், பிரசாதம் அப்படியே இருக்கவே, தனது தலையைக் கோவில் சுவரில் மோதிக் கொண்டு அழுதார். நம்பியின் கடமையுணர்வையும், பக்தியையும் கண்டு பிள்ளையார் மனம் கசிந்து பிரசாதத்தை மிச்சம் மீதியின்றி அப்படியே சாப்பிட்டு விட்டார். நம்பி மிகுந்த சந்தோஷத்துடன் வீட்டிற்குச் சென்றார். வெற்றுப் பாத்திரத்துடன் வந்த நம்பி சொன்னதை யாராலும் நம்ப முடியவில்லை.
Polla Pillaiyar blesses Chola

















அடுத்த நாள் நம்பியின் தந்தை வெளியூரிலிருந்து திரும்பி வந்ததும், அவருடன் நம்பி கோவிலுக்குச் சென்றார். அவரே பூஜையும் செய்தார். அன்றும் பிள்ளையார் பிரசாதத்தைச் சாப்பிட்டார். அதை நேரில் பார்த்தவர்களுக்கு உண்மை புரிந்தது. நம்பியின் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
தன் பக்தனான நம்பி ஏழைமையில் கல்வி பயில முடியாத சூழலில் இருந்ததால், பிள்ளையார் தானே தினந்தோறும் கல்வி புகட்ட ஆரம்பித்தார். நம்பியை மாமேதை ஆக்கினார். இறைவனிடம் நேரடியாகக் கல்வி பயின்றதால் நம்பியாண்டார் நம்பியின் புகழ் எங்கும் பரவியது.
நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள்
இத்தகைய சக்தி வாய்ந்த நம்பியாண்டார் நம்பியைச் சரணடைந்தால் திருமுறைகளைத் தொகுக்கலாம் என்ற அவைப் புலவர்களின் ஆலோசனைப்படி, அவைப் புலவர்கள் மற்றும் மந்திரிகளுடன் திருநாரையூருக்குச் சென்று பிள்ளையாரை தரிசித்து விட்டு, நம்பியாண்டார் நம்பியின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். பின்னர் திருமுறைகளைத் தொகுக்க வேண்டும் என்ற தன் ஆவலைத் தெரிவித்தார் ராஜ ராஜன்.
நம்பியாண்டார் நம்பி, பிள்ளையாரின் திருவருளால், தேவாரப் பாடல்கள் அனைத்தும் சிதம்பரம் கோயிவில் இருப்பதாகத் தெரிவித்தார். மன்னரும், மந்திரிகளும், அவைப் புலவர்களும் நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் கோவிலுக்குச் சென்று நடராஜர் சந்நிதியில் உள்ள தீட்சிதர்களை அணுகி, சுவடிகளைக் கேட்டனர். அவர்கள் தேவார மூவர் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்) வந்து கேட்டால் மட்டுமே முத்திரையிட்ட அறைக் கதவைத் திறக்க இயலும் என்று கூறினர்.
Rajarajan meets Dikshidhars
பல காலங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த தேவார மூவரை எப்படித் திரும்ப அழைத்து வந்து கேட்க வைப்பது? என்று யோசித்ததோடு மட்டுமல்லாது, ராஜ ராஜன் புத்திசாலித்தனமாக ஒரு நடவடிக்கை எடுத்தார். தேவார மூவரின் திருஉருவங்களை அலங்கரித்து, கோயிலுக்குள்ளும், வெளியேயும் உலா அழைத்து வந்து நடராஜர் சந்நிதிக்கு முன் எழுந்தருளச் செய்து “இதோ தேவார மூவர் வந்துள்ளனர்” என்று கூறினார்.
தேவார மூவரின் திருஉருவங்களை வெறும் சிலை தானே என்று சொல்லித் தட்டிக் கழிக்க நினைத்த தீட்சிதர்கள், அப்படிச் சொன்னால் கோயிலுக்குள் உள்ள நடராஜரும் சிலைதானே என்ற வாக்குவாதம் வரும் என்ற எண்ணத்தில் அதைத் தவிர்த்து விட்டு, தேவாரச் சுவடிகள் உள்ள அறையைத் திறந்து விட்டனர்.
Hymns found

















உள்ளே பார்த்தால் ஓலைச் சுவடிகளை கறையான் புற்று மூடியிருந்தது. பெரும்பாலான ஓலைச்சுவடிகள் செல்லரித்து போயிருந்தன.
அப்போது அசரீரியாக ஒலித்த இறைவன், “தற்காலத்துக்கு தேவையானவைவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு மீதியை நாம் தான் செல்லரிக்கச் செய்தோம்!” என்று கூறியருளினார்.
இது பற்றி காஞ்சி மகா ஸ்வாமிகள் மிக அழகாக தன் பாணியில் கூறுகிறார்.
//’ஐயோ, இத்தனை ப்ரயாஸைப் பட்டும் கடைசியில் மலையைக் கெல்லி எலியைப் பிடித்தாற்போல, சுவடிகளையெல்லாம் ஒரேயடியாகச் செல்லு மூடிப் போயிருக்கிறதே’ என்று எல்லாரும் வருத்தப்படும்படிச் சுவடிக் கட்டெல்லாம் செல்லரித்து மூடிக் கிடந்தது. மொத்தம் மூவர் பாடின லக்ஷத்து சொச்சம் பதிகங்களிலே எண்ணூறுக்கும் குறைச்சலானவை தான் அரிபடாமல் தப்பித்திருந்தன.
எல்லாரும் சோகாக்ராந்தர்களாக இருக்கும்போது அசரீரி கேட்டது. “மலையைக் கெல்லி எலி இல்லை, இந்த எலியே வரப்போகிற காலங்களில் பிறக்கப் போகிறவர்களுக்கு யானைக்கு மேலே!அது பொதுவிலே அவஸர யுகமாயிருக்கும். அந்த அவஸரத்திலும் சினிமா, கிரிக்கெட் தண்டப்பேச்சு, பாலிடிக்ஸ், பத்திரிகை என்றால் மட்டும் மணிக் கணக்காக பொழுது இருக்குமே தவிர இதற்கெல்லாம் சேர்த்து வைத்து மற்ற விஷயங்களில் ஒரே பறப்பாக இருக்கும். அதிலேயும் ஆத்ம ஸம்பந்தமான விஷயமென்றால் கேட்கவே வேண்டாம்!லக்ஷம் பதிகம் என்றால் யாரும் கிட்டேயே போகமாட்டார்கள்!அதனால்தான் திவ்ய ஸங்கல்பத்தினால் இப்படி ஆச்சு. அது மாத்திரமில்லாமல் இந்த 796 பதிகங்களே ஒரு ஜீவனைக் கடைத்தேற்றவும் போதும்” என்று அசரிரி சொல்லிற்று. அது சுருக்கமாக ‘ஹின்ட்’ பண்ணினதில் என் சரக்கும் சேர்த்துச் சொன்னேன்!
எண்ணூறு பதிகங்களையும்கூட ஒருமொத்தமாகப் பார்த்தால் எதிர்கால ஜனங்கள் ஜாஸ்தீ என்று தள்ளி விடுவார்களோ என்று ராஜா பயந்து, அதையும் பல பாகங்களாக க்ளாஸிஃபை பண்ணச் சொல்லி நம்பியாண்டார் நம்பியைக் கேட்டுக் கொண்டான். //
- (தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி)
கரையான் அரித்தது போக மீதமிருந்த சுவடிகளை எடுத்து வந்தார் நம்பியாண்டார் நம்பி. பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தி, 27 ஆசிரியர்கள் இயற்றிய பாடல்களை 12 திருமுறைகளாகத் தொகுத்தார். அவை, சோழ நாட்டுச் செப்பேடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன
arangetram of thirumurai

















1, 2, 3ஆம் திருமுறைகள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். இதில் மொத்தம் 4146 பாடல்கள் உள்ளது. முதல் திருமுறையில் 1469 பாடல்களும், இரண்டாம் திருமுறையில் 1331 பாடல்களும், மூன்றாம் திருமுறையில் 1346 பாடல்களும் அடங்கியுள்ளன.
4, 5, 6ஆம் திருமுறைகள் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். இதில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. நான்காம் திருமுறையில் 1069 பாடல்களும், ஐந்தாம் திருமுறையில் 1015 பாடல்களும், ஆறாம் திருமுறையில் 980 பாடல்களும் அடங்கியுள்ளன.
7ஆம் திருமுறை சுந்தரரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். இதில் மொத்தம் 1026 பாடல்கள் உள்ளது.
8ஆம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்டது. இதில் திருவாசகம் 656 பாடல்களும், திருக்கோவையார் 400 பாடல்களுமாக மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது.
9ஆம் திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புரு÷ஷாத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது.
10ஆம் திருமுறை திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம் ஆகும். இதில் மொத்தம் 3047 பாடல்கள் உள்ளது.
11ஆம் திருமுறையில் திருவாலவாய் உடையார்(ஈசன்), காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது.
2ஆம் திருமுறை சேக்கிழாரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புராணம் ஆகும். இதில் 4286 பாடல்கள் உள்ளது.
இவற்றுள் பதினோரு திருமுறைகளைத் தொகுத்து வகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. பின்னர் அநபாய சோழன் என்ற மன்னன் சேக்கிழாரைக் கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தை அரங்கேறச் செய்து அதைப் பன்னிரண்டாவது திருமுறை ஆக்கினான். இதுவரை கிடைத்துள்ள பன்னிரு திருமுறைகள் 27 ஆசிரியர்களால் 76 நூல்களில் பாடப்பட்ட 18326 பாடல்களை கொண்டது.
இந்த திருமுறைகள் அனைத்தும் சிவபெருமானின் திருவாக்குகளே. அவரே அடியவர்களுக்கு உள்ளிருந்து உணர்த்தியும், முதலடி எடுத்துக் கொடுத்தும் வெளிப்படுத்திய அருள்வாக்குகள். அவை சிவபிரானின் அருளை அன்பர்களுக்கு அன்றும் தேடித்தந்தன; இன்றும் தரவல்லன. அதனாலேயே இவை அருட்பாக்கள் எனப்படும். இவற்றுள் சிவசக்தி யாகிய உயிர் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், என்றும் அழியாத அமரத்துவம் பொருந்தி நிற்கிறது. மிகப்பெரிய சிவாலயங்களில் நடராஜரின் சன்னதிக்கு அருகில் இந்த பன்னிரு திருமுறைகள் ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்து முக்கிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படும். பன்னிரு திருமுறைகளை படித்தாலோ, கேட்டாலோ வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.
(ஆக்கத்தில் உதவி : vivekaanandan.blogspot.in, Dinamalar.com, Kamakoti.org)
Home  Previous                                                              Next

No comments:

Post a Comment