February 03, 2016

Sundaranandar Siddhar - Part 3


சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர்.

சுந்தரானந்தர் சித்தர்கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், அகமுடையார் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார். 

இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டுருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பெற்றார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பெற்று பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் பெறுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதைச் சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் பெறுகிறது.

இவரின் குரு சட்டை முனி என்று சதுரகிரி தல புராணம் கூறுகிறது. 
அபிஷேக பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் சச்சிதானந்த வடிவாகிய சுந்தரானந்த சித்தர் மதுரையம்பதி கடை வீதி, சித்திரக் கூடம், நாற்சாந்தி வீதி, உப்பரிகை போன்ற இடங்களில் திரிந்து பல சித்துகளை விளையாடினார். இந்திரஜாலமாக மறைந்து பெண்ணை ஆணாக்கியும், ஆணைப் பெண்ணாக்கியும், ஊனமுற்றவர்களைச் சுகப்படுத்தியும், இரும்பு, செம்புகளைத் தங்கமாக்கியும் பற்பல ஜாலங்கள் புரிந்தார். பாண்டிய மன்னன் சித்தரிடம் ஊர், பேர் முதலியவைகளைக் கேட்க, தாம் பல சித்து விளையாட்டுகளை செய்து காட்டும் சித்தர் என்று கூறினார். அப்பொழுது கையில் கரும்புடன் ஒருவன் வந்தான். அதைக் கண்ட அரசர் அக்கரும்பை வாங்கி சித்தரிடம் கொடுத்து இக்கரும்பை இங்கு கற்சிலையாக நிற்கும் கல்யானையை உண்ணும் படியாக செய்தால் நீங்கள் சித்தர் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்'' என்றார். சித்தரும் சம்மதித்து கரும்பைக் கையில் வாங்கிக் கல் யானையிடம் நீட்டிக் கண்ணசைத்தார். அனைவரும் பார்த்துக் கொண்டுருக்கையிலேயே கல் யானை துதிக்கையை நீட்டி கரும்பை வாங்கி உண்டு ஏப்பம் விட்டு பிளிரியது.

அத்துடன் அரசனின் கழுத்திலிருந்த மாலையையும் பறித்தது. பதறிய சேவகர்கள் சித்தரை அடிக்கவந்தனர். சித்தரின் சைகையால் அடிக்க வந்தவர்கள் சித்திரம் போல் ஆனார்கள். சித்தர்நிமிர்ந்து பார்த்த பொழுது யானை மறுபடியும் கல்யானையாக நின்றது.

உண்மை நிலையறிந்த அரசனும், அனைவரும் அதிசயித்து அன்பும், பக்தியும் பெருக்கெடுக்க சித்தர் திருவடிகளில் விழுந்து வணங்கி, எம்பெருமானே அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து, மன்னித்தருள வேண்டும் என்றனர். சித்தரும் மன்னித்து, நான் இங்கேயே வீற்றிருந்து மக்களுக்கு வேண்டியதை வழங்குகிறேன், அத்துடன் உனக்குத் தேவையானதைக் கேள் என்றார்.

இறைவா எனக்கு புத்திர பாக்கியம் தந்தருள வேண்டும் என்றான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால் அரசனுக்கு விக்கரமன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.

சித்தரும் கோவிலுக்குள் சென்று மறைந்தார். இவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சித்தராக சமாதியில் வீற்றிருக்கின்றார்.

இந்த நிகழ்வை வேறு ஒரு வகையிலும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான ஆதரங்கள் சரிவரப் பொருந்தவில்லை. எனினும் அதையும் தெரிந்து கொள்வதில் பாதகமில்லை என்பதால் அதையும் இங்கு பார்ப்போம்.

கோரி முகம்மதுவின் தளபதி மாலிக்காபூர் கோவில்களை இடிக்கும் பொருட்டு அனுப்பட்டவன். அவன் தளபதியாக இருக்கும் பொருட்டு பெண்ணால் அவன் தன் தன்மையை இழக்காமல் இருக்க அலியாக தன்னை மாற்றிக் கொண்டவன்.

மாலிக்காபூர் மதுரையம்பதிக்கு விஜயம் செய்து கோவிலுக்குள் நுழைந்து பொற்றாமரைக் குளத்தை வலம் வர, அங்கு நம் சித்தர் பெருமான் இடது பக்கத்தில் அமா்ந்து சிவ சிந்தனையில் இருக்க, மாலிக்காபூர் அவரை கடக்கும் பட்சத்தில் அவனை நோக்கி இந்தக் கோவிலை இடிக்க வந்தாயோ என வினவ, அவன் சொல்வதறியாது திகைத்து நிற்க, இங்கு கல் யானை கரும்பு திங்கும் எனக் கூறுகிறார்.

கல் யானை கரும்பு தின்றால் கோவிலை ஒன்றும் செய்யாமல் இங்கிருந்து அகன்று விடுவாதாக கூறிக் கரும்புக் கட்டுகளை கொண்டு வருமாறு ஆணை பிறப்பிக்கிறான்.

கரும்புக் கட்டுகளைச் சிவலிங்கத்தை தாங்கிக் கொண்டு இருக்கும் கல் யானையிடம் கொணரும்படி நம் சித்தர் பெருமான் கட்டளை இடுகிறார். கரும்புக் கட்டுகளில் இருந்து கரும்பு எடுத்து நீட்ட கரும்பினை யானை தன் தும்பிக்கையை நீட்டிப் பெற்று தன் வாயில் இட்டு உண்கிறது.

கரும்பு கட்டுகள் முடியும் பட்சத்தில் நம் சித்தர் பெருமான் சித்தர் பிடத்தில் உள் சென்று விடுகிறார். மாலிக்காபூர் தன் மனதால் உணர்ந்து கடவுள் இங்கு இருக்கிறார் கோவிலை ஒன்றும் செய்வதற்கல்லை என உறுதியளித்தார் என்று மீனாட்சி அம்மன் கோவில் லல்லப சித்தர் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டு இருக்கிறது.


இப்படி இறைவனே எல்லாம் வல்ல சித்தராக (இவரை சுந்தரானந்தர் என்றும் அழைப்பர்) அவதரித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீற்றிருந்து என்ன வேண்டினாலும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டவர்கள் சித்தருக்கு பூக்கூடாரம் அமைத்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.

Home Previous                                                                Next

No comments:

Post a Comment