இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில்,
மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு
உய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா
எனவுரைத்துள்ளார். இவர் நாகப்பட்டினத்தைத் தம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.
ஒருமுறை காசிமாநகரில் திருக்கோயில் கொண்ட இறைவன் விசுவநாதரைக் கொண்டு வந்து தம் ஊரான காயாரோகணத்தில் (நாகப்பட்டினத்தில்) நிறுவிட இராமதேவர் எண்ணம் கொண்டார். இயல்பாகவே இவர் சஞ்சார சமாதியில் லயித்திடுவார். தாம் நடந்து கொண்டே இருந்தபோதும் இவரது எண்ணம் மட்டும் எங்கோ சென்றிருக்கும். எதனையும் இவரது கண்கள் நோக்கிடாது; காதும் கேட்காது; சுவாசமும் ஓடாது.
இத்தைய நிலையில்தான் இராமதேவருக்கு காசி விசுவநாதரை நாகப்பட்டினத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. உடனே எழுந்து இராமதேவர் விரைந்து நடக்கலானார். எத்தனை நாட்கள் அவர் நடந்தார் என்று அவருக்கே தெரியாது. சுயநினைவு இல்லாமலேயே அவர் நடந்தபடி சென்று கொண்டிருந்தார்.
ஒரு நாள் சுயநினைவு வரப் பெற்றார். அப்போது தாம் காசியில் இருப்பதை இராமதேவர் உணர்ந்தார். உடனே விரைந்து சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்த இராமதேவர் பின் காசி மாநகரத்து இறைவனான விஸ்வநாதப் பொருமானைக் கண்ணாரக் கண்டு தரிசித்து மகிழ்ந்தார். மீண்டும் வந்து கங்கையில் மூழ்கி அவர் எழுந்தார். அப்போது அவருடைய கரத்தில் லிங்கத் திருவுரு ஒன்று இருந்தது. அதைக் கண்டதும் இராமதேவர் மிகவும் மகிழ்ந்தார். மீண்டும் நாகப்பட்டினத்துக்கு வந்த இராமதேவர் தாம் கங்கையில் மூழ்கியெடுத்து வந்த காசி விஸ்வநாதப் பொருமானது திருவுருவமான இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். தினந்தோறும் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்திருவுருவை பூஜித்து வந்ததுடன் தியானத்திலும் மூழ்கினார்.
அந்தக் காலத்தில் நாகைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து சென்றிடும். பெரும்பாலும் அரேபிய நாடுகளிலிருந்து வந்து செல்லும் கப்பல்களே அதிகம். அக்கப்பல்களில் வரும் அரேபியர்களைக் கண்டு இராமதேவர் வியந்தார். தாமும் அவர்களுடன் பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.
ஒரு நாள் வழக்கம் போல் அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் கண் விழித்துப் பார்த்தபோது தாம் அரேபியாவில் இருப்பதை உணர்ந்தார். ‘தாம் எப்படி அங்கு வந்தடைந்தோம்’ என்பது அவருக்கே புரியவில்லை. அந்த எண்ணத்துடன் தியானத்தில் அமர்ந்தவர் சஞ்சார சமாதியில் ஆழ்ந்து மெக்காவுக்கு வந்து சேர்ந்து விட்டார். கடல் வழியில் வந்தாரா? அல்லது தரை வழியில் வந்தாரா? என அவருக்குத் தெரியாது.
வறண்ட பாலைவனம். எங்கு பார்த்தாலும் மணல் பரப்பு. கண்ணுக்கு எட்டிய வரை மணல் பரப்புதான் தென் பட்டது. வெப்பம் மிகுந்திருந்தமையால் வியர்வை ஆறாகப் பெருகியது. இராமதேவர் விழித்தவாறே நின்று கொண்டிருந்தார். வெகு தொலைவில் ஒட்டகம் ஒன்று வருவதை அவர் கண்டார். அந்த ஒட்டகத்தின் பின் ஒன்று, இரண்டு என எண்ணற்ற ஒட்டகங்கள் வரிசையாக வந்தபடி இருந்தன.
பாலைவனத்தில் தன்னந்தனியாக நின்ற இராமதேவரைக் கண்டதும் அரேபியர்கள் தங்களது நாட்டிற்குள் எவனோ அத்துமீறி நுழைந்துள்ளான் என்று எண்ணி விரைந்து வந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
அப்புறம் என்ன நடந்தது ,,,,,,,, அடுத்த வியாழக்கிழமை அறிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment