“ யார் நீ? ”
“ எங்கிருந்து நீ வருகிறாய்? ”
“ எப்படி இங்கு வந்தாய்? ”
என்று ஆளாளுக்கு அவரிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டனர். இராமதேவர் அவர்களுக்கு பதில் கூற முயன்றும் அவரது பதிலை காது கொடுத்துக் கேட்போர் யாருமில்லை. அவர்கள் ஆக்ரோஷத்துடன் அவரைக் கொல்ல நெருங்கினர். அவர்களில் ஒரு புத்திசாலி இருந்தான். அவனால் இராமதேவர் உயிர் பிழைத்தார்.
இதுபற்றி போகர் 7000 – இல்,
யூகியாம் மதிமந்திரி யோகவானாம்
உத்தமனார் அங்கொருவர் தான் இருந்தார்
யோகியாம் சின்மயத்தில் சேர்ந்த சித்து
ஒளிவான ரிஷி ஒருவர் அங்கிருந்தார்
என்று கூறப்பெற்றுள்ளது. மேலும் அரேபியர்கள் அவரிடம், ”நீ ஏன் தீன் தேசத்துக்கு வந்தாய்? உன்னைத் தண்டிக்காமல் விடமாட்டோம்” என்று கத்தினர். இதுபற்றி…..
போனாரோ மலைநாடு குகை கடந்து
பொங்கமுடன் நபிதனையே காணவென்று
காணாறு பாதைவழி செல்லும் போது
கருங்காளை நபிக்கூட்டம் மிகவாய்க் கண்டு
மானான மகதேவர் பதியிலப்பா
மார்க்கமுடன் வந்ததனால் உந்தமக்கு
தீனான தீன்பதியில் உந்தனைத் தான்
திட்டமுடன் சபித்திடுவோம் என்றிட்டாரே.- 5800
என்று போகர் 7000 – இல் 5800 – ஆவது பாடலில் கூறப்பெற்றுள்ளது மேலும்,
என்றவுடன் இராமதேவர் தாள் பணிந்து
எழிலான வார்த்தையது கூறும்போது
சென்றதுமே யாகோபு என்று கூறி
சிறப்புடனே சுன்னத்து செய்துமல்லோ
தின்றிடவே ரொட்டியது தானும் ஈந்து
சிறப்புடனே அசன் உசேன் என்று கூறி
வென்றிடவே உபதேச பிரணவத்தை
விருப்பமுடன் மலுங்குமார் ஓதினாரே.- 5801
ஓதவே நபிநாயகர் கூட்டத்தார்கள்
உத்தமர்கள் மனம்போலே மனதுவந்து
நீதமுடன் மக்கபுரி கோட்டைக் குள்ளே
நிஷ்களங்க பக்கிரி யாகோபு தன்னை
கோதமுடன் கொண்டு சென்றார் அரண்மனைக்குள்
கேறாமல் கொத்துபா ஓதினார்கள்
வீதமது பயனறிந்த சித்து தாமும்
விடுபட்டு வந்ததொரு யாகோபாச்சே - 5802
என்று போகர் 7000 – இல் கூறுப்பட்டுள்ளது. அதாவது ”உன்னைத் தண்டிக்காது விடமாட்டோம்” என்று அரேபியர் கத்தினார். உடனே இராமதேவர் அவர்களின் தாள் பணிந்து மிகவும் நயமான வார்த்தைகளால் வேண்டிக் கொண்டார். உடனே அவர்கள் இராமதேவரிடம், ”அப்படியானால் நீ எங்களின் மதத்தில் சேர்ந்துவிடு” என உரைத்து, ”இன்று முதற்கொண்டு உனது பெயர் யாகோபு” என்று பெயர் சூட்டி அந்நாட்டு வழக்கப்படி அவருக்குச் சுன்னத்தும் செய்து வைத்தனர். பின் அவர் உண்பதற்க்கு ரொட்டியும் கொடுத்து உபதேசமும் செய்து வைத்தனர்.
அன்றிலிருந்து யாகோபு எனப் பெயரிடப்பட்ட இராமதேவர், அவர்கள் மனம்போல் நடந்து கொண்டார். பின் அவரை அரேபியர்கள் மக்கா நகரத்துக் கோட்டையுள் இருந்த அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தங்கள் மறை நூலாகிய குரானை ஓதுவித்தார்கள். யாகோபுவும் அனைத்தையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்து அவர்களது நம்பிக்கைக்கு உரியவரானார்.
வெகு விரைவிலேயே மெக்கா நகர மக்கள் யாகோபுவைத் தம்முள் ஒருவராக ஏற்றுக கொண்டனர். அவரும் அரேபி மொழியில் பேசிப் பழகினார். அவர்களது நோய்களையும் போக்கியருளினார். அவர்களுக்குள் உண்டான வழக்குகளைச் சிக்கல் ஏதுமின்றித் தீர்த்து வைத்தார்.
காலப்போக்கில் யாகோபுக்கு சீடர்கள் பலர் சேர்ந்தனர். தன் சீடர்கள் மூலமாய் அரபு நாட்டிலிருந்து அரிய மூலிகைகளைக் கொண்டுவரச் செய்த யாகோபு அவற்றின் தன்மைகளை ஆராய்ந்தறிந்தார். கற்ப மூலிகைகளின் திறனை சோதித்தறிய தாம் சாமதியில் இருக்க விரும்பிய யாகோபு தம் விருப்பத்தைச் சீடர்களிடம் கூறினார். அவர்களிடம் யாகோபு, ”நான் சமாதியில் அமர்வேன். பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர் பெற்றெழுவேன்” என்றார். ”இது எப்படி சாத்தியம்?” என்று வியந்த சீடர்கள் அவரது கூற்றை நம்ப முடியாது தவித்தனர். ஆனாலும் தம் குருநாதருடைய வாக்கை அவர்கள் மீறவில்லை.
யாகோபு சமாதி நிலை கொள்வதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டு குழி தோண்டப்பட்டது. அக்குழிக்குள் நான்கு புறமும் சுவர்களும் எழுப்பப்பட்டன. சமாதிக்குள் இறங்கிய யாகோபு தன் சீடர்களிடம் கூறியதாக பின்வரும் பாடல் விளக்குகிறது.
இறங்கியே சமாதிதனில் இருந்துகொண்டு
எழிலாகச் சீடனுக்கு அதிகம் சொல்வார்
சுரங்கம் என்ற குழிதனிலே போறேன் அப்பா
சுருதிபொருள் கருவி கரணாதி எல்லாம்
அரங்கமுடன் உள்ளடக்கி மனதிருத்தி
வையகத்தின் வாழ்க்கை எனும் தளை அகற்றி
உரங்களுடன் பத்தாண்டு இருப்பேன் என்று
உத்தமனார் யாகோபு கூறினாரே. -போகர் 7000 – 3872
சமாதிக்குள் இறங்கிய யாகோபு தன் சீடனிடம், “பத்தாண்டு காலத்துக்கு நான் சமாதியில் இருப்பேன். பின் வெளியே வருவேன். அவ்வாறு நான் சமாதியில் இருந்து வெளிவரும்போது அற்புதங்கள் பல நிகழ்ந்திடும். பின் தேன்மாரி பொழியும். நறுமண மலர்கள் பூத்துக் குலுங்கி வாசனையப் பரப்பும். விலங்குகளும் ஞானம் பேசும். இம்மாதிரியான அடையாளங்களைக் கொண்டு நான் சமாதியில் இருந்து வெளிவரும் நாளை நீ உணர்ந்திடலாம்” என்று கூறியதுடன் அச்சமாதியை மூடிவிடுமாறும் கூறினார்.
ஆண்டுகள் பத்தும் கழிந்தன. யாகோபு உரைத்தது போன்றே அவர் சமாதியிலிருந்து மீண்டு வந்தார். தனது சீடன் சமாதி அருகிலேயே தனக்காகக் காத்திருந்தது கண்டு மனம் மகிழ்ந்தார். அவனுக்கு உபதேசங்கள் பலவற்றை உரைத்தருளினார். யாகோபு தான் சமாதிக்குள் சென்ற பின் நடந்தது என்ன என்று தனது சீடனிடம் கேட்டபோது அவன், “குருதேவ! தாங்கள் சமாதிக்குள் சென்ற பிறகு பெருங்கூட்டம் கூடியது. யாகோபு சாமாதிக்குப் போய்விட்டார். இனி அவர் திரும்பவே மாட்டார். அவரது உடல் மண்ணோடு மண்ணாய்ப் போகும் ” என்று மிகவும் கேவலமாகப் பேசினர்.
இந்நிகழ்வு பற்றி போகர் 7000 – இல்,
கூச்சலுடன் வெகு மாண்பர் கும்பல் கூடி
குவலயத்தில் வேகமுடன் வார்த்தை சொன்னார்
ஏச்சாகக் கூறினதோர் மொழிகட்கு எல்லாம்
எதிராக யான் ஒன்றும் பேசேன் பாரே -3886
பாரேதான் வெகுகாலம் சமாதி பக்கம்
பாரினிலே வருவாரும் போவாரும் உண்டு
நேரேதான் அவர்களிடம் வார்த்தை பேசேன்
நேர்மையுடன் சமாதியிடம் பள்ளி கொள்வேன்
கூரேதான் சமாதியிடம் இருந்து கொண்டு
கொப்பெனவே தேவர் வரும் காலம் மட்டும்
ஊரேதான் போகாமல் காத்திருந்து
உறுதியுடன் சேவையது கண்டிட்டேனே. - 3887
அதாவது சீடன் யாகோபுவிடம், “பல பேர் பலவிதமாகக் கூச்சலிட்டுப் பேசினர். நான் எதனையும் காதில் கேட்டுக் கொள்ளாதிருந்தேன். தங்களது சமாதிக்கு அருகிலேயே படுத்து உறங்கினேன். இரவும் பகலும் சமாதிக்குக் காவலாய் இருந்தேன். ஒருமுறை கூட நான் எனது ஊருக்குப் போகவே இல்லை” என்றான்.
சீடன் உரைத்தது கேட்ட யாகோபு, அவருக்கு என்ன பதில் கூறினார்?
தொடரும்,,,,,.........
தொடரும்,,,,,.........
No comments:
Post a Comment