சீடன் உரைத்தது
கேட்ட யாகோபு, “சீடனே! அவர்கள் பேசியதில் தவறு ஏதுமில்லை. இந்த மானிட
தேகம் நிலையற்றது. காயகற்பம் உண்டு காயத்தைச் சித்தி செய்து நான்கு
யுகங்கள் வாழ்ந்தாலும், பின் ஒரு நாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாய்த்தான்
போகும். நான் மீண்டும் சமாதியில் இருக்க விரும்புகிறேன்.
இம்முறை
முப்பது வருடங்கள் கழிந்த பின்னரே நான் வருவன், நான் சமாதிக்குச் சென்ற
பின் என்னைப் பற்றித் தவறாகப் பேசியோருக்குக் கண் பார்வை பறிபோய்விடும்!”
எனவுரைத்துவிட்டு மீண்டும் சமாதிக்குள் இறங்கிவிட்டார்.
இம்முறை
சமாதியின் மீது பாறாங்கல் கொண்டு மூடப்பட்டது. சமாதியைப் பார்க்க
வந்தவர்கள், “அடப் பாவமே! இனி யாகோபு திரும்பி வருவது இயலாது” என்று
ஏளனமாகப் பேசியதுமே அவர்கள் பார்வை பறிபோனது. அதுமட்டுமல்லாது.
குருடராய் போனவர்கள் சிலது மாண்பர்
குவலயத்தில் அழிந்தவர்கள் சிலது மாண்பர்
திருடராய் ஒளித்தவர்கள் சிலது மாண்பர்
தீர்க்கமாய் வாய்குளறிச் சிலது மாண்பர் - 3901
என்று போகர் 7000 – இல் கூறப்பட்டுள்ளது.
பார்வை
பறிபோனதுமே, “ஐயகோ! இவ்வாறு பார்வை பறிபோய்விட்டதோ!” என்று அடித்துக்
கொண்டார்கள் ‘வாய்க் கொழுப்பினால் வந்த வினை இனி தீருமோ?’ என்று
கதறியழுதனர்.
முன்நின்று யாகோபு வருவதெப்போ
மூவுலகில் சாபமது தவிர்ப்பதெப்போ
மன்னரவர் மாண்பர்களின் வினையைநீக்கி
மானிலத்தில் வரம்கொடுக்கும் காலம் எப்போ.- 3902
என்று அழுது புலம்பியவாறு காத்துக் கிடந்தனர். ஆண்டுகள் பல உருண்டோடின. இதனிடையே மாண்டவர்கள் பலர். உயிருடன் இருந்தவர்கள் பலர்.
கோடியாம் சிலபேர்கள் ஞானவான்கள்
குவலயத்தில் வெகுநாளாய்ப் பேருண்டாக
நாடியே சமாதியிடம் கிட்டிருந்து
நாதாந்தப் பேரொளிவின் சாமாதி முன்னே
வாடியே காத்திருந்த சீடர் தாமும்
வன்மையுடன் உபதசம் பெற்றார் தானே.
யாகோபு உரைத்தபடி சமாதியின் அருகேயே முப்பது ஆண்டுகள் சீடர்கள் காத்திருந்தனர். பின் சமாதியிலிருந்து யாகோபு வெளிவந்த்தும் அவரது தரிசனம் பெற்றனர். ஜோதி வடிவாய் வெளிவந்த யாகோபு தம் சீடர்களது குறைகளைப் போக்கியருளினார். ஆனால் அவருக்கு மெக்கா நகரத்து வாழ்க்கை அலுத்துப் போனது. ஜீவன்முக்தி அடைய தான் தமிழகத்திற்குத் திரும்பிச் சென்றிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது. சிறிது காலம் தம் சீடர்களுடன் தங்கிய யாகோபு அவர்களுக்கு வேண்டிய நல்லுபதேசங்களைச் செய்தருளினார். பின் அவர் தன் சீடர்களிடம், “நான் மீண்டும் சமாதிக்குச் செல்கிறேன். இனி நான் திரும்பமாட்டேன்” என்றுரைத்தருளினார்.
யாகோபு உரைத்ததைக் கேட்டு அவரது சீடர்கள் திடுக்கிட்டனர். அவரைப் பணிந்து தொழுது அழுதனர். ‘அவர் மீண்டும் சமாதிக்குச் செல்லக் கூடாது. தங்களுடனே இருக்க வேண்டும்.’ என்று மன்றாடினர். ஆனால் அவர்களிடம் யாகோபு, “அட மூடர்களே! அவ்வாறே நான் இருந்தாலும் நான் இருக்கும் காலம் வரையில் என்னுடனேயே நீங்களும் இருக்க இயலுமா? பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். இந்த உடம்புதான் அழியுமே தவிர ஆன்மா ஒருபோதும் அழியக்கூடியதல்ல. எனவே நீங்கள் வருந்த வேண்டாம். நான் என்றும் உங்களுடனேயே இருப்பதாக எண்ணுங்கள்” என்று கூறிவிட்டு விடைபெற்று மீண்டும் சமாதிக்குள் புகுந்தார்.
யாகோபு மெக்காவில் சமாதி கொண்டதாக சிலர் கூறுவர். ஆனால் அவர் சமாதியுள் இருந்து வெளிப்பட்டுத் தமிழகம் வந்தவுடன் சதுரகிரியில் சிறிது காலம் தங்கியிருந்தார். தாம் மெக்காவில் இருந்தபோது அரபி மொழியில் எழுதிய மருத்துவ நூல்களைத் தமிழில் இயற்றினார். பின் சதுரகிரி வனத்தில் சிலகாலம் தங்கிய யாகோபு என்ற இராமதேவர் பின் அழகர் மலைக்கு வந்து அங்கேயே சமாதி அடைந்தருளினார்.
தமிழகத்திற்கு வந்து தம் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்ததுமே அவர் மீண்டும் இராமதேவராகவே மாறினார் என்றும், அதனாலேயே அவர் அழகர்மலையில் சமாதியடைந்தார் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment