May 16, 2015

Pathinettu Siththargal - Part 4

பதினெட்டு சித்தர்கள் - 4

சித்தர்களை பற்றிய தொகுப்புகள்.

சித்தர்கள் சிவ சிவா வென்றாற் றிரு நடமாகும்
சிவ சிவா வென்றாற் சீவனும் முக்தியாம்
சிவ சிவா வென்றாற் சீவனும் சித்தியாம்
சிவ சிவா வாசி சிவசிவந் தானே!

சித்தர்கள் – தியானம், மருத்துவம், ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞானம், ரசாயனம், சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.

பராபரத்தில் பரம், பரத்தில் சிவம், சிவத்தில் சக்தி,சக்தியிலிருந்து தான் பஞ்ச பூதம் உள்ளிட்ட அனைத்தும் தோன்றியது. இந்த சிவன் தான் சித்தன் எனவும் கூறப்படுவதுண்டு.சித்தர் வழி தனி வழி ! யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கு அவர்களுடையது. சித்தர்களின் விடா முயற்சியும், உழைப்பும், தன்னலமற்ற பணியும் நமக்கு எப்போதும் வேண்டும் வேண்டும். சீவனே சிவன் என்று துணிவதே சித்தர் தம் மதம். சித்தர் தம்மைக் காலங்கடந்தவராகக் கூறிக் கொளல் மிகையும் அன்று. பொய்யும் அன்று.


சித்தம் என்பது புத்தி, மனம்,சித்து புத்தியால் ஆகிற காரியம். சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர்.



சித்தர் இலக்கியங்களுள் சில மரபுச் செய்யுட்களால் அமைந்தவை. சில நாட்டுப்புறப் பாடல்களால் இயன்றவை. எளிய நடையில் உயரிய கருத்துக்களைப் பொது மக்களுக்காகப் பாடியிருப்பது இச்சித்தர்களின் தனிச் சிறப்பு என்றுகூறலாம். மேலும் அவர்தம் பாடல்கள் எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரும் உயிரோட்டம் உடையவை.

சித்தர்களின் பாடல்கள் வெண்பா, அகவற்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை, கலிவிருத்தம் முதலான யாப்பு வரையறையோடு இயற்றப் பெற்றவை. தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி வகையைச் சார்ந்த இசைப்பாடல்களாகவும் சில காணப்படுகின்றன. அவை கும்மி, கண்ணி, ஆனந்தக்களிப்பு, காவடிச்சிந்து, கீர்த்தனை முதலிய நாட்டுப் புற இசைப் பாடல்களாகும். இப்பாடல்கள் பெரும்பாலும் இசைப் பாடல்களாக அமைந்திருத்தலால், அவற்றைப் பொது மக்கள் மகிழ்ச்சியோடு தெருக்களில் பாடிச் செல்வதை இன்றும் நாம் காண்கிறோம். கேட்போரும் அப்பாடல்களின் பொருளை எளிதில் உணர்ந்து இன்புறுகின்றனர்.



சித்தர்களைப் பற்றிய செய்திகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றில் குறிப்புக்களாகக் காணப்படும் போக்கு சித்தர்கள் என்போர் யாவர் என்பதனைப் பல்வேறு சித்தர் பாடல்களும் விளக்கியிருக்கும் பாங்கு, திருமூலர், பாம்பாட்டி சித்தர், பட்டினத்தார் முதலானோர் பல்வேறு சித்து விளையாடல்கள் புரிந்துள்ளமை பற்றிய செய்திகள், சித்தர்கள் தத்தம் பாடல்களில் சமயங்கள் கடந்த எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை நெறிகளையே பாடியிருக்கும் நிலை, பல வகையான யாப்பு வகைகளில் சித்தர் பாடல்கள் பாடப்பெற்றிருக்கும் பெற்றி முதலானவை விளக்கப்பட்டிருத்தலை காணலாம்.



பதினெட்டு என்னும் எண்ணின்பால் கொண்ட ஈடுபாட்டினால் சித்தர்களையும் பதினெண்மராகக் காட்டியிருக்கலாம் என்ற செய்தி சித்தர்களின் எண்ணிக்கை குறித்து அறிஞர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டிலிருந்து ஐம்பது வரை எட்டியுள்ள நிலை குறித்த அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. பதினெட்டு என்னும் எண்ணின்பால் கொண்ட ஈடுபாட்டினால் சித்தர்களையும், பதினெண்மராக அடக்கிக் காட்டுகின்றனர். பதினெண் கணக்குகள், பதினெண் கீழ்கணக்கு பதினெண் மேற்கணக்கு பதினெண் நாள் பாரதப் போர் என்பவனற்றைக் காணுங்கால், அவ்வெண்ணிடம் வைத்த மதிப்பினை உணரலாம். தமிழிலுள்ள பதினெட்டு மெய்யெழுத்துக்களோடு சித்தர் எண்ணிக்கையை ஒப்பிட்டு இயைபு காண்போரும் உளர்.


சிறுபிரபந்த வகைகளை 96 எனக் கூறி அவற்றையெல்லாம் 90க்குள்ளேயே அடக்கிக் காட்டுவர். காலப்போக்கில் அவ்விலக்கிய வகை வளர்ந்து. தொண்ணுற்றானும் மிகுந்து ஏறத்தாழ இரட்டிப்பாகி உள்ளது. அது போலவே, சித்தர்களின் எண்ணிக்கையும் பதினெட்டினைக் கடந்து ஐம்பதினை எட்டியுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியாரும் எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா, யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் (1 பாரதி அறுபத்தாறு) எனத் தம்மைச் சித்தராகக் கூறிக் கொள்கிறார். இவர் போன்றோரை எல்லாம் சித்தர்களின் பட்டியலில் சேர்த்தால் எண்ணிக்கை ஐம்பதிலும் மேலாகிறது.

சித்தர்கள் 18 பேர்.
1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வான்மீகர்
7. கமலமுனி
8. போகர்
9. மச்சமுனி
10. கொங்கணர்
11. பதஞ்சலி
12. நந்திதேவர்
13. சட்டைமுனி
14. சுந்தரானந்தர்
15. குதம்பை
16. கருவூரார்
17. கோரக்கர்
18. பாம்பாட்டி


என்பதாக சரசுவதி மகால் நூலகப் படத்தில் பதினெண் சித்தர் பெயர்கள் காணப்படுகின்றன.


1. கும்ப முனி,
2. நந்தி முனி,
3. கோரக்கர்,
4. புலிப்பாணி,
5. புகண்டரிஷி,
6. திருமுலர்,
7. தேரையர்,
8. யூகி முனி,
9. மச்சமுனி,
10.புண்ணாக்கீசர்,
11. இடைக்காடர்,
12. பூனைக் கண்ணன்,
13. சிவவாக்யர்,
14.சண்டிகேசர்,
15. உரோமருஷி,
16. சட்டநாதர்,
17. காலாங்கி,
18. போகர்

என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது.


1. அகத்தியர்,
2. போகர்,
3. நந்தீசர்,
4. புண்ணாக்கீசர்,
5. கருவூரார்,
6. சுந்தரானந்தர்,
7. ஆனந்தர்,
8. கொங்கணர்,
9. பிரம்மமுனி,
10.உரோமமுனி,
11. வாசமுனி,
12. அமலமுனி,
13. கமலமுனி,
14. கோரக்கர்,
15.சட்டைமுனி,
16. மச்சமுனி,
17. இடைக்காடர்,
18. பிரம்மமுனி

என்கிறது நிஜானந்த போதம்.
1. அகத்தியர்,
2. போகர்,
3. கோரக்கர்,
4. கைலாசநாதர்,
5. சட்டைமுனி,
6.திருமுலர்,
7. நந்தி,
8. கூன் கண்ணன்,
9. கொங்கனர்,
10. மச்சமுனி,
11.வாசமுனி,
12. கூர்மமுனி,
13. கமலமுனி,
14. இடைக்காடர்,
15. உரோமருஷி,
16.புண்ணாக்கீசர்,
17. சுந்தரனானந்தர்,
18. பிரம்மமுனி என்கிறது அபிதானசிந்தாமணி.

அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931) தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1050 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1634 பக்கங்களுடன் இரண்டாவது பதிப்பு 1934 இல் நூலாசிரியரின் புதல்வரான ஆ. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் வெளிவந்தது. 1981 இலே தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது. அண்மையில் 2001ம் ஆண்டு தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ், 11ம் பதிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழிலே தோன்றிய முதல் கலைக்களஞ்சியமான அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி. இதில் வேதகால பாத்திரங்களின் கதைகளும், உறவு முறைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளன. செங்கிருதம் எனும் சமஸ்கிருத சொற்களின் கலப்பு அதிகமாக உள்ளது.


அபிதானகோசம் என்பது தமிழிலே முதன் முதலாகத் தோன்றிய இலக்கியக் கலைக் களஞ்சியமாகும். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் இயற்றப்பெற்ற வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தருமநூல்கள், இலக்கியங்களிற் காணப்பெற்ற தெய்வம், தேவர், இருடி, முனிவர், அசுரர், அரசர், புலவர், புரவலர் முதலிய விபரங்களை அகர வரிசையிலே தொகுத்தளிக்கும் முயற்சி அபிதானகோசம் ஆகும்.அபிதான கோசத்தைத் தொகுத்தளித்தவர் மானிப்பாய் ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை (1858-1917) சுயமாக எழுதியும் உரையெழுதியும் பதிப்பித்தும் உதவியவர்; சஞ்சிகை நடத்தியவர்; அகராதி தொகுத்தவர். அபிதான கோசம் 1902 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்படடு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவரும் முன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அபிதானகோசத்தைக் காட்டிலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி. இவர்களேயன்றி வேறு சிலரையும் அபிதான சிந்தாமணி சித்தர்களாகக் குறிப்பிட்டுள்ளது. அவர்கள்


தன்வந்திரி,
புலத்தியர்,
புசுண்டர்,
கருவூரார்,
இராமதேவர்,
தேரையர்,
கபிலர் போன்றோராவர்.



கலைக்களஞ்சியம் குறிப்பிடும் பதினெண் சித்தர்களும் அபிதான சிந்தாமணியால் சுட்டப் பெற்றவர்களே. சிலர் சித்தர்களின் எண்ணிக்கை இருபத்தொன்று என்பர். அவர்கள் சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் 21 சித்தர்கள் தவம் சித்திக்கப் பட்டிருத்தலைச் சான்றாக எடுத்துக் காட்டுவர்.




நம் நாட்டுச் சித்தர்கள் என்னும் நூலை எழுதிய முனைவர் இரா. இராசமாணிக்கம் சித்தர்களின் பெயர்களை அகர வசைப்படுத்திப் பின் வருமாறு 25 என்ற எண்ணிக்கையில் காட்டியுள்ளார்




1. அகத்தியர்
2. அகப்பேய்
3. அழுகணிச் சித்தர்
4. இடைக்காடர்
5. இராமதேவர்
6. இராமலிங்கர்
7. உரோமமுனி
8. கபிலர்
9. கருவூரார்
10. காகபுசுண்டர்
11. குதம்பைச் சித்தர்
12. கொங்கணர்
13. கோரக்கர்
14. சட்டைமுனி
15. சிவவாக்கியர்
16. தன்வந்திரி
17. திருமாளிகைத்தேவர்
18. திருமூலர்
19. தேரையர்
20. நந்தி
21. பாம்பாட்டி
22.புலத்தியர்
23. புலிப்பாணி
24. போகர்
25. மச்சமுனி சித்தர்



சித்தர் பாடல்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற திருமதி இளமதி தன் ஆய்வேட்டின் பின்னிணைப்பில் 47 சித்தர்கள் பெயர்களைத் தொகுத்துத் தந்துள்ளார். அவை.

1.அகத்தியர்
2. அகப்பேய்
3. அம லுமுனி
4. அழுகண்ணர்
5. ஆனந்தர்
6. இராமதேவர்
7.இடைக்காடர்
8. உரோமமுனி
9.கமலமுனி
10. கருவூ ரார்
11.கபிலர்
12.காகபுசுண்டர்
13. காலாங்கி
14. குதம்பை
15. கூர்மமுனி
16. கூன்கண்ணர்
17. கைலாசநாதர்
18. கொங்கணர்
19. கோரக்கர்
20. சட்டைமுனி
21. சண் டிகேசர்
22. சனகர்
23. சனந்தனர்
24. சனற்குமாரர்
25. சனாதனர்
26. சாகமமுனி
2 7.சி வவாக்கியர்
28. சுந்தரானந்தர்
29. சூதுமுனி
30. தன்வந்தி
31. தி ருமூலர்
32. தேரையர்
33. நந்தீசர்
34. பதஞ்சலி
35. பாம்பாட்டி
36. பிரம்மமுனி
37. புண்ணாக்கீசர்
38. புலத்தியர்
39. புலிப்பாணி
40. பூணைக்கண்ணர்
41. போகர்
42. போககுரு
43. மச்சமுனி
44. யூகிமுனி
45. வாசமுனி
46. வான்மீகி
47. வியாசர் .

சித்தர் இலக்கியம் ஒளவையார், மாணிக்கவாசகர், திருமாளிகைத் தேவர், சேந்தனார், காரைக்காலம்மையார், பட்டினத்தார் ஆகியோரையும் சித்தர் கூட்டத்தில் அடங்கியுள்ளார். மாணிக்கவாசகன் சிவபுராணம், கீர்த்தித்திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் என்பனவற்றையும் ஒளவையார் குறள், விநாயகர் அகவல் ஆகியனவற்றையும் ஒன்பதாம் திருமறையிலுள்ள திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருபூர்த் தேவர் ஆகியோர் பாடல்களையும் பதினோராம் திருமுறையிலுள்ள காரைக்காலம்மையார், பட்டினத்தார் பாடல்களையும் சித்தர் இலக்கியங்கள் எனக் குறிப்பிட்டு அவற்றுக்கு விளக்கமும் எழுதியுள்ளார். சித்தர் பாடல்கள் தொகுக்கப்பெற்று வெளிவந்துள்ள சித்தர் ஞானக் கோவையில் ஒளவையின் குறள், விநாயகர் அகவல், மாணிக்கவாசகன் சிவபுராணம் முதலிய பகுதிகளும் ஒன்பதாம் திருமுறையிலுள்ள திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர் ஆகியோருடைய பாடல்களும் பதினோராந் திருமுறையிலுள்ள காரைக்காலம்மையார் பாடல்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் என்னும் இந்நூலில் மீ.ப . சோமு அவர்கள் தம் சித்தர் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள ஒளவையின் குறள், விநாயகர் அகவல், திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், காரைக்காலம்மையார் ஆகிய பாடல்கள் இடம் பெறுகின்றன. மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம். கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் ஆகியவை இடம் பெறவில்லை. சித்தர் ஞானக்கோவையில் இடம்பெறும் குறள் ஒப்புமை காணப்படும் எல்லா நூல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. சிவயோக சாரம், திருவள்ளுவர் ஞானம், நந்தீஸ்வரர் பூஜாவிதி, இராம தேவர் பூஜாவிதி, உரோமஷி ஞானம், ஞானசர நூல், நிஜானந்த போதம், ஞான ஏற்றம், சூயானந்தர் சூத்திரம் என்னும் நூல்களில் குறளாட்சி காணப்பெறாமையின் அவை இந்நூலில் இடம் பெறவில்லை.

சித்தர்களுள் திருமூலர் தலையாயவராக இருத்தலின் அவர் முதலில் இடம் பெறுவர்.

1. திருமூலர்
2. ஒளவையார்
3. திருமாளிகைத் தேவர்
4.கருவூர்த்தேவர்
5.காரைக் காலம்மையார்
6.பட்டினத்தடிகள்
7.பத்திரகியார்
8.சிவவாக்கியர்
9.பாம்பாட்டி சித்தர்
10.இடைக்காட்டுச் சித்தர்
11.அகப்பேய்ச் சித்தர்
12.குதம்பைச் சித்தர்
13.கருவெளிச் சித்தர்
14.அழுகணிச் சித்தர்
15.கொங்கண நாயனார் (வாலைக்கும்மி)
16.சிவானந்தபோதம்
17.நெஞ்சறி விளக்கம்
18.ஞானக்கும்மி
19.திருவருட்பா திரட்டு
20.சிவபோக சாரம்
21.சொக்கநாத வெண்பா
22.சட்டைமுனி ஞானம்
23.அகஸ்தியர் ஞானம்
24.வால்மீகர் சூத்திர ஞானம்
25.காகபுசுண்டார்.

Home Pathinettu Siththargal  Previous                                                              Next

No comments:

Post a Comment